வெள்ளி, 27 டிசம்பர், 2019

கிரகணத்தின்போது உலக்கை நிற்பது எப்படி?
இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
நாளைக்கு எழும் கேள்விக்கு இன்றே பதில்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
சூரிய கிரகணத்தின்போது, தமிழகத்தின்
ஒரு சிற்றூரில் உலக்கையைத் தரையில் செங்குத்தாக
ஊர்மக்கள் நிறுத்தி உள்ளனர். உலக்கை செங்குத்தாக
நின்றுள்ளது.

உலக்கை செங்குத்தாக நிற்பதில் எந்த ஆச்சரியமும்
இல்லை. இந்தக் கட்டுரையை எழுதும் முன், என் மேசை
மீது ஒரு பென்சிலை செங்குத்தாக நிறுத்தி வைத்துள்ளேன்.

கிரகண நேரத்திலும் கிரகணம் அல்லாத நேரத்திலும்
உலக்கை செங்குத்தாக நிற்கும். பென்சிலும்
செங்குத்தாக நிற்கும். அவற்றின் புவியீர்ப்பு விசை மையம்
(centre of gravity) சார்ந்த விஷயம் இது. இதற்கு கிரகணம்
.காரணம் அல்ல.

கயிற்றின் மீது நடக்கும் சிறுவர் சிறுமியரை
நம்மில் பலரும் பார்த்து வியந்திருக்கக் கூடும்.
கயிற்றின் மீது நடப்பதை விடவா, உலக்கை செங்குத்தாக
நிற்பது  வியப்பைத் தருகிறது?

கிரகணம் ஆரம்பிக்கும்போது செங்குத்தாக நிறுத்தப்பட்ட
உலக்கை, சரியாக கிரகணம் முடிந்ததும் விழுந்து
விட்டதாக செய்தி தெரிவிக்கிறது.

கிரகணத்தின்போது சந்திரனின் ஈர்ப்புச் சக்தி மிக
அதிகமாக இருப்பதாலேயே உலக்கை நிற்பதாகவும்,
கிரகணம் முடிந்ததும் ஈர்ப்புச் சக்தி குறைந்து
விடுவதால் உலக்கை விழுந்து விடுவதாகவும் சிலர்
கூறி வருகின்றனர்.

கிரகணங்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில்
மட்டுமே  ஏற்படும். சூரிய கிரகணம் எப்போதுமே
அமாவாசையின்போது நிகழும். அது போல சந்திர
கிரகணம் பௌர்ணமியின்போது நிகழும்.

ஜூன் 21 அன்று நிகழ்ந்த வளையம் போன்ற சூரிய
கிரகணம் அமாவாசையன்று நிகழ்ந்தது.
அமாவாசையன்று கடல் அலைகளின் ஏற்ற இறக்கம்
வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை
அறிவியல் முன்பே கூறியுள்ளது.

உலக்கை விழுந்ததற்கு கிரகணமே காரணம் என்று
கூறும்  அன்பர்கள், அது அமாவாசையால் நிகழவில்லை
என்பதை நிரூபிக்க வேண்டும்.

வளையம் போன்ற சூரிய கிரகணத்தின்போது, சந்திரன்
வழக்கத்தை விட பூமிக்கு மிகவும் அப்பால் இருக்கிறது.
அதாவது சேய்மைப்புள்ளி (apogee) அதிகமாக உள்ளது.
சேய்மைப்புள்ளி அதிகமாக இருக்கும்போது, பூமியின் மீதான
சந்திரனின்  ஈர்ப்புச் சக்தி கூடுதலாக இருக்குமா அல்லது
குறைவாக இருக்குமா?

தூரம் அதிகமாக ஆக, ஈர்ப்பு குறைந்து விடும் என்பதுதானே
நியூட்டனின் விதி (inverse square law)!

நிற்க. கிரகணம் முடிந்த உடன் உலக்கை விழுவது தமிழரின்
பண்டைய வானியல் அறிவுக்கான சான்று என்று பலரும்
கூறுகின்றனர்.

1) உலக்கை செங்குத்தாக நிற்பது இயல்பே.
இது புவியீர்ப்புவிசையின் மையம் எங்கு அமைகிறது
என்பதைப் பொறுத்தது. எனவே உலக்கை  நிற்பது
இயற்பியலின் விதிப்படியே.

2) கிரகணம் முடிந்ததும் உலக்கை விழுந்து விடுகிறது.
கிரகணத்தின்போது செயல்பட்ட அதிகப்படியான
ஈர்ப்பு விசை, கிரகணம் முடிந்ததும் நின்று விடுகிறது
என்று கூறுகிறார்கள். இது தமிழரின் பண்டைய
வானியல் அறிவு என்றும் கூறுகிறார்கள்.
கிரகணத்தின்போது  பூமியின் மீதான ஈர்ப்புவிசை
எவ்விதத்திலும் அதிகரிக்கவில்லை என்று இதுவரை
கிடைத்துள்ள தரவுகள் கூறுகின்றன. இதுதான் பதில்!
*********************************************************


 
       


        



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக