ஞாயிறு, 1 டிசம்பர், 2019

ரோஜா என்றால் முள் இருக்கத்தான் செய்யும்!
அதற்காக ரோஜாவை யாரும் சூடாமல் இருப்பதில்லை!
VRS விருப்பத்தை வாபஸ் பெற்றால் சிக்கல் வருமா?
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
-------------------------------------------------------------------------
BSNL விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சில குறைகள் இருக்கத்தான்
செய்கின்றன. அவை ரோஜாவில் உள்ள முட்களைப்
போன்றவை. முள் இருக்கிறது என்பதால் பெண்கள்
கூந்தலில் ரோஜாவைச் சூடாமல் இருக்கிறார்களா?

ஒய்வு பெற்ற ஒரு ஊழியர் ஓராண்டுக்குள் commutationக்கு
விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி. ஓராண்டு
கழிந்த பிறகும் விண்ணப்பிக்கலாம். ஆனால் மருத்துவச்
சான்றிதழின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

50 வயதான ஒருவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்று
வைத்துக் கொள்வோம். BSNL VRS 2019 விதிகளின்படி,
60 வயதுக்குப் பின்னரே அவர் commutationக்கு
விண்ணப்பிக்க முடியும். அதாவது இன்னும் 10 ஆண்டு
கழித்து 2030ல்தான் விண்ணப்பிக்க முடியும். இதுதான்
ரோஜாவில் உள்ள முள்!

இதற்கு எளிதாகத் தீர்வு காண இயலும். விருப்ப ஓய்வில்
செல்வோர் தற்போதைய விதிகளின்படி ஓராண்டுக்குள்
commutationக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஆனால்
அவர்களின் விண்ணப்பங்களை, அவர்களுக்கு  60 வயது
நிரம்பிய பின்னரே பரிசீலிக்க வேண்டும் என்றும்
ஓய்வூதியத் துறையிடம் (Dept of Personnel and Training) ஓர்
ஒப்பந்தம் செய்து கொண்டாலே போதும். இது
ஒன்றும் விடுவிக்க முடியாத கணிதப் புதிர் அல்ல.
   .
அத்தைக்கு மீசை முளைத்தால்!
-------------------------------------------------
அடுத்து 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் (wage revision)
ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு BSNLல் உள்ளது.
அப்படி ஊதிய மாற்றம் ஏற்பட்டு, புதிய ஊதியம்
நிர்ணயிக்கப்படு கிறது என்று கருதுவோம். புதிய ஊதியம்
(Revised pay) என்பது முன்பை விட அதிகரித்த ஊதியம்.
இதில் பாதி Basic Pensionஆக ஆக்கப்பட்டால் அது Pension Revision
எனப்படும். விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு இந்த
Pension Revision கிடைக்குமா என்பது சிலரின் ஐயம்.

இதெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
என்பது போன்ற விவகாரம். VRS திட்டத்தின் மீது
ஆயிரம் சந்தேகங்களை எழுப்புவோர், ஊதிய மாற்றம்
01.01.2017 முதல் உறுதியாக நடைபெறும் என்று எப்படி
நம்புகின்றனர்?

ஊதிய மாற்றம் நடக்கும். இது உறுதி. ஆனால் 2017 முதல்
(01.01.2017) நடக்கும் என்று நம்புவது பேதைமை.
இது கடவுள் இருக்கிறார் என்று நம்பும் பேதைமையை
விடப் பெரும் பேதைமை!

மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?
---------------------------------------------------------------------------------
"நலிவுற்ற நிறுவனம் என்பது ஒரு ஸ்ட்ரோக் வந்த
இதய நோயாளி போன்றது. ஸ்ட்ரோக் வந்து பைபாஸ் செய்த
பிறகு, முன்பிருந்த இயல்பு வாழ்க்கை சாத்தியமில்லை.
புத்தாக்கத்தின் மூலம் இப்போதுதான் BSNLஐத் தூக்கி
நிறுத்தி இருக்கிறோம். எனவே ஊதிய மாற்றத்தை
2017 முதல் தர இயலாது. 2021 முதல் தருகிறோம்" என்று
நிர்வாகம் கூறினால் என்ன ஆகும்? அப்படிச் சொல்லாது
என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அப்போது VRSல் சென்றவர்களுக்கு Pay Revision என்பது
இல்லை என்று ஆகிவிடும். Pay Revision இல்லாதபோது
Pension revision என்ற கோரிக்கை எழுவதற்கு இடமில்லை.
இப்படி hypothetical கோரிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டு
VRS பற்றி குழப்பத்தை உருவாக்குகிறார்கள்.    

VRSன் எதிர்ப்பாளர்களும் VRS குறித்து அனுதினமும்
ஆயிரம் ஐயங்களை எழுப்பும் சந்தேக தாமஸ்களும்
(Doubting Thomas) என்ன சொல்கிறார்கள்? Commutation
அடிபட்டுப் போகும்; Pension revision அடிபட்டுப் போகும்
என்று இந்த இரண்டையும்தான் VRS க்கு எதிரான
துருப்புச் சீட்டாக இறக்குகிறார்கள்.
"போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"
என்கிறார்கள்.

VRSஐ உதறித் தள்ளுவதற்கு இது நியாயமான
காரணம் அல்ல. மூட்டைப் பூச்சி இருப்பது உண்மைதான்!
அதற்காக வீட்டைக் கொளுத்த வேண்டுமா?
Commutation and Pension revision are blown out of proportion.

மதிப்பிடுவது எப்படி?
------------------------------------
VRSல் மட்டுமல்ல, எந்த ஒரு திட்டத்திலும் நிறை குறைகள்
உண்டு. 100 சதம் பரிபூரணமானது என்று இந்த உலகில்
எதுவும் கிடையாது. சீனத்தில் "யின் யாங் தியரி" (Yin Yang theory)
என்று ஒரு தத்துவம் உண்டு. 100 சதம் நன்மை என்பதில்
கொஞ்சம் தீமையும் கலந்திருக்கும் என்றும், 100 சதம்
தீமை என்பதில் கொஞ்சம் நன்மையும் கலந்திருக்கும்
என்றும் "யின்-யாங் தியரி" கூறுகிறது.

எனவே VRSஐ மதிப்பிடுவது எப்படி? அதற்கான
அளவுகோல் உள்ளதா? வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள்!

1) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

2) நன்மையையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையால் ஆளப் படும்.

எனவே வள்ளுவர் வழியில் VRSஐ ஏற்றுக் கொண்டு, அதன்
குறைகளைக் களையப் போராடுவதே சரியான ஒரு
சங்கத்தின் செயலாக இருக்க முடியும்.

ஆனால் BSNLல் என்ன நடக்கிறது?  VRSல் உள்ள ஏதேனும்
ஒரு குறையைச் சுட்டிக் காட்டி விட்டு, அதைக் களைய
எந்த முயற்சியும் எடுக்காமல், பொந்துக்குள் பதுங்கிக்
கொள்கின்றனர் சிலர். வேறு சிலரோ "VRSல் போகாதே;
போனால் குஷ்டம் வரும்" என்று பயமுறுத்துகின்றனர்.
ஒரு தொழிற்சங்கம் எப்படிச் செயல்படக் கூடாது
என்பதற்கு இது உதாரணம்; ஓர் எதிர்மறை உதாரணம்.

VRS விருப்பத்தை வாபஸ் பெறுதல்!
-------------------------------------------------------
VRSக்கு விருப்பம் தெரிவித்த எவர் ஒருவருக்கும் அதை
வாபஸ் பெற முழு உரிமை உண்டு. ஆனால் வாபஸ்
பெறுவது அவர்களின் சொந்த முடிவாக இருக்க வேண்டும்.
Vested interests will play mischievous role. சுயநல சக்திகளின்
முடிவை தங்களின் மூளையில் திணிக்க இடம் தரக்கூடாது.

BSNLல் எந்த ஒரு சங்கமும் VRSஐ எதிர்க்கவில்லை.
VRSல் செல்லக் கூடாது என்று எந்த சங்கமும் கட்டளை
இடவில்லை. "VRSல் போகாமல் இருங்கள்; உங்களின்
நலனை நாங்கள் பாதுகாக்கிறோம்" என்று எந்தச்
சங்கமும் உறுதிமொழி அளிக்கவில்லை. இந்நிலையில்
விருப்பம் தெரிவித்த பிறகு வாபஸ் பெறுபவர்கள்
எதிர்காலத்தில் கடும் உளவியல் சிக்கல்களை
எதிர்கொள்ள நேரிடலாம். 80,000 பேருடன் சேர்ந்து
வெளியேறாமல் தனிமைப் பட்டு விட்டோமே என்று
பின்னாளில் வருந்துவதற்கு இடம் தரக் கூடாது.

உங்களை வாபஸ் வாங்கச் சொல்பவர்கள் நாளைக்கு
ஏதேனும் சிக்கல் வந்தால் பொறுப்பு ஏற்பார்களா?
இன்று உள்ள செல்வாக்கு அவர்களுக்கு நாளை இருக்குமா?
ஏதேனும் accountability அவர்களுக்கு உண்டா? எனவே
ஆழ்ந்து சிந்தித்து சொந்த முடிவை எடுங்கள்.  

ஹாம்லெட்டின் ஊசலாட்டம்!
--------------------------------------------
ஆகப்பெரிய விஷயமான VRS பற்றி  ஊழியர்களும்
அதிகாரிகளும் தாங்களே சொந்தமாக முடிவு எடுத்தார்கள்.
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் (Hamlet) நாடகத்தில்,
கதாநாயகன் ஹாம்லெட் (டென்மார்க் இளவரசன்)
"To be or not to be" (இருப்பதா, இறப்பதா?) என்று
ஊசலாடியதைப் போல BSNLல் எவரும் ஊசலாடவில்லை.

தொழிற்சங்கத்தின் தயவை ஒருவரும் நாடவில்லை.
சங்கத்தை சீந்தக்கூட இல்லை.Today members are wiser than leaders!
BSNL VRSல் TINA factor (TINA = There Is No Alternative)
செயல்படுவதை அவர்கள் நன்கறிந்தவர்கள்.

சங்கத்தை மலையாக நம்பி இருந்த காலம் முடிந்து
விட்டது. சங்கக் கூட்டத்துக்குச் சென்று தலைவரின்
வீராவேசப் பேச்சைக் கேட்டு தெளிவு பெற்றதெல்லாம்
பழங்கதை ஆனது. ஒவ்வொரு தொழிலாளியும் VRSல்
செல்ல வேண்டும் என்று சொந்த முடிவு எடுத்தான்.
"தொழிலாளி வர்க்கம் தன் சொந்த அனுபவம் மூலமாகவே
பாடம் பெறும்" என்றார் லெனின். அது மெய்ப்பட்டது.

ஒட்டு மொத்த VRS விவகாரமும் இடதுசாரிச் சங்கங்களின்
சித்தாந்த ஓட்டாண்டித் தனத்தை வெளிப்படுத்தி விட்டது.
சங்கங்களின் தலைமை சிந்தனைக் குள்ளர்களால் ஆனது
என்ற உண்மை நிர்வாணமாக வெளிப்பட்டு விட்டது.

ஆளுக்கு ஒரு சங்கம் எதற்கு?
---------------------------------------------
BSNLல் தற்போது ஊழியர்களும் அதிகாரிகளும் சேர்ந்து
மொத்தம் 1.6 லட்சம் பேர் உள்ளனர். இதில் ஒரு லட்சம்
பேர் VRSல் போன பிறகு மீதி 60,000 பேர் மட்டுமே இருப்பர்.

NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA ஆகிய நான்கு பிரதான 
சங்கங்களும் பல்லாயிரக் கணக்கில் உறுப்பினர்களை
இழக்கும். இந்நிலையில் தனி நபர்களின் பதவி ஆசைக்குத்
தீனியாக  உருவான இத்தனை சங்கங்கள் எதற்கு?

எல்லாச் சங்கங்களும் ஒரே சங்கமாக ஐக்கியமாக வேண்டும்.
NFTE, BSNLEU ஆகிய இரண்டு இடதுசாரிச் சங்கங்களும்
ஒரே சங்கத்தில் ஒன்றிணைய வேண்டும்.

புதிய சூழலில் Direct recruits சங்கங்களே ஊழியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆற்றல் பெறுவார்கள்.
IMPCS போன்ற உயர் தொழில்நுட்பப் பகுதிகளில் வேலை
செய்ய வல்ல  பொறியாளர்களின் சங்கங்களையே
நிர்வாகமும் இனி அரவணைக்கும். ஏனெனில் வேலை
நடப்பதற்கு நிர்வாகம் அவர்களையே சார்ந்திருக்கும்.

இதுவரை தலைமைப் பாத்திரம் வகித்து வந்தவை
Non executive மற்றும் Promotee officerகளின் சங்கங்களே.
இவர்களின் Numerical strength, militancy, சங்கங்களின்
lumpen cadres மீதான பயம் ஆகிய காரணங்களால்
இவை pilot roleஐ மேற்கொண்டன. இனி இதற்கு வழியில்லை.
தலைமை இடத்தை இதுவரை passive roleஐ மேற்கொண்ட
direct recruitsகளின் சங்கங்கள் பிடித்து விடுகின்றன..      

BSNLன் சுக துக்கங்களை நிர்ணயித்த குப்தா!
----------------------------------------------------------------------
குப்தா வாழ்ந்த காலம் BSNLன் பொற்காலம். நவீன மயம்,
கேடர் சீரமைப்பு, பொதுத்துறை மாற்றம், தனியார் மயம்
தடுப்பு, அரசு பென்ஷன், 37A ஷரத்து என்று அனைத்தையும்
சாதித்துக் காட்டியவர் குப்தா. சாதனைகளின் நாயகன் அவர்.

ஒருவரின் சம்பாத்தியத்தில் மொத்தக் குடும்பமும்
உட்கார்ந்து சாப்பிட்டதைப் போல, குப்தாவின்
ஆளுமை அறிவாற்றலால் அனைவரும் ஜீவித்தனர்.
BSNLம் பூத்துக் காய்த்து குலை தள்ளியது.

ஆனால் இன்று குப்தாவின் இல்லாமை திசையெங்கும்
உணரப் படுகிறது. BSNLல் குப்தாவுக்கு நிகரான, அவரின்
உயரத்தில் பாதியையேனும் நெருங்கக்கூடிய எவரும்
இன்று இல்லை. தோழர் பிளக்கானவ் கூறிய, வரலாற்றில்
தனி நபர் வகிக்கும் பாத்திரத்துக்கு தலைசிறந்த
உதாரணமாக குப்தா வாழ்ந்து மறைந்தார்.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் குப்தா இல்லையே
என்று எல்லோரையும் ஏங்க வைத்தார். தீர்வுகளின்
மந்திரச் சாவியை தம் கரங்களில் வைத்திருந்தார்.
BSNLன் சுக துக்கங்களை நிர்ணயித்த குப்தாவை   .
BSNLல் இருந்து விடைபெறும் இத்தருணத்தில் நாம்
நன்றியுடன் நினைவு கூர்வோம்!

கோடானு கோடி நாமம்
சூடி நிற்கின்றாய்!
குறை நிறை யாவும்
தாங்கி நிற்கின்றாய்!
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) படத்தில்: தானைத்தலைவர் குப்தாவுடன்
இக்கட்டுரை ஆசிரியர்.

2) இது கட்டுரை அல்ல, கருத்தாயுதம்!
ஏற்கனவே எழுதிய மூன்று கட்டுரைகளையும் படித்திடுக!
*******************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக