புதன், 11 டிசம்பர், 2019

200 என்கவுன்டர்! 500 பேருக்கு NSAவில் சிறை!
2000 பேருக்கு கை கால் முறிப்பு!
காங்கிரசின் சித்தார்த்த சங்கர் ரேயை விஞ்சிய யோகி!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
ரத்தத்தை உறையவைக்கும் ஒரு செய்தியை நேற்று
நான் எழுதினேன். கேட்டவுடனே மூச்சு நின்று போகும்
அளவுக்கான செய்தி அது.

உபியில் யோகி ஆதித்யநாத்தின் அரசு கடந்த
இரண்டாண்டில் 200 என்கவுன்டர் படுகொலைகளைச்
செய்துள்ளது என்பதுதான் அந்தச் செய்தி!

இந்தச் செய்தியை பாஜக தரப்பில் இருந்து எவரும்
மறுக்கவில்லை. சிந்தனையில் குஷ்டரோகம் பீடித்த
குட்டி முதலாளித்துவக் கசடுகளும் மறுக்கவில்லை.

மார்ச் 2017ல் உபி முதல்வராகப் பதவி ஏற்ற யோகி,
நாளது தேதி வரை (2019) 200 பேரை என்கவுன்டர்களில்
படுகொலை செய்துள்ளார். ஒரு மாநிலத்தில் இரண்டே
ஆண்டுகளில் 200 பேர் என்கவுன்டரில் படுகொலை
என்பது இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைக்
காலத்தில் கூட நடைபெற்றதில்லை.

இந்தியாவின் பாசிச முதலமைச்சர்களான சித்தார்த்த
சங்கர் ரே (காங்கிரஸ், மேற்கு வங்கம்), கேரளத்தின்
அச்சுத மேனன்  (CPI), தமிழகத்தின் எம் ஜி ராமச்சந்திர
மேனன் ஆகியோர் கணிசமான என்கவுன்டர்
படுகொலைகளைச் செய்தவர்கள். இது வரலாறு.
இவர்களை எல்லாம் தோற்கடித்து விட்டார் யோகி.

சமகால வரலாற்றில், இன்று ஒவ்வொரு நாளும் நாம்
நம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க,
என்கவுன்டர்களால் பிரபலம் அடைகிறார் யோகி.
டபுள் செஞ்சுரி அடித்து விட்டார். சுனில் கவாஸ்கரின்
உலக சாதனையை (238 not out) விரைவில் விஞ்சுவார்!

எதிர்க் கட்சிகளின் கனத்த மௌனம்!
----------------------------------------------------------
பாஜக ஆளும் மாநிலத்தில் 200 என்கவுன்டர்கள் என்பது
எதிர்க் கட்சிகளுக்கு பாதாம் அல்வா சாப்பிடுவது
மாதிரியான விஷயம்! என்றாலும் இந்த 200
என்கவுன்டர்களும் ஏன் இந்தியாவில் பேசுபொருள்
ஆகவில்லை?

ஏன் நாடாளுமன்றத்தில் இது பேசப்படவில்லை?
நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் எதிர்க் கட்சிகள்
ஏன் முடக்கவில்லை?

மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீதாராம் யெச்சூரி,
கேஜ்ரிவால், சசி தரூர், மு க ஸ்டாலின் போன்ற எதிர்க்
கடசித் தலைவர்கள் இந்த 200 என்கவுன்டர்கள்
என்னும் அச்சுறுத்தும் எண்ணிக்கையை எதிர்த்து
ஏன் ஒன்றுமே செய்யவில்லை? பாஜகவையும்
மோடியையும் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடும்
அற்புதமான இந்த வாய்ப்பை ஏன் எதிர்க் கட்சிகள்
பயன்படுத்தவில்லை? மக்களுக்கு இது பற்றி ஏன்
இவர்கள் ஒன்றுமே தெரிவிக்கவில்லை?

மாயாவதி உபியில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர்.
அவரும் கூட இந்த 200 என்கவுன்டர்களைக்
கண்டிக்கவில்லையே! கனத்த மௌனம் காக்கிறாரே!   

என்கவுன்டர்கள் மட்டுமல்ல. உபியில் 500க்கும்
மேற்பட்டோரை NSA சட்டத்தில் கைது செய்து சிறையில்
அடைத்துள்ளார் யோகி. என்கவுன்டர்களில் உயிர் போகாமல்
ஆனால் காயம் அடைந்து ஊனமுற்றவர்கள் எத்தனை பேர்
என்று தெரியுமா? அது 2000 பேர்.

அப்பட்டமான போலீஸ் ராஜ்யம் என்றால் அது உபியின்
யோகி ராஜ்யம்தான். இருப்பினும் இந்தியா முழுவதும்
பற்றி எரிந்து இருக்க வேண்டிய இந்தப் பிரச்சினை
அப்படியே அமுங்கிப் போனதே ஏன்?

குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் இதற்கு என்ன பதில்
வைத்து இருக்கிறார்கள்?

குற்றவாளிகளின் சொர்க்கமாக உபி!
----------------------------------------------------------
உபி அரசியலைப் புரிந்து கொள்ள
1) இந்தி ஆங்கில ஏடுகளை வாசிக்க வேண்டும். இதற்கு
ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
2) இந்தி ஓரளவுக்கேனும் (reasonable level) தெரிந்திருக்க வேண்டும்.
3) உபிக்குச் சென்றிருக்க வேண்டும். லக்னோ, ஆக்ரா,
வாரணாசி போன்ற ஊர்களுக்காவது சென்று அங்கு சில
நாட்களாவது தங்கி இருக்க வேண்டும். டெல்லியில் இருந்து
காலை 10 மணிக்குப் புறப்பட்டால், மதியச் சாப்பாட்டுக்கு
ஆக்ரா வந்து விடலாம்.
4) உபியில் வாழும் விஷயம் தெரிந்தவர்கள் யாருடனாவது
நமக்கு நட்பும் தொடர்பும் இருக்க வேண்டும்.

இதெல்லாம் இல்லாமல் வெறும் கிணற்றுத் தவளைகளாக
இருந்து கொண்டு, குண்டுச்சட்டியில் கழுதை ஒட்டிக்
கொண்டிருக்கும் குட்டி முதலாளித்துவ ஆசாமிகளால்
உபி அரசியலை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போன
ஒரு மாநிலம் உபி. ஒரு பெண்ணைக் கற்பழிப்பது
தவறு என்றே அங்குள்ள பெரும்பாலான ஆண்களுக்குத்
தெரியாது. சட்டம் எதையெல்லாம் தவறு என்று
சொல்கிறதோ அதையெல்லாம் தவறு என்றே தெரியாமல்
அன்றாடம் செய்து கொண்டிருப்பவர்கள் அங்குள்ள
கிரிமினல்கள்.

கற்பழிப்பை ஆதரிக்கும் முலாயம்சிங் யாதவ்!
----------------------------------------------------------------------
"பையன்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள்;
அவர்கள் கற்பழிக்கத்தான் செய்வார்கள்" என்று கூறியது
யார் தெரியுமா? உபி முதல்வராக இருந்த முலாயம்சிங்
யாதவ்தான். முதல்வரே கற்பழிப்பை நியாயப்
படுத்தும் ஒரு மாநிலத்தில் கிரிமினல்களை போலீசால்
கட்டுப்படுத்த முடியுமா?

யோகி செய்த 200 என்கவுன்டர்களால் உபியில் தற்போது
ஓரளவு (கவனிக்கவும் ஓரளவு) சட்டம் ஒழுங்கு கட்டுக்குள்
வந்துள்ளது. யாதவ்கள், முஸ்லிம்கள், தாக்குர்கள்,
இதர சாதியினர் என்று இந்த 200 என்கவுன்டர்களில்
சாதி ஆதிக்கம் உடைய அத்தனை சாதியினரும்
விதிவிலக்கின்றி சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
யோகி சுட்டுக் கொன்ற யாரும் புத்தரோ வள்ளலாரோ
அல்ல. எல்லாருமே கொடிய hardcore கிரிமினல்கள்.
ஒவ்வொருவர் மீதும் 20, 30 வழக்குகள்  உள்ளன.
(கொலை, ஆள் கடத்தல், கற்பழிப்பு இத்தியாதி)

ஜனவரி 2019க்கும் மே 2019க்கும் இடைப்பட்ட ஐந்து மாத
காலத்தில் கடத்தப்பட்ட 14 பேர் பாதுகாப்புடன் மீட்கப்
பட்டுள்ளனர். கடத்தியவர்கள் அனைவரும் சிறையில்
அடைக்கப் பட்டுள்ளனர். ஆயுதங்கள், வெடி மருந்துகள்,
கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவை கிரிமினல்களிடம்
இருந்து கைப்பற்றப் பட்டுள்ளன.


அனைத்தும் போலி என்கவுன்டர்களே!
----------------------------------------------------------
யோகியின் என்கவுன்டர்கள் அனைத்தும் போலி
என்கவுன்டர்களே. இது நன்கு தெரிந்தும் உபி மக்கள்
முழுமனதுடன் வரவேற்கிறார்கள். இதெல்லாம் இங்குள்ள
புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம் அறியாத செய்தி.

குறிப்பாக யோகியின் என்கவுன்டர்களால் அதிக ஆதாயம்
அடைந்துள்ளவர்கள்  தலித்துகளே. எனவேதான் மாயாவதி
அமைதி காக்கிறார். யாதவ்கள், முஸ்லிம்கள், தாக்குர்கள்
என்று அனைவரும் இழைக்கும் குற்றச் செயல்களால்
அனுதினமும் பாதிப்புக்கு உள்ளாகும் தலித்துகள்
இந்த என்கவுன்டர்களால் ஆறுதல் அடைவது இயல்பே.
எனினும் உபியில் சட்டம் ஒழுங்கு இன்னும் முற்றிலுமாகச்
சீரடையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உன்னாவ் கற்பழிப்பு!
--------------------------------
உன்னாவ் கற்பழிப்பு (Unnav rape case) என்பதை வாசகர்கள்
நுனிப்புல் அளவு அறிவார்கள். இந்த நிகழ்வே இந்த
200 என்கவுண்டர்களுக்கும் போலீஸ் ராஜ்யத்துக்கும்
காரணமாக அமைந்தது.

உன்னாவ் கற்பழிப்பு என்பது  இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு 2017 ஜூன் மாதத்தில் நடந்தது. ஒரு 17 வயது மைனர்
பெண்ணைச் சில கயவர்கள் கூட்டுப் பாலியல்
வல்லுறவுக்கு (gang rape) ஆளாக்கினர். பாதிக்கப்பட்ட
அந்தப் பெண்ணின் புகாரை காவல்துறை ஏற்கவில்லை.
இந்தப் பெண்ணைக் கற்பழித்தவன் குல்தீப்சிங் செங்கர்
என்னும் பாஜக எம் எல் ஏ என்பதால் ஒரு மாதமாக
அலைந்தும் புகார் ஏற்கப் படவில்லை.

எனவே அந்தப் பெண், ஒரு மாதம் கழிந்த நிலையில்,
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன்பு
தீக்குளிக்க முயற்சி செய்தார். இது தேசிய அளவில்
மக்களின் கவனத்தை ஈர்த்தது. யோகியின் அரசுக்கு
மோசமான கெட்ட பெயர் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உபியின் சட்டம் ஒழுங்கைச்
சீர் செய்யும் பொருட்டு யோகி மேற்கொண்ட
நடவடிக்கைகளே இந்த 200 என்கவுன்டர்கள். இதன்
விளைவாகவே அயோத்தி தீர்ப்பு வந்த பின்னும் உபியில்
கலவரமோ குற்றச் செயல்களோ நடக்கவில்லை.

யோகியின் என்கவுன்டர்கள் மக்களால் வரவேற்கப்
படுகின்றன. இந்த 200 என்கவுன்டர்களையும் மக்கள்
ஆதரிக்கிறார்கள். இதுதான் உண்மை. இது இங்குள்ள
குட்டி முதலாளித்துவத் தற்குறிகளுக்குத் தெரியாது.

என்கவுன்டர் என்ற பொருளில் சொல்ல வேண்டியது
அனைத்தையும் இந்தக் கட்டுரை சொல்லவில்லை.
சொல்லவும் இயலாது. எழுதி மாளாது. நேர்மையான
வாசகர்கள் உரிய ஆங்கில இந்தி ஏடுகளைப்
படித்தும் உபிக்கு நேரில் சென்றும் விஷயங்களை
அறிந்து கொள்ள வேண்டும். (உன்னாவ் வழக்கின்
தீர்ப்பு டிசம்பர் 16ல் வருவதாக அறிகிறேன்).

விஷயம் தெரியாமல் முட்டாளாக இருந்தால்,
குளித்தலையில் ஒரு பெண்ணைக் கற்பழித்த
போலிப் போராளியும் கயவனும் ஆகிய முகிலனை
ஆதரித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்!
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இந்தியா நிலவுடைமைச் சமூகத்தின் கூறுகளைக்
கொண்டிருக்கும் நாடு. India is a feudal society. சுதந்திர
பூர்ஷ்வா வர்க்கத்தின் ஐரோப்பிய முதலாளித்துவ
சமூகம் அல்ல நமது இந்தியச் சமூகம். எனவே இங்கு
என்கவுன்டர்கள் நடைபெறுவது தவிர்க்க இயலாதது.   
***************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக