வெள்ளி, 20 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஒரு வரம்புக்கு உட்பட்ட சட்ட திருத்தம்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய குறிப்பிட்ட மூன்று நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் கால வரம்பாக குறிப்பிட்ட தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

2014 டிச., 31 க்கு முன் யாரெல்லாம் இந்தியாவுக்குள் வந்தார்களோ அவர்கள் மட்டுமே இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பயன் பெற முடியும்.ஆனால் குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்துதான் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரப்பப்பட்டுள்ளது.அது முற்றிலும் தவறானது. குடியுரிமை சட்ட திருத்தம் மதத்தை அடிப்படையாக வைத்து கொண்டு வரப்படவில்லை என்பதை உறுதியாக கூறலாம்.மதத்தை குறிப்பிடுகின்ற ஒரு ஷரத்து இந்த சட்டத்தில் இருப்பது உண்மைதான்.ஆனால், யாருக்காக இந்த சட்டம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே அந்த மதப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.அதாவது, முதலில் குறிப்பிட்ட மூன்று நாடுகளிலும்சிறுபான்மையினராக வாழ்கின்ற மதங்களை சேர்ந்த, அந்த மதங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் அந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளானமக்களுக்காக மட்டுமே இந்த சட்டம் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிவிக்கவே அந்த மதங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.முஸ்லிம்களை குறிவைத்து, முஸ்லிம்களை மட்டும் நமது நாட்டுக்குள் வரவிடாமல் விலக்கி வைப்பதற்காக இது கொண்டு வரப்படவில்லை.இன்னும் சொல்லப்போனால், பல மதங்களை சேர்ந்த சிறுபான்மையினர் அனைவரையும் பயன்பாட்டு வரையறைக்குள் சேர்த்துக் கொள்வதேஇந்த சட்டத்தின் நோக்கமே தவிர, எந்த மதத்தையும் எந்த பிரிவினரையும் விலக்கி வைப்பதற்காக அல்ல என்பதை உணர வேண்டும்.

முஸ்லிம் என்ற வார்த்தையைக்கூட எந்த இடத்திலும் பயன்படுத்தவே இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.இந்த சட்டம் மூன்று குழுக்களை அடையாளம் கண்டுள்ளது.அவர்களை தவிர இந்த மூன்று நாடுகளை சேர்ந்த எந்த ஒரு முஸ்லிம் பிரஜையின் உரிமையையும் இச்சட்டம் மறுக்கவும் இல்லை, பறிக்கவும் இல்லை. அதாவது, அந்த நாடுகளில் இருந்து இங்கு வரும் முஸ்லிம்கள் இந்தியாவில் குடி உரிமை கேட்கவோ, அடைக்கலம் கேட்கவோ அகதியாக வசிக்கவோ விண்ணப்பம் செய்வதை இந்த சட்டம் நிச்சயமாக தடுக்கவில்லை.ஆகவே, குறிப்பிட்ட ஒரு மதத்தினரை இந்திய குடி உரிமை கேட்டு விண்ணப்பிக்கக்கூட வழியில்லாமல் இச்சட்டம் தடுப்பதாகவும் விலக்கி வைப்பதாகவும் ஊடகங்கள் கூறுவது அப்பட்டமான பொய் பிரசாரமே தவிர வேறில்லை.ஏன் இந்த மூன்று நாடுகள் மட்டும் என்று கேட்டால்,வரலாற்று ரீதியாக இந்த மூன்று நாடுகளுடனும்இந்தியாவுக்கு நெருங்கிய, பிரிக்க முடியாத உறவு உண்டு.இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் சமூகத்தினர்இம்மூன்று நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்வதோடு மதத்தின் காரணமாகவே அவர்கள் எல்லோரும் கணிசமான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதும் உண்மை.முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம் அல்லாத அந்த சிறுபான்மை மக்கள் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லாத சூழலில் அவர்களின் நலன் காக்க இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது நீண்ட காலமாக கேள்வியாக இருந்தது.இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வழிவகுத்தது எதுவென்றால் 1950ல் செய்யப்பட்ட நேரு - லியாகத் ஒப்பந்தம்தான். அந்த ஒப்பந்தத்தின் கீழ், எங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை மதத்தவரின் நலன்முழுமையாக பேணப்படும்; உரிமைகள் பாதுகாக்கப்படும் என இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உறுதி அளித்துள்ளன. ஒப்பந்தத்தின் மையக்கருத்து என்னவென்றால்,அதை பிணையாளி கோட்பாடு என்று சொல்லலாம்.அதாவது, ஒரு நாட்டில் வசிக்கும் மத சிறுபான்மையினர் மற்ற நாட்டின் பிணையாளியாக கருதப்படுவார்கள். அதன் மூலம், இரு நாடுகளிலும் வசிக்கும் மத சிறுபான்மையினர் நலன்கள் உரிமைகள் உறுதி செய்யப்படும்.
உங்கள் நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் மதத்தினரைநீங்கள் முறையாக பாதுகாக்கும் வரையில்,எங்கள் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் மதத்தினரை நாங்கள் முறையாக பாதுகாப்போம் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒருநடைமுறை யதார்த்தம் இது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் குடியுரிமை சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சம்.ஒருங்கிணைந்த இந்தியாவை பொறுத்தவரை, அதாவது இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்த இந்தியாவின் அங்கமாக வாழ்ந்தோம். பிரிவினை வரலாற்றின் எச்சமாக இன்று வெவ்வேறு சூழலில் சிறுபான்மையினராக வாழும் அனைவரின் நலனையும் காக்கவேண்டிய சட்டப் பூர்வமான, வரலாற்றுப் பூர்வமான, நாகரிக அடிப்படையிலான கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. இதுதான் உண்மை.1971க்கு முன், பிரிக்கப்படாத பாகிஸ்தானில் முஸ்லிம்கள் அல்லாத மக்கள் 23 சதவீதம் பேர் இருந்தனர். பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அந்த 23 சதவீதத்தில் 3 சதவீத மக்கள் பாகிஸ்தான் குடிமக்களாகவும், 20 சதவீத மக்கள் வங்கதேச பிரஜைகளாகவும் ஆனார்கள். அதன் பிறகு, இந்த எண்ணிக்கை படிப்படியாக வெகுவாக குறைந்து விட்டது. பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 1.6 சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சிலர் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள்.

வாதத்துக்கு அதை ஏற்றுக் கொண்டாலும் 3 சதவீதம் என்பது 1.8 சதவீதமாக குறைந்ததை அவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். அது முக்கியமான விஷயம் என்றாலும் அது பற்றி யாரும் பேசுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.வங்கதேசத்தை பொறுத்தவரையில் 20 சதவீதமாக இருந்த இந்துக்கள்,இப்போது 10.7 சதவீதமாக குறைந்துவிட்டார்கள். இவ்வாறு குறைவதற்கு ஒரு சில காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, இந்துக்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட்டு இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு ஓடுகிறார்கள். அல்லது மத மாற்றம் மூலம் முஸ்லிம் அல்லாத மதத்தவர் என்ற அடையாளத்தை இழந்து இன்னொரு மதத்தின் கீழ் கொண்டுவரப் படுகிறார்கள். அல்லது கொல்லப்படுகிறார்கள். இந்த மூன்று வழிகளில்தான் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது.

இந்த பிரச்னையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டு பார்ப்போம். ஆப்கானிஸ்தானில் எப்போது தாலிபான் பயங்கரவாதம் தலைதுாக்கியதோ அப்போதே அது, தீவிர இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக உருவெடுத்தது. உண்மையில், தாலிபான்கள்தான் ஐ.எஸ்.சின் முன்னோடி. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இஸ்லாம் மதத்தை... அதாவது தாலிபான்கள் சொல்லும் தீவிர இஸ்லாமை பின்பற்றாதவர்களும் ஏனைய மதத்தினருடன் வெளியேறியாக வேண்டும். அவ்வாறு ஆப்கானிஸ்தான் மக்கள் அந்த நாட்டைவிட்டு துரத்தப்பட்டபோது, முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் என எந்த வேறுபாடும் காட்டாமல் இரு தரப்பினருக்கும் அடைக்கலம் தர கதவை திறந்து வைத்தது இந்தியா.

நீங்கள் இங்கே ஒரு கேள்வி கேட்கலாம். பாகிஸ்தானில் அஹமதி, ஷியா என சில பிரிவு முஸ்லிம்களும் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்களே, அவர்களை இந்த சட்டம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று.தாலிபானுக்கு பயந்து ஓடும் ஆப்கான் முஸ்லிம்களையும், பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடும் அஹமதியா, ஷியா, சூபி முஸ்லிம்களையும் இந்தியா வேறுபடுத்தி பார்ப்பது ஏன்? என்று நீங்கள் கேட்கலாம். பாகிஸ்தானில் முஸ்லிம்களிடையே பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே முஸ்லிம் அல்லாதவர்களை துன்புறுத்துவதில் பொதுவான அணுகுமுறையை கொண்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் விக்ரக வழிபாட்டில் ஈடுபடும் இந்துக்களை துன்புறுத்துவதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். ஆகவே, பாகிஸ்தானைச் சேர்ந்த அகமதி, ஷியா, சூபி முஸ்லிம்களையும் தாலிபனுக்கு பயந்து ஓடும் ஆப்கான் முஸ்லிம்களையும் சமமாக கருதுவதில் அர்த்தம் இல்லை.

இந்த விஷயத்தில் கேள்வி எழுப்ப இந்தியாவுக்கு சட்ட பூர்வ உரிமை இருக்கிறதா? என்றால் கட்டாயம் இருக்கிறது என்று சொல்வேன். ஒரு நாட்டில் ஆபத்தில் இருக்கும் இந்திய மக்களை இந்திய வம்சாவளி மக்களை காப்பாற்ற அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் இருக்கிறது. அதே சமயம், அகமதி, ஷியா, சூபி என யாராக இருந்தாலும் பாகிஸ்தானிய இஸ்லாமை பின்பற்றுபவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் பாகிஸ்தானுக்கே உரிய பாரம்பரிய பகை உணர்வுடன் அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் இந்தியாவில் வாழும் குறைந்தபட்சம் 80 சதவீத மக்களுக்கு அவர்கள் அச்சுறுத்தலாகத்தான் இருப்பார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதைத்தான் முஸ்லிம் நாடான வங்கதேசத்தின் பிரதமரும் இன்றுவரை சுட்டிக் காட்டுகிறார். மியான்மரில் இருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்யாக்கள் முஸ்லிம்களாக இருந்தபோதிலும், அவர்களால் வங்க தேசத்துக்கு மட்டுமல்ல; தெற்கு ஆசியா கண்டத்துக்கே பேராபத்து என்று பிரதமர் ஷேக் ஹசீனா தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதே நிலைமைதான் பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு நாம் இடம் கொடுத்தால் இங்கே உருவாகும் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆகவே, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாதங்கள் எல்லாமே தவறானவை. அடிப்படை உண்மைகளை அறியாமல் எடுத்துரைக்கும் வாதம் என்றுதான் கூறுவேன். இந்த விவகாரத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தை மத்திய அரசு மதிக்காமல் செயல்பட்டது என்று சட்டப் பூர்வமாக சிலர் முன்வைக்கும் வாதமும் தவறான வாதம் என்றுதான் சொல்வேன். இந்திய அரசியலமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்திருக்கும் எவரும் 14வது பிரிவு பற்றியும் அறிந்திருப்பார்கள்.14வது பிரிவை குடியுரிமை சட்டத்துடன் இணைத்துப் பார்ப்பதற்கு முன், அந்தப் பிரிவு என்ன சொல்கிறது என்பதை முதலில் பார்ப்போம். இந்திய குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு சமமானவர்கள் என்று அரசியல் சாசனம் சொல்வது உண்மைதான். ஆனால், பெரும்பான்மை மக்களுக்கே இல்லாத பல உரிமைகளும் சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் வகையில் நமது அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றியும் திட்டங்களை தீட்டியும் செயல்படுகின்றனவே, அவை எல்லாமே அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்றுதானே அர்த்தம்?

உண்மையில் எந்த ஒரு பிரிவு மக்களையும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் எந்த சட்டம் போட்டாலும் திட்டம் செயல்படுத்தினாலும் அது சட்டவிரோதம் என்றுதான் 14 வது பிரிவு சொல்கிறது. ஆனாலும், சிறுபான்மை மக்களுக்கு என்றும் பல வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றும் இந்த நாட்டில் ஏராளமான சட்டங்களும் திட்டங்களும் நீண்டகாலமாக அமலில் இருக்கின்றன. இதுவரையிலும் அதை யாரும் எதிர்த்து கேட்கவில்லை. அதில் நியாயம் இருப்பதாக கூறும் வாதத்தை ஏற்றுக் கொண்டனர்.ஆகவே, அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துகளை அவரவர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப திரித்தும் திருத்தியும் பல விதமாக அர்த்தம் சொல்ல முடியும். என்றாலும் அத்தகைய வாதங்களால் யாருக்கும் எந்த பலனும் விளையப்போவது இல்லை. இரண்டு தரப்பினரும் சமமாக நடத்தப்பட்டால் அதுதான் சமத்துவம். இரு தரப்பும் சமமான நிலையில் இல்லாதபோது சமத்துவத்துக்கு வழி இல்லாமல் போகிறது. ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை தெளிவாக அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவியை செய்வதன் மூலமாக சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்கும் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் பாகிஸ்தானில் அகமதி, ஷியா, சூபி பிரிவுகளை சேர்ந்த முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறானவை.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளோடு ஒப்பிடும் வகையில் அவை இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால், இது ஒரு மதத்துக்குள் இருக்கும் பிரிவுகளின் அடிப்படையில் அமைந்தது. இன்னொன்று மத அடிப்படையிலானது. இரண்டுமே வெவ்வேறானவை.

மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் யார்? என்பதை நடுநிலையாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் 14வது பிரிவின் நோக்கம். துன்புறுத்தப்பட்டோர் பட்டியலில் அதிகப்படியான பிரிவினரை சேர்த்துவிடவும் கூடாது. குறைந்த பிரிவினரை மட்டுமே சேர்த்ததாகவும் இருக்கக்கூடாது. பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர் யார்?அந்த மதத்தவர் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டார்களா? என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.அப்படியானால் பாகிஸ்தானில் உள்ள யூதர்கள் நிலை என்ன? இந்தக் கேள்வியை கேட்பவர்களிடம் நான் கேட்பது இதுதான். பாகிஸ்தானில் யூதர்கள் இப்போது இருக்கிறார்களா, என்ன? பாகிஸ்தான் மண்ணில் வழக்கொழிந்துபோன யூதர்களை தேடிக் கண்டுபிடித்து இப்படி ஊகத்தின் அடிப்படையில் விதண்டாவாதமாக சிலர் கேள்விகளை எழுப்புகிறார்கள்.இந்த சட்ட திருத்தத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய கிறிஸ்தவர்களை சேர்க்காமல் விட்டிருந்தால் கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேசுபவர்கள், ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள தயாரில்லை. ஏனென்றால் அவர்கள் சட்டத்தை படிக்கவே இல்லை. அதன் 6 பி பிரிவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கினாலும்கூட, கூடுதல் நிபந்தனைகளை (என்ஹான்ஸ்ட் ஆப்ளிகேஷன்ஸ்)அவர்கள் மீது விதிக்க முடியும்.அதாவது, குடியுரிமை பெற்ற பிறகும்கூட மற்ற குடிமக்களுக்கு இணையான சலுகைகளை சிலரால் பெற முடியாது. ஏனென்றால் அவர்களை இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கும் (நேச்சுரலைசேஷன் பிராசஸ்) இந்தியாவுக்கு வந்தபோது துன்புறுத்தலுக்கு ஆளானஇந்து, கிறிஸ்தவர், பார்சி, பவுத்தர், ஜைனர், சீக்கியர் என்று சொல்லி இருப்பார்கள். அதுதான் உண்மை என்பதற்கு என்ன உத்தரவாதம்?அந்த உண்மை நமக்கு எப்படி தெரியும்? இந்தியாவில் நுழைவதற்காக அவர்கள் பொய் சொல்லியிருந்தால் அந்த பொய் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க நம்மால் முடியும்.அதுபோன்றவர்கள் இந்தியாவில் செட்டில் ஆகும் வரை அவர்கள் அரசின் கண்காணிப்பில்தான் இருப்பார்கள். அதனால்தான் கூடுதலான கடமைப் பொறுப்புகள்(என்ஹேன்ஸ்ட் ஆப்ளிகேஷன்) அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.

இந்த உண்மையை யாரும் இதுவரை எடுத்துச் சொல்லவில்லை.எனவே, 14வது பிரிவை சுட்டிக்காட்டி பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. உணர்ச்சிவசப்பட்டு முன்வைக்கும் வாதம் என்பதுதான் என் கருத்து.குடியுரிமை சட்டத்தின் வேறு சில அம்சங்களை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியும். ஆனால், சம உரிமை வழங்கவில்லை என்று சொல்லிஇந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு போட முடியாது. இந்தச் சட்டத்துக்கு எதிராக கொடி பிடிப்பவர்கள், 14வது பிரிவை தவிர வேறென்ன குறைகள் இருக்கிறது என்று இதுவரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதனால் அவர்களது எதிர்ப்புகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.உணர்ச்சி பூர்வமாகவும், ஆரவாரத்துடனும் முன்வைக்கப்படும் இந்த வெற்று வாதங்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதை தடுத்துவிடுமா? அந்த வீண் வாதங்களுக்கு சட்டப்பூர்வ தகுதி என்ன இருக்கிறது? ஒரு தகுதியும் இல்லை.குடியுரிமை வழங்கும் பணியை சட்டங்கள் கவனிக்கும். குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் 14வது பிரிவு என்ற ஒரு விதிக்கு இடமே இல்லை. அரசியலமைப்பின் பாகம் 3ன் கீழ் 14வது பிரிவு வருகிறது. அரசியலமைப்பின் 2வது பிரிவின் கீழ் வரும் 5 முதல் 11 வரையிலான சட்டப்பிரிவுகள் குடியுரிமையை யாருக்கு வழங்குவது என தீர்மானிக்கின்றன.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் குடியுரிமைப் பிரச்னைக்கு அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக தீர்வு காணவில்லை. குடியுரிமை பற்றி 11வது பிரிவு தெளிவாக சொல்கிறது. அதாவது குடியுரிமை வழங்குவது பற்றி எதிர்காலத்தில் செய்யப்படும் சட்டத் திருத்தங்களுக்கு உட்பட்டது என 11வதுபிரிவு கூறுகிறது. அதுதொடர்பாக பார்லிமென்ட் புதிய சட்டத்தை நிறைவேற்றலாம். அதன் உண்மையான அர்த்தம்

என்னவெனில் இந்த விவகாரத்தில் பார்லிமென்ட்டுக்குத்தான் அதிகாரம் உள்ளது. மாநில அதிகார வரம்பில் இது வரவில்லை.எனவே, பார்லிமென்ட் கொண்டு வந்த ஒரு விதியை அல்லது ஒரு சட்டத்தை பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த வழியும் மாநிலங்களுக்கு இல்லை.மாநில அரசுகள் எந்தவிதத்திலும் குறுக்கிட முடியாது. ஆக குடியுரிமைச் சட்டத்தின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகளை கட்டாயம் படிக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தியா யாரை வெளிநாட்டவராக கருதுகிறது என்பது நமக்குப் புரியும். அத்துடன் 1955ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், 1946ம் ஆண்டின் வெளிநாட்டவர் சட்டம் ஆகியவற்றையும்சேர்த்துப் படிக்க வேண்டும். இந்தச் சட்டங்களும், 14வது பிரிவும் எப்படி ஒன்றன் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவில் வசிக்கும் இந்தியரல்லாதோர் அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்களோடு 14வது பிரிவை பொருத்திப் பார்க்கும்போது, குடியுரிமை சம்பந்தமான மற்ற சட்டங்களின் பிரிவுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு சட்டத்திலும் பொதுவான சில விதிகளும், விசேஷமான சில விதிகளும் இருக்கும். ஒரு சர்ச்சையுடன் எந்த விதி மிகவும் நெருங்கி வருகிறதோ அதுதான் விதியாக இருக்கவேண்டும். அதைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, இந்தப்பிரச்னையில் குடியுரிமை சட்டத்தின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகளையும், வெளிநாட்டவர் சட்டத்தையும் தான்கருத்தில் கொள்ள வேண்டுமே ஒழிய, 14வது பிரிவின் 3வது விதி அல்ல. வெளிநாட்டவர் சட்டத்துக்கு பதிலாக இந்திய குடிமக்கள் பதிவேடு சட்டம் நம்மை கட்டுப்படுத்தும். அதேபோல, குடியுரிமைச் சட்டத்துக்கு பதிலாக குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு நாம் கட்டுப்பட வேண்டும்.

சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்தை பார்லிமென்ட்டுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.குடியுரிமை வழங்குவதற்காக பார்லிமென்ட் கொண்டுவரும் சட்டங்கள், 5 முதல் 11 வரையிலான விதிகளை ஒத்து இருக்கும்பட்சத்தில் அந்தச் சட்டங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் சட்டமாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். குடியுரிமைச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றம் செய்து மத்திய அரசு சில திருத்தங்களை செய்கிறதா? என்றால் இல்லை. ”இந்துக்களுக்குத்தான் குடியுரிமை வழங்கப்படும். இந்து அல்லாதவர்கள் குடியுரிமை கோரினால் அவர்கள் இந்துவாக மதம் மாற வேண்டும்; முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது;இந்திய முஸ்லிம்கள் குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்” என்பது போன்ற திருத்தங்கள் எதுவுமே குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ல் இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நோக்கமும் அது இல்லை.

இதுபோன்ற பயமுறுத்தல்களை பரப்புகிறார்கள். இன்னொரு மிக முக்கியமானதொரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. ''நாடு முழுக்க குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு தயார் செய்யும் பட்சத்தில் ஏராளமான முஸ்லிம்கள் அதில் இடம்பெறாமல் போகும் வாய்ப்புண்டு. அதேபோல இந்துக்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் போகலாம். இந்துக்களை குடியுரிமைச் சட்டம் காத்துவிடும். முஸ்லிம்களை பாதுகாக்காது” என பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் அடிப்படை ஆதாரமற்றது. ஏனென்றால் குடியுரிமை திருத்தச் சட்டமானது ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிறிஸ்தவ மதத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். அதுவும் 2014 டிச., 31க்கு முன்பாக இந்தியாவுக்குள் இருந்திருக்க வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுக்க தயாராகும் பட்சத்தில் அதில் இடம்பெறாமல் போகும் எல்லா இந்துக்களையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பாதுகாக்காது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும். எனவே, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியையும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் இணைத்து கேள்விகளை எழுப்பது அடிப்படை ஆதாரமில்லாத ஒன்றாகும்.

இந்த மூன்று நாடுகளில் இருந்து 2014 டிச.,31க்குள் இந்தியாவுக்கு வந்தவர்களையும், அதே தேதிக்கு முன்பாக, குடியுரிமை பெறும் நோக்குடன் அசாமுக்கு வந்து சேர்ந்தவர்களையும் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் பாதுகாக்கும். அதையும் தாண்டி இந்தச் சட்டம் எல்லா மாநிலத்துக்கும் பொருந்தும் எல்லா இந்துக்களையும் இந்தச் சட்டம் பாதுகாக்கும் எல்லா முஸ்லிம்களும் வெளியேற்றப்படுவார்கள் என்பதெல்லாம் கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாதது. இதைத்தான் குடியுரிமைச் சட்டம் 1955, வெளிநாட்டவர் சட்டம் 1946, குடியுரிமை திருத்தச் சட்டம் 1919 மற்றும் 5 முதல் 11 வரையிலான பிரிவுகள் விளக்கிச் சொல்கின்றன



இந்தச் சட்டத்தின் அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பணியை பிரஸ் கவுன்சில் போன்ற அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். பொய் பரப்பும் மீடியாக்களை கோர்ட்டுக்கு இழுத்தாலும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் விட்டது கருத்துச் சுதந்திரம் போய் விட்டது என்பார்கள். நிச்சயமாக அப்படி இல்லை. இன்று நாடு முழுக்க நடக்கும் கலவரங்களும் அதனால் எழுந்த பதற்றமான நிலையும் சட்டத்தின் விளைவாக உண்டாகவில்லை. உண்மைகளை திரித்து புரளிகளைக் கிளப்பி விடும் குறிப்பிட்ட சில தனி நபர்கள்தான் காரணம். அவர்கள் பயமுறுத்துகிறார்கள்; புரளி கிளப்புகிறார்கள் என விளக்கிச் சொல்லும் மிகப்பெரிய பொறுப்பு மீடியாக்களுக்கு உண்டு.சாய் தீபக் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக