சனி, 16 ஜூலை, 2016

மோடி அரசு உருவாக்க இருக்கும்
தேசிய புதிய கல்விக் கொள்கை!
மக்களிடம் கருத்து கேட்கப் படுகிறது!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
சுவாதி கொலை, கபாலி படம் இவற்றை விடிய
விடியப் பேசியும் நிறைவு அடையாத பலர்
தமிழகத்தில் உண்டு. மற்றப்படி என்றைக்கும்
பேசிக் கொண்டிருக்கும் அடையாள அரசியல்
அறியாமையே தமிழக அறிவுலகத்தின் நிரந்தரப்
பாடுபொருள். 1925இல் என்ன பேசப்பட்டதோ,
அதையே இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கும்
கருத்துக்  கபோதிகள் தமிழ்நாட்டில் அதிகம்.

சுருங்கக் கூறின், தமிழகத்தின் அறிவுலகம் என்று
அறியப்படுவது, காலத்திற்குப் பொருந்தாத
குட்டி முதலாளித்துவ சித்தாந்தங்களாலும்
அவற்றையே பற்றி நிற்கும் சிந்தனைக்
குள்ளர்களாலும் நிரம்பியது. உலகிலேயே மிக
அதிக எண்ணிக்கையில் சிந்தனைக் குள்ளர்களைக்
கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
    
நாடு முழுமைக்குமான புதிய, தேசிய கல்விக்
கொள்கையை உருவாக்க மோடி அரசு முடிவு
செய்துள்ளது. இந்தியாவின் அதிகார பூர்வமான
கல்விக் கொள்கை 1986இல் ராஜிவ் காந்தி
காலத்தில் உருவாக்கப் பட்டது. பின்னர் 1992இல்
நரசிம்மராவ் காலத்தில் அதில்  பெருமளவு
மாற்றம் செய்யப்பட்டது.

நரசிம்மராவின் கல்விக் கொள்கையானது கல்வி
வழங்குவது அரசின் பொறுப்பு என்ற கொள்கையை
ரத்து செய்தது. கல்வி மற்றும் உயர்கல்வியில்
தனியாருக்கு அனுமதி அளித்தது. இன்றைக்குப்
புற்றீசலாகப் பெருகி நிற்கும் தனியார் சுயநிதிப்
பொறியியல் கல்லூரிகள் நரசிம்மராவின்
கல்விக் கொள்கையின் விளைவுகளே.

தற்போது, நடப்பில் உள்ள கல்விக் கொள்கையை
மாற்றி அமைத்து, புதிய கொள்கையை உருவாக்க
மோடி அரசு முடிவு செத்துள்ளது. அதற்கான வரைவு
அறிக்கை (draft policy) உருவாக்கப்பட உள்ளது.

அந்த வரைவு அறிக்கையில் இடம்பெற உள்ள
சில முக்கியமான அம்சங்களை மோடி அரசு
அறிவித்துள்ளது. அரசின் இணைய தளங்களில்
இது வெளியிடப் பட்டுள்ளது. அதன் மீதான
மக்களின் கருத்தை  வரும் ஜூலை 31, 2016க்குள்
சொல்ல வேண்டும்.

அரசின் முன்வைப்புகள் (proposals), ஆவணங்கள்,
மக்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வித்தாட்கள்
என அனைத்தும் நூற்றுக் கணக்கான பக்கங்கள்
கொண்டவையாக உள்ளன. ஆங்கிலம், இந்தியில்
மட்டுமே உள்ளன. இவற்றை எல்லாம் படித்துப்
பார்த்து, மோடி அரசு என்ன செய்யப் போகிறது
என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி அரசின் முன்வைப்புகள் மீதான நமது
கருத்தை அரசுக்குத் தெரியப் படுத்த வேண்டும்.
சமூக அக்கறை உடைய எவருக்கும் வரும்
ஜூலை 31 வரை இதுவே பிரதானமான பணியாக
இருக்க முடியும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் தன் கருத்தை
அரசுக்குத் தெரிவிக்க இருக்கிறது. தொடர்புடைய
ஆவணங்களைப் படித்து வருகிறது. இப்பொருள்
குறித்த காத்திரமான விவாதங்களில் பங்கேற்க
விரும்புகிறது.

வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
********************************************************************     

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக