சனி, 30 ஜூலை, 2016

சமஸ்கிருதம் எங்கள் மயிருக்குச் சமம்!
சொல்கிறார்கள் வெளிநாட்டுப் பல்கலைகளின்
வேந்தர்கள்! புதிய கல்விக் கொள்கை யாருக்காக?
சமஸ்கிருதப் பூச்சாண்டி எடுபடுமா?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது
இந்திய உயர்கல்வித் துறையில் அந்நிய நேரடி
முதலீட்டை அனுமதிப்பதும், வெளிநாட்டுப்
பல்கலைகளை இந்தியாவில் கல்வி வழங்க
அனுமதிப்பதும் ஆகும். இதுதான் புதிய கல்விக்
கொள்கையின் பிரதானமான குவிமையம் (focus) ஆகும்.

கல்விக்காக மொத்த GDPயில் 6 சதம் செலவழிக்க
புதிய கல்விக் கொள்கையில் உறுதி அளித்திருக்கிறது
மோடி அரசு. GDP என்றால் (Gross Domestic Product) ஒட்டு மொத்த
உள்நாட்டு உற்பத்தி என்று பொருள்.

இந்தியாவின் GDP எவ்வளவு? இது தெரிந்தால்தான்
இந்தியக் கல்வித் துறையில் எவ்வளவு பணம்
புழங்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள
முடியும்.

2015ஆம் ஆண்டின் GDP 2073 பில்லியன் அமெரிக்க டாலர்
ஆகும். இதை இந்திய ரூபாயில் மாற்றினால்,
ஒன்றேகால் கோடானுகோடி ஆகும். அதாவது
125 லட்சம் கோடி ஆகும். இப்போது புரிந்ததா?

இதில் 6 சதம் எவ்வளவு? 21 லட்சம் கோடி ஆகும்.
அதாவது, கல்விக்காக மத்திய அரசு செலவழிக்க
இருக்கிற தொகை ஆண்டொன்றுக்கு 21 லட்சம்
கோடி ரூபாய் ஆகும். இதில் உயர்கல்விக்கு
மட்டும் GDPயில் ஒரு சதம் செலவழிக்கப் படும்
என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. அதன்படி
பார்த்தால், உயர்கல்விக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு
ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி செல்வழிக்கப்படும்.

ஆக இந்தியக் கல்வியின் சந்தை மதிப்பு மிகவும்
அதிகம். எனவே கல்வியில் அந்நிய நேரடி முதலீடு
வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில்
கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் (FDI)
உச்ச வரம்பு 100 சதம் ஆகும்.

இப்போது சமஸ்கிருதத்திற்கு வருவோம்.
எந்த வெளிநாட்டுப் பல்கலையும் சமஸ்கிருதத்தை
பொருட்படுத்தப் போவதில்லை. ஏனெனில்
சமஸ்கிருதம் உற்பத்தியில் உள்ள மொழி அல்ல.
அது வெறும் பண்பாடு சார்ந்த மொழியாக மட்டுமே
எஞ்சியுள்ளதாக வெளிநாடுகள் கருதுகின்றன.

அறிவியல் போன்ற படிப்புகளில், வெளிநாட்டுப்
பல்கலைகளின் பார்வையில் சமஸ்கிருதம் பயனற்ற
ஒரு மொழி. அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து
அறிவியல் பட்டப் படிப்புகளை (BSc, MSc, PhD) வழங்கும்
எந்த வெளிநாட்டுப் பல்கலையும் சம்ஸ்கிருத
மீடியத்தில் கற்றுக் கொடுக்கப் போவதில்லை.
அவர்கள் சமஸ்கிருதத்தை ஒரு மொழியாகக்
கற்றுக் கொடுக்க முன்வந்தால் அது பெரிய விஷயம்.

மொழிப் பாடம் என்பதைப் பொறுத்த மட்டில்,
பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மொழிகளுக்கே
வெளிநாட்டுப் பல்கலைகள் முக்கியத்துவம் கொடுக்கும்.
சமஸ்கிருதத்தை அவை சீந்தக் கூடச் செய்யாது.

எனவே இந்நிலையில் சமஸ்கிருதப் பூச்சாண்டி
காட்டும் முட்டாள்களின் உள்நோக்கம் என்ன என்பதை
ஆராய வேண்டும். அதை அடுத்த கட்டுரையில்
பார்ப்போம்.
********************************************************************     
 



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக