திங்கள், 20 ஆகஸ்ட், 2018

இமானுவேல் கான்ட்டை அங்கீகரிக்காதவன்
பொருள்முதல்வாதியே அல்ல!
எங்கல்ஸ் ஏன் இமானுவேல் கான்ட்டுக்காக
வாதாடினார்?
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
உலக வரலாறு இதுவரை கண்டிராத மகத்தான
தத்துவஞானிகளில் ஒருவர் ஜெர்மனியின்
இம்மானுவேல் கான்ட்  (1724-1804). இவர்
கருத்துமுதல்வாத முகாமைக் சேர்ந்தவர்  என்ற
லெனினிய போதனையை மார்க்சியர்கள்
அறிவார்கள்.

என்றாலும் இமானுவேல் கான்ட்டை முற்ற முழுக்க
ஒரு கருத்துமுதல்வாதியாகக் கருத இயலாது.
மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ், முற்றிலுமான
ஒரு கருத்துமுதல்வாதியாக கான்ட்டை
வரையறுக்கவில்லை. (பார்க்க: எங்கல்ஸ் எழுதிய
லுத்விக் பாயர்பாக்கும்  செவ்வியல் ஜெர்மன்
தத்துவத்தின் முடிவும், Ludwig Feuerbach and the end of
classical German philosophy, 1888).

இமானுவேல் கான்ட் ஒரு தத்துவஞானி மட்டுமல்ல.
அவர் ஒரு மகத்தான விஞ்ஞானியும் ஆவார்.
அவர் இரண்டு டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.
தமது 31ஆவது வயதில் அவர் மகத்தான ஒரு
அறிவியல் நூலை எழுதினார். 1755ல் அவர் எழுதிய
நூல் "Universal natural history and theory of heaven" என்பது.

நமது சூரிய மண்டலம் (solar system) எப்படித்
தோன்றியது என்பதை இன்று நாம் அறிவோம்.
பள்ளி மாணவன் கூட அறிவான். ஆனால்
இமானுவேல் கான்ட்டின் காலத்தில் அறிவியல்
உலகம் இதை அறிந்திருக்கவில்லை.

வாயுக் கோளங்களும் தூசிப்பந்துகளும்
கொண்ட நெபுலாவில் (nebula) இருந்தே
நமது சூரிய மண்டலம் தோன்றியது என்று
முதன் முதலில் கண்டறிந்து கூறியவர் கான்ட்.
நமது பால்வீதி (Milky way) காலக்சி  பற்றியும்
பிற காலக்சி பற்றியும் முதலில் கூறியவர்
கான்ட்.

கான்ட்டுக்கு முந்திய விஞ்ஞானிகளான
கெப்ளர் கலிலியோ  கோப்பர் நிக்கஸ்
ஆகியோர் சூரியக் குடும்பம் பற்றி
ஆராய்வதற்கு வழியின்றி வேறு துறைகளில்
பங்களித்து இருந்தனர்.

மகத்தான விஞ்ஞானி நியூட்டன் சூரிய
மண்டலத்தின் தோற்றம் குறித்து
ஆராயவில்லை. அதைக் கடவுளின் செயலுக்கு
நேர்ந்து விட்டு விட்டார்.

இந்நிலையில் இம்மானுவேல் கான்ட்டின்
பங்களிப்பு அறிவியலில் பெரும் முக்கியத்துவம்
பெறுகிறது. சூரிய மண்டலத்தைக் கடவுள்
படைத்திருக்கக் கூடும் என்ற நியூட்டனின்
கருத்தை காண்ட் ஏற்கவில்லை. கான்ட்டுக்குப்
பின்னர் வந்த பிரெஞ்சு விஞ்ஞானி லாப்லேஸ்
(Pierre Simon Laplace, 1749-1827) கான்ட்டின் கொள்கையை
ஏற்றுக் கொண்டு அதற்குரிய கணிதச்
சமன்பாடுகளை உருவாக்கினார். தற்போது
அறிவியல் நூல்களில் Kant Laplace Theory என்று
குறிக்கப்படும் இக்கொள்கை 19ஆம் நூற்றாண்டில்
லாப்லேசின் பெயரால் மட்டுமே குறிக்கப்பட்டு
வந்தது.

நெபுலா கொள்கையைக் கண்டுபிடித்த
கான்ட்டின் பெயரை விட்டு விட்டு, அதற்கான
கணிதச் சமன்பாடுகளை உருவாக்கிய
லாப்லேசின் பெயரால் இக்கொள்கை
வழங்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்தது
யார் தெரியுமா? எங்கல்ஸ்தான்
(ஆதாரம்: இயற்கையின் இயக்கவியல்)

ஆக, இமானுவேல் கான்ட் அறிவியலுக்குப்
பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
அறிவியலுக்கு அவர் செய்த பங்களிப்பு என்பது
பொருள்முதல்வாதத்திற்கு அவர் செய்த
பங்களிப்பே ஆகும். எனவே அறிவியல்
மனப்பான்மை கொண்ட மார்க்சியர்கள்
இமானுவேல் கான்ட்டின் இந்தப் பங்களிப்பை
அங்கீகரித்தே ஆக வேண்டும். அப்படி
அங்கீகரிக்க மறுப்பதானது அறிவியலுக்கு
எதிரானது. மேலும் அது பொருள்முதல்வாதப்
பார்வையாக இருக்க முடியாது.

ஹெக்கல் உருவாக்கிய இயங்கியலுக்கு
மூலவர் இமானுவேல் கான்ட்டே ஆவார்.
 கான்ட்டின் செல்வாக்கால் உந்தப்பட்ட
ஹெக்கல் தமது இயங்கியலின் உருவாக்கத்துக்கு
கான்ட்டுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளார்.

ஆக, பொருள்முதல்வாதத்திற்கு கான்ட்
ஆற்றிய பங்களிப்பைப் பார்த்தோம். எனினும்
சாராம்சத்தில் ஹெக்கல் ஒரு
கருத்துமுதல்வாதியே ஆவார். அல்லது
எங்கல்ஸ் கூறுவது போல, அவரை
கருத்துமுதல்வாத முகாமில் அடைக்க
இயலாமல் போனாலும், அவரின் தத்துவம்
கருத்துமுதல்வாதத்திற்கே அதிக அழுத்தம்
கொடுக்கிறது. இதுவே உண்மை.

(இக்கட்டுரையின் பெரும்பகுதிக் கருத்துக்கள்
நியூட்டன் அறிவியல் மன்றம் 18.08.2018ல் நடத்திய
பொருள்முதல்வாத வகுப்பில் கூறப்பட்டவை)
*********************************************************
இமானுவேல்  கான்ட்டின் அறிவியல் பங்களிப்பு
நெபுலா கொள்கையுடன் முடிந்து போய்விடவில்லை.
இன்னும் இருக்கிறது. அதை இந்தக் கட்டுரையில்
சொல்லவில்லை. தனியாக எழுத வேண்டும்.

இமானுவேல் கான்ட்டின் காலத்துக்கு முன்பு
உண்மை (truth) என்பது philosophical speculation
என்பதாக இருந்தது. கான்ட் இதற்கு முடிவு
கட்டினார். அறிவியல் முறைகள் மூலம்
(through scientific methods) பெறப்படும் factual knowledge
என்பதை மட்டுமே கான்ட் அங்கீகரித்தார்.
கான்ட் எழுதிய "கோப்பர்நிக்கஸின் புரட்சி"
(Copernican Revolution) என்ற நூலில் மேற்கூறிய
கருத்துக்கள் உள்ளன.
---------------------------------------------------------------------------------
முதன் முதலில் கூறியது
நியூட்டன் அறிவியல் மன்றமே!
-------------------------------------------------------
இமானுவேல் கான்ட் ஒரு தத்துவஞானி, அதுவும்
பத்தோடு பதினொன்றாக உள்ள ஒரு
தத்துவஞானி என்ற அளவில் மட்டுமே
தமிழக மார்க்சியர்கள் அறிந்து
வைத்திருக்கிறார்கள்.

கான்ட் ஒரு தத்துவஞானி மட்டுமல்ல அவர் ஒரு
மகத்தான விஞ்ஞானியும்கூட என்ற உண்மையை
முதன் முதலாக நியூட்டன் அறிவியல் மன்றம்
கூறுகிறது. வேறு யார் எவரும் இந்த உண்மையை
இதுவரை கூறவில்லை.

தமது 31ஆவது வயதிலேயே சூரிய மண்டல
உருவாக்கம் பற்றிய நெபுலா கொள்கையை
கான்ட் வெளியிட்டார். அதுவும் நியூட்டனின்
கருத்துக்கு எதிராக, இந்த உண்மையை
கான்ட் வெளியிட்டார் என்பது அறிவியல்
உலகில் அன்று பெரும் அதிர்வலைகளை
எழுப்பியது.

நியூட்டன் மறைந்த பின்னும்கூட, அவரின்
கொள்கைகளே அறிவியலில் ஆதிக்கம்
செலுத்தின.1900ஆம் ஆண்டில் மாக்ஸ் பிளாங்க்
குவான்டம் தியரியை வெளியிடும் வரை
அறிவியல் என்பது நியூட்டனின் இயற்பியலே.

நியூட்டன் ஒரு சக்கரவர்த்தியாகவும்
கடவுளாகவும் கருதப் பட்டவர். பிரபஞ்சத்தின்
தோற்றம், சூரிய மண்டலத்தின் தோற்றம்
ஆகியவை பற்றி நியூட்டன் ஆய்வு எதுவும்
நடத்தவில்லை. அவற்றையெல்லாம் கடவுளின்
செயலுக்கு விட்டு விட்டார்.

நியூட்டனின்  இந்தக் கருத்தை இமானுவேல் கான்ட்
ஏற்கவில்லை. அவர் நெபுலா கொள்கையை
உருவாக்கினார்.

எங்கல்ஸ், நியூட்டனின் கருத்தை மறுத்து
கான்ட்  முன்வைத்த நெபுலா கொள்கையை
உயர்த்திப் பிடித்தார். எங்கல்ஸின் இச்செயல்
சரியானதே.

எங்கல்சுக்கு எப்போதுமே நியூட்டனைப்
பிடிக்காது. ஏன் பிடிக்காது என்பதற்கான
காரணத்தை நான் இங்கு .கூற விரும்பவில்லை.
     . 

இந்தக் கட்டுரை இமானுவேல் கான்ட்டின்
அறிவியல் பங்களிப்பை அறிமுகப் படுத்தும்
கட்டுரை. இதுவரை தமிழக மார்க்சியர்கள்
இமானுவேல் கான்ட்டின் அறிவியல் பங்களிப்பை
அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியும்கூட
என்ற அறியப்படாத உண்மையை முதன்முதலில்
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரியப்
படுத்துகிறது.

கருத்துமுதல்வாதிகளின்  முகாமில் கான்ட்டைச்
சேர்ப்பதற்கு எங்கல்ஸ் தயங்கினாலும் கூட,
சாராம்சத்தில் கான்ட்டின் தத்துவம் என்பது
கருத்துமுதல்வாதமே. இதுதான் நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் கருத்து. இந்தக்
கருத்துதான் பொருள்முதல்வாத வகுப்பிலும்
.சொல்லப்பட்டது. அருள்கூர்ந்து கட்டுரையின்
இறுதிப் பத்தியை மீண்டும் படிக்குமாறு
வேண்டுகிறேன்.
   


வேறு நாதி இல்லை!
------------------------------------
இயற்கையின் இயக்கவியல் (Dialectics of Nature) என்ற
எங்கல்சின் புத்தகம் பொருள்முதல்வாதத்தின்
மிக முக்கியமான புத்தகம் என்று மார்க்சியம்
கருதுகிறது.

இந்தப் புத்தகம் மார்க்சியர்கள் பலரிடமும்
இருக்கக் கூடும். அதைப் படித்து முடித்து
விட்டதாக மார்க்சியர்கள் கூறக்கூடும்.
நல்லது. ஆனால் அந்தப் புத்தகத்தை எத்தனை
பேர் புரிந்து கொண்டார்கள் என்பதும்
எந்த அளவுக்குப் புரிந்து கொண்டார்கள்
என்பதும் மிகவும் முக்கியம்.

எங்கல்சின் இயற்கையின் இயக்கவியல் என்ற
அந்தப் புத்தகம் பெருமளவு அறிவியல்
புத்தகம். It is a science book.

குறைந்தபட்சமாக ப்ளஸ் டூ வகுப்பு வரையிலான
Maths, Physics, Chemistry பாடங்களில் நல்ல அறிவு
இருந்தால் மட்டுமே அந்தப் புத்தகத்தைப்
புரிந்து கொள்ள முடியும்.

நைட்ரஸ் ஆக்சைடுக்கும் நைட்ரஜன்
பென்டாக்சைடுக்கும் உள்ள  வேறுபாடு என்ன
என்று வாசகர்களைக் கேட்கிறார் எங்கல்ஸ்
அந்தப் புத்தகத்தில்.

நைட்ரஸ் ஆக்ஸைடு = Nitrous Oxide = N2O
நைட்ரஜன் பென்டாக்ஸைடு = Dinitrogen Pentoxide = N2O5.

கெமிஸ்ட்ரி, சயன்ஸ் இதெல்லாம் மார்க்சியத்தில்
எதுக்கு சார் என்ற கேள்வியை மார்க்சிய
அன்பர்கள் (shallow readers of Marx) கேட்கக் கூடும்.

இன்று இந்த 2018ல் தமிழ்நாட்டில் ஒரு கோடிப்பேர்
ப்ளஸ் டூ  மட்டத்தில் அறிவியல் கற்றவர்கள்
(Maths Physics Chemistry  படித்தவர்கள்) இருக்கிறார்கள்.
கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கோடிப்பேர். இவர்களில் 
 பெரும்பாலோர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவர்களிடம் ஏங்கல்ஸ் கூறிய அறிவியலைக்
கொண்டு செல்ல வேண்டாமா?

கொண்டு செல்ல வேண்டும் அல்லவா? அதைக்
கொண்டு செல்லும் வேலையை நியூட்டன்
அறிவியல் மன்றம் செய்கிறது. நியூட்டன்
அறிவியல் மன்றத்தை விட்டால், எங்கல்ஸின்
அறிவியலைக் கொண்டு செல்ல வேறு
நாதியில்லை. இதுவே உண்மை.
   



         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக