வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞர்: ஒரு மார்க்சிய  லெனினிய மதிப்பீடு!
-------------------------------------------------------------------------------
 நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
கரும்பை அடியில் இருந்து சுவைத்தது போல
உள்ளது கலைஞரின் அரசியல். கலைஞரின்
தொடக்க கால அரசியல் இந்தி எதிர்ப்பு, தமிழ்
உணர்வு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு ஆகிய
முற்போக்குக் கூறுகளை உள்ளடக்கமாகக்
கொண்டது. தமது பேச்சாற்றல் எழுத்தாற்றலால்
மேற்கூறிய முற்போக்குக் கூறுகளை தமிழ்ச்
சமூகத்தின் சிந்தனையில் ஆற்றலுடன்
செலுத்த அவரால் முடிந்தது.

இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி
நிலையை உறுதியுடன் எதிர்த்ததும், இந்திராவின்
பாசிசப்போக்கை எதிர்த்த பல தலைவர்களுக்கு
தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்ததும், இதன்
விளைவாக ஆட்சியையே இழந்ததும் கலைஞரின்
சிறப்புகளாகும்.

தமிழ் ஈழ ஆதரவு மனநிலையை தமிழ்ச்
சமூகத்தில் உருவாக்குவதில் கலைஞர்
வெற்றி பெற்றார். ராஜிவ் படுகொலையின்பின்
பொய்யான ராஜிவ் கொலைப்பழியை
கலைஞர் சுமந்தார்.அதற்கு முன்னரே
ஈழ ஆதரவு காரணமாக ஆட்சியையும்
இழந்திருந்தார். இவை அவரின் நேர்மறையான
பங்களிப்புகளாகும்.

அதன் பின்னரான அவரின் இறுதிக்கட்ட அரசியல்
முற்போக்கு அம்சங்கள் எதுவுமற்று வறண்டது.
ராஜிவ் படுகொலையோடு தமது ஈழ ஆதரவு
நிலைபாட்டுக்கும் முடிவுரை எழுதினார் கலைஞர்.

2009 தமிழ் ஈழ இறுதிக் கட்டப் போரில்
தமது செயலற்ற நிலை காரணமாக
உலகத் தமிழினத் தலைவர் என்ற கெளரவத்தையும்
முற்றாக இழந்திருந்தார் கலைஞர்.

ஊழல், சொத்துக்குவிப்பு, நில அபகரிப்பு,
குடும்ப அரசியல், திமுக என்னும் கட்சியையே
அனைத்து மட்டத்திலும் வாரிசுகளின் கட்சியாக
ஆக்கியது, பதவி வேட்கை, சகல கொள்கைகளிலும்
சமரசம், சோதிடப்பித்தின் காரணமாக
மஞ்சள் துண்டு அணிந்து ஏற்கனவே நீர்த்துப் 
போயிருந்த பகுத்தறிவை முற்றிலுமாகக்
கைவிட்டது என்று இத்தகைய எதிர்மறை
அம்சங்களின் திரட்சியாகவே கலைஞரின்
இறுதிக்கட்ட அரசியல் ஆகிப்போனது.

அம்பலப் படுவதற்கோ அல்லது அம்பலப்
படுத்துவதற்கோ இனி எதுவும் எஞ்சி
இருக்கவில்லை என்ற நிலையை அடைந்த
பிறகே கலைஞர் மரணம் அடைந்துள்ளார்.

கலைஞரின் 95 ஆண்டுகால வாழ்வின்
பாலன்ஸ் சீட் இதுதான். அவரால் தமிழுணர்வு
பெற்ற, அவரால் பகுத்தறிவை ஏற்ற
போன தலைமுறையினர் இன்றும் இச்சமூகத்தில்
வாழ்ந்து கொண்டு .இருக்கின்றனர். கலைஞரின்
கடந்த கால முற்போக்குப் பாத்திரத்தை அறியாத,
நிகழ்கால சமரசங்களை மட்டுமே அறிந்த
இளைய தலைமுறை கலைஞரை வெறுக்கிறது.

எங்கள் தலைமுறையில் கலைஞர் தமிழர் அல்லர்
என்று எவரும் கனவில்கூட நினைத்ததில்லை.
இன்றைய தலைமுறை கலைஞர் தெலுங்கர்
என்பதற்கான ஆதாரங்களை தமிழ்ச்
சமூகத்தின்முன் வைத்துள்ளது. கலைஞரும்
இதை மறுக்கவில்லை.

இருப்பினும் கோடிக்கணக்கான சூத்திர மக்கள்
தங்களின்  தலைவராக கலைஞரை
அடையாளம் கண்டனர். எதிரிகளும்
கலைஞரையே சூத்திரர்களின் தலைவராக
இனங்கண்டு குறி வைத்தனர். இது வரலாறு.

ஜெயலலிதாவுக்கு மிக எளிதாக கடற்கரையில்
சமாதிக்கு இடம் கிடைத்து விட்டது. ஆனால்
கலைஞருக்கு அது மறுக்கப் படுகிறது.
இந்நிலையில் மௌனப் பார்வையாளராக
சமூக உணர்வு கொண்ட எவரும் இருக்க
முடியாது.  இந்த விஷயத்தில் கலைஞரை
ஆதரிக்க வேண்டிய சமூக நிர்ப்பந்தம்
ஏற்பட்டு விடுகிறது. இப்படித்தான் கடந்த
காலத்திலும் பல்வேறு நிகழ்வுகள் கலைஞரை
எளிய மக்களின் தலைவராக்கின.

சமூகம் எங்ஙனம் இயங்குகிறது என்னும்
social dynamics அறவே தெரியாத மூடர்களால்
இதைப்புரிந்து கொள்ள முடியாது.

நல்லதொரு மாற்று கிட்டும் வரை மக்கள்
கலைஞரையே, அவர் விட்டுச் சென்ற
அரசியலையே .ஆதரிப்பார்கள். தங்கள்
முன் உள்ள மிகச்சிறந்த மாற்றையோ,
மிகச்சிறந்த தலைவரையோ புறக்கணித்து
விட்டு, மக்கள் கலைஞரை ஆதரிக்கவில்லை.
எனவே மக்களைக் குறை சொல்வதற்கில்லை.

சமூக இழிவுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட
ஒரு கடைக்கோடிச்  சமூகத்தில் இருந்து  வந்து
அதிகார சிம்மாசனங்களை அடைந்தவர்
கலைஞர். வலிமையான சாதிப் பின்புலம்
ஏதுமற்றவர் கலைஞர். மதிப்பீடுகள் (values)
ஏதுமற்ற ஒரு சாதியில், ஏழ்மையான ஒரு
குடும்பத்தில் பிறந்து, பணம் செல்வம் அதிகாரம்
புகழ் என அனைத்தையும் ஒருசேர அனுபவிக்கும்
வாய்ப்பைப் பெற்ற கலைஞர் எப்படி நடந்து
கொண்டார் என்பது அனைவரும் அறிந்த
வரலாறே.காஞ்ச மாடு கம்மங் கொல்லையில்
விழுந்து புரள்வது இயல்பே.  

கலைஞரை வீரதீரசூரத்துடன் விமர்சிப்பது
போல், காமராசரை நியாயமான முறையில்கூட
எவரேனும் விமர்சிக்க இயலுமா? இயலாது.
முதுகுத் தொலியை உரித்து விடுவார்கள்
நாடார் பெருமக்கள். ஆனால் கேட்க நாதி
இல்லாத சாதி என்பதால், கலைஞர் மீது
கோழையும் வீரம் காட்டுவான். கலைஞரை
விமர்சிக்கக் கூடாது என்று இதற்குப்
பொருளல்ல. நிலவுடைமை மதிப்பீடுகள்
நீடிக்கும் ஒரு சாதிய சமூக அமைப்பில்,
பொருளியல் ஏற்றமானது சாதிய இழிவைத்
துடைத்தெறிந்து விடுவதில்லை.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்
செயல்படுத்திய திராவிடக் கருத்தியல்
சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்டதில்லை.
எனவே நூறாண்டு கால திராவிடக் கருத்தியல்
பார்ப்பனர்களுக்குப் பதில் இடைச்
சாதியினரின் (பிற்பட்ட சாதியினர்)
ஆதிக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர,
சாதியின் ஆணிவேரை அசைத்துக் கூடப்
பார்க்கவில்லை. அன்று பார்ப்பன ஆதிக்கம்.
இன்று சூத்திர ஆதிக்கம். இது மட்டுமே
வேறுபாடு. கலைஞர் என்ற தனிமனிதர்தான்
அதிகாரத்துக்கு வந்திருக்கிறாரே தவிர,
கலைஞரின் சாதியானது ஆதிக்கத்துக்கு
வந்துவிடவில்லை. அல்லது சாதியம் ஒழிந்து
விடவில்லை.

ஆக, திராவிடக் கருத்தியல் ஒருநாளும் சாதியை
ஒழிக்காது என்ற உண்மையையும் கலைஞரின்
95 ஆண்டு கால வாழ்க்கை  வெளிப்படுத்தி
இருக்கிறது.சாதி ஒழிப்புக்கான சரியான
செயல்திட்டத்தை மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள்
வகுத்துச் செயல்பட்டு வெற்றி காணும் வரை,
கலைஞர் மறைந்தாலும், இரண்டாம் கலைஞரையும்
மூன்றாம் கலைஞரையுமே மக்கள் தங்களின்
நாயகர்களாக ஏற்பார்கள்.  தங்களை ஆளும்
உரிமையை அவர்களுக்கே வழங்குவார்கள்.
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
கலைஞர் = உழைப்பு. இது கலைஞரிடம்
கற்க வேண்டிய பாடம்.
**************************************************

கலைஞரை விமர்சிப்பது என்பது அவர்
முன்வைத்துச் செயல்படுத்திய அரசியலை
விமர்சிப்பதாகும். கலைஞர் செயல்படுத்திய
அரசியல் என்பது பெரியாரும் அண்ணாவும்
உருவாக்கிய தத்துவத்தின் விளைவு.
பெரியாரியம் என்றும் திராவிடக் கருத்தியல்
என்றும் அறியப்படும் இத்தத்துவத்தை
உருவாக்கியவர்கள் பெரியாரும் அண்ணாவுமே
ஆவர். அவர்கள்தான் கோட்பாட்டாளர்கள்
(theoreticians). கலைஞர் கோட்பாட்டாளர் அல்லர்.

திராவிட இயல் வெற்றி அடைந்துள்ளது.
என்ன வெற்றி? எதில் வெற்றி? தமிழ்ச்
சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கத்தை
முற்றிலுமாக முறியடிப்பதில் வெற்றி
பெற்றுள்ளது.

அப்படியானால், பார்ப்பனீயம் முறியடிக்கப்பட்டு
சாதியம் ஒழிக்கப்பட்டு விட்டதா? இல்லை.
பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பதில் சூத்திர
ஆதிக்கம் ஏற்பட்டு உள்ளது. ஒரு ஆதிக்கத்துக்குப்
பதில் இன்னொரு ஆதிக்கம். அவ்வளவுதான்.

பார்ப்பனீயம் எப்படி கெட்டி தட்டிப்போய்
அப்படியே சூத்திர ஆதிக்கமும் இன்று கெட்டி
தட்டிப்போய் உள்ளது. இதுவே திராவிடக்
கருத்தியலின் சாதனை. திராவிடக் கருத்தியல்
என்பது சாதி ஒழிப்புக்காக உருவாக்கப்
பட்டதல்ல. பார்ப்பன ஆத்திக்கத்தை ஒழித்து
சூத்திர ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏற்படுத்தப்
பட்ட தத்துவமே திராவிடக் கருத்தியல். 
 

வருணம் வெகுகாலத்துக்கு முன்பே
ஆயிரம் ஆண்டுக்கு முன்பே சாதியாகப்
பரிணமித்து விட்டது. பார்ப்பனிய ஆதிக்கத்தை
ஒழிப்பது சுலபமாக முடிந்து விட்டது. ஆனால்
சூத்திர ஆதிக்கத்தை அவ்வளவு சுலபமாக
ஒழிக்க முடியாது.

கடவுள் மறுப்பாளராக யாரால் இருக்க இயலும்?
உழைத்துச் சம்பாதிப்பவர்களால் மட்டுமே
கடவுள் மறுப்பாளர்களாக இருக்க இயலும்.
முறைகேடான வழியில் பணம்
சம்பாதிக்கும்போது, சம்பாதித்த பணத்தை
பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில்
கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை எல்லாம்
வந்து விடும்.

கிரேக்கத்திலும் ஐந்து கோள்கள்தான்.
பூமி முழுவதிலும் இருந்து பார்த்தபோது,
வெறுங்கண்ணால் பார்க்க முடிந்தவை
ஐந்து கோள்கள் மட்டுமே. அவற்றோடு
சூரியனையும் சந்திரனையும் சேர்த்து
வாரத்தின் நாட்கள் ஏழு என்றானது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக