செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

ஆரியமும் பொய்! திராவிடமும் பொய்!
இனம், மரபினம், தேசிய இனம் பற்றிய விளக்கம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
அன்றாட வாழ்க்கையில் இனம் என்ற சொல்லைப்
பெருமளவு பயன்படுத்துகிறோம். இனம் என்ற சொல்
மரபினம் (ethnic race), தேசிய இனம் (nationality) என்ற
இருவேறு கருத்தாக்கங்களையும் குறிக்கும்.

ஆரியம் என்றோ திராவிடம் என்றோ மரபினமும்
இல்லை; தேசிய இனமும் இல்லை. இது அறிவியல்
ரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இதுவே
இந்தியா முழுமையும் வாழும் மக்கள்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு
உண்மை.

மரபினம் என்பது காலத்தால் முற்பட்டது;
தொன்மையானது. தேசிய இனம் என்பது
முதலாளித்துவ சமூகம் உருவானபின்
தோன்றியது.

தமிழன், மலையாளி, வங்காளி ஆகியவை
இந்தியாவில் உள்ள தேசிய .இனங்கள்.
தேசிய இனங்களின் தோற்றத்துக்கு மொழியும்
ஒரு காரணம். இந்தியாவில்  சீக்கியர்கள்
ஒரு தனித்த தேசிய இனமாக உள்ளனர்.
இது மத அடிப்படையிலான தேசிய இனம்.

சீனர்களும் ஜப்பானியர்களும் வெவ்வேறு
தேசிய இனங்கள். சீனா, ஜப்பான் என்ற
வெவ்வேறு  நாடுகளில் அவர்கள் .வாழ்கிறார்கள்.
ஆனால் சீனர்களும் ஜப்பானியர்களும் ஒரே
மரபினத்தைச் சேர்ந்தவர்கள். 

நீக்ரோக்கள் எனப்படும் கறுப்பர்கள்
ஆப்பிரிக்காவில் வெவ்வேறு நாடுகளில்
வாழ்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு
தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் கறுப்பர்கள் என்ற ஒரே மரபினத்தைச்
சேர்ந்தவர்கள். நிற்க.

ஆரியம் என்பது ஒரு மொழிக்குடும்பம். அது
மரபினம் அல்ல. அது போல ஆரியம் ஒரே
தேசிய இனமும் அல்ல.

ஆரிய மரபினம் (Aryan race) என்று ஆளாளுக்கு
ஒரு வரையறையைச் சொல்கிறார்கள்.
சொல்லட்டும். அது அறிவியல் வழியில்
ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே
உண்மையாகும். ஆரிய மரபினக் கோட்பாட்டை
அறிவியல் உறுதியுடன் நிராகரிக்கிறது.

தென்னிந்தியாவில் ஆரிய மொழிக்
குடும்பத்தைச் சாராத தமிழ் மொழிக்
குடும்பம் இருந்தது. தமிழில் இருந்து
பிரதேச ரீதியாகப் பல மொழிகள் கிளைத்தன,
அவற்றுள் பல வழக்கு வீழ்ந்தன.

தமிழ் என்ற சொல்லை சம்ஸ்கிருத மொழியில்
வட இந்திய மக்கள் திராவிடம் என்று
அழைத்தனர். என்றாலும் தமிழில் திராவிடம்
என்ற சொல் மிகவும் பிந்திய காலத்தில்தான்
வந்து சேர்ந்தது. கால்டுவெல் பாதிரியாரே
திராவிடம் என்ற சொல்லைப் பெருவழக்காக
ஆக்கினார்.

சங்க இலக்கியங்களிலோ தொல்காப்பியத்திலோ
திராவிடம் என்ற சொல் கிடையாது. சிலம்பு,
மேகலை போன்ற காப்பியங்களிலும் திராவிடம்
என்ற சொல் கிடையாது. ஆரிய என்ற சொல்
உயர்ந்தோர் என்ற பொருளில் கம்ப
ராமாயணத்தில் வழங்குகிறது. ஆனால்
திராவிடன் என்ற சொல்லைக் கம்பன்
ஆளவில்லை.

கால்டுவெல்லுக்கு முந்திய மொழியியல்
ஆய்வாளர்கள் தமிழ் மொழிக் குடும்பத்தை
தமிழம் என்றே குறித்தனர். திராவிடம் என்ற
சொல்லை அவர்கள் ஆளவில்லை. முதன் முதலில்
கால்டுவெல் பாதிரியார்தான் திராவிட
மொழிக்குடும்பம் என்ற சொல்லால்
குறிப்பிடுகிறார்.    

கால்டுவெல் இவ்வாறு குறிப்பிடுவதற்கு
திட்டவட்டமான உள்நோக்கம் உண்டு.
காலனியாதிக்க ஆட்சியாளர்களின் நலன்
இதில் புதைந்து  கிடக்கிறது. விந்திய மலைக்கு
வடக்கிலும் தெற்கிலுமாக இந்திய மக்களை
ஆரியர் என்றும் திராவிடர் என்றும் பிரித்து
விடுவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்
இன்றியமையாத தேவையாக இருந்தது.

காலங்காலமாக திராவிடம் என்ற சொல்லாட்சி
இருக்குமானால், சங்க இலக்கியங்களில்,
பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும்
ஏன் இல்லை?

சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களான
திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் ஏன் இல்லை?  சிலப்பதிகாரத்தில்
ஏன் இல்லை?

எனவே திராவிடம் என்ற மொழிக்குடும்பம்
என்று சொல்வதே தவறு. கால்டுவெல்லுக்கு
முன் தமிழ்மொழிக்குடும்பம் என்றே
வழங்கப் பட்டது.

ஆக, திராவிடம் என்று மரபினமும் இல்லை.
தேசிய இனமும் இல்லை. மொழிக்குடும்பமும்
இல்லை. இதுவே உண்மை. கால்டுவெல்லை
ஏற்று, திராவிட மொழிகள் என்று சொல்ல
வேண்டிய தேவையும் இல்லை. தமிழ் மொழிக்
குடும்பம் என்ற பெயரை மீட்டெடுப்போம்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின்
தாசர்கள்தான், பிரிட்டிஷாருக்குத் தங்கள்
விசுவாசத்தைக் காட்டி வெகுமதி பெறும்
நோக்கத்துடன் திராவிடம் என்ற சொல்லைப்
பெருவழக்காக ஆக்கினர். வரலாற்று ரீதியாக
திராவிடம் என்ற கருத்தாக்கம் என்றுமே
இருந்ததில்லை. இதுதான் உண்மை.
************************************************     
  


      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக