திங்கள், 6 ஆகஸ்ட், 2018

இளங்கோ பிச்சாண்டிக்கு ஒரு மறுப்பு!
பகுதி-1
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்!
---------------------------------------------------------------------
ஞானி
------------------------------------------------------------------
நீ பொருள்முதல்வாதியா?
அல்லது கருத்து முதல்வாதியா?
இப்படி வினவுகிறார் இளங்கோ பிச்சாண்டி.அல்லது
அப்படி வினவுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம்
நாள் உயிர்த்தெழுந்தார். நீ ஒப்புக் கொள்கிறாயா
இல்லையா?

ஒப்புக் கொண்டால் நீ கிறித்துவன்;
இல்லையென்றால் நீ நாத்திகன் என்பது போல்
இருக்கிறது பிச்சாண்டியின் அணுகுமுறை.

தோழர் எஸ் என் நாகராஜன் பாணியில் இதற்குப்
பதில் சொல்லலாம்.

எங்கல்சின் புகழ் பெற்ற அழகிய ஒரு சிறு நூல்
"End of German classical philosophy." இந்த நூலில் அவர்
உலகில் உள்ள எல்லாத் தத்துவங்களையும்
பொருள்முதல்வாதம் என்றோ கருத்துமுதல்வாதம்
என்றோ பிரித்து விடலாம் என்கிறார்.

இப்படிக்கூறிய எங்கல்ஸ், இந்த இரண்டு
வகையிலும் சேராத தத்துவங்களும் உண்டு
என்கிறார். டேவிட் ஹியூமின் (David Hume)
தத்துவத்தையும் categorical imperative பற்றிக் கூறும்
இமானுவேல் கான்ட்டையும் எங்கல்ஸ்
குறிப்பிடுகிறார்.

ஒருவரைப் பொருள்முதல்வாதி என்று உறுதியாகச்
சொல்லிவிட முடியாது. காரணம் பொருள் என்பது
வெளிப்படையாகப் பார்க்கும்போது திண்ம
வடிவில் இருக்கலாம்.நுணுகிப் பார்க்கும்போது
இறுதியாக நுண்மங்கள் என்ற எல்லைக்குப்
போய் விடுகிறது.

நுண்மங்களுக்கு நிறை இல்லை. எலக்ட்ரான்
மைக்ராஸ்கோப்பிலும் இவற்றைப் பார்க்க
முடியாது.அந்த அளவுக்கு இவை நுண்மங்கள்.
அதாவது இவை நுண்மங்களாக இருக்கின்றன
என்று கருதுவதைத் தவிர (abstract idea) வேறு வழி
இல்லை.இந்த இடத்தில்தான் குவான்டம்
கோட்பாட்டாளர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.
நமக்குத் தலை சுற்றுகிறது.

பெரியார் பொருள்முதல்வாதிதான். மார்க்சியனும்
பொருள்முதல்வாதிதான். என்றாலும்
இவ்விருவருக்கும் இடையில் பெருத்த வேறுபாடு
இருக்கிறது. ஒரு மார்க்சியவாதி தன்னைப்
பொருள்முதல்வாதி என்று சொல்லிக்
கொண்டிருக்கிற அதே சமயத்தில் வர்க்கப்
போராட்டம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம்,
இயங்கியல் என்றெல்லாம் பேசுவான்.
பெரியாருக்கு இவை எல்லாம் இல்லை.

அனுபவவாத விமர்சனம் (Empirio Criticism) என்ற
நூலில் பொருள்முதல்வாதம் (materialism) என்பதற்கு
லெனின் வரையறை கூறுகிறார்.

"எனக்கு முன்னும் (இறந்த காலத்தில்), எனக்குப்
பின்னும் (எதிர்காலத்தில்) எது இருக்கிறதோ,
என் புலன்களை எது பாதிக்கிறதோ, அது
பொருள் (matter) என்று வரையறை செய்தார்.
இந்த வரையறையில் தன்னிலை பற்றி, அதாவது
தான் என்ற ஒருவனை உள்ளடக்கியதாக
எதுவும் இல்லை. என்றாலும் லெனினின்
வரையறை போற்றப் படுகிறது.

லெனின் காலத்தில் பொருள் என்பது அறவே
மாறி எல்லாமே நுண்மங்கள் ஆகிவிட்டன.
நுண்மங்களை பொருள் என்றும்
சொல்வதற்கில்லை, கருத்து என்றும்
சொல்வதற்கில்லை என்று இயற்பியல்
அறிஞர்கள் கூறத் தொடங்கி விட்டனர்.
இவர்களின் கூற்றுப்படி பார்த்தால்,
பொருள்முதல்வாதம் என்று சொல்வதற்கு
அர்த்தம் இல்லை. இப்படி ஒரு நிலையில்தான்
லெனின் தன் வரையறையை முன்வைத்தார்.

எனக்கு முன்பும் எனக்குப் பின்பும் (இறந்த
காலத்திலும் எதிர்காலத்திலும்) எது இருக்கிறதோ
அது பொருளாகவும் இருக்கலாம்;
வேறொன்றாகவும் இருக்கலாம்.
(கருத்தாகவும் இருக்கலாம்; கருத்து என்பது
நம் மூளைக்குள் நரம்புத் தொடரில்
இடையறாத மின்துளிகளாக ஓடுகிறது.
இதை பொருள் என்று சொல்வதா?
வேறு எப்படி அழைப்பது?)

இப்போது நிலைமை சிக்கலாகி விடுகிறது.
ஒருவரை பொருள்முதல்வாதி அல்லது
கருத்துமுதல்வாதி என்று மேம்போக்காகச்
சொல்லலாமே தவிர, ஆழமாகச் சென்றால்
சிக்கலாகி விடுகிறது. கருத்தையும் ஒரு
வகையில் நுண்ணிய பொருள் என்று
சொல்லலாம் போலத் தோன்றுகிறது.

தோழர் எஸ் என் நாகராஜன் பாணியில்
மீண்டும் ஒரு பதில் சொல்கிறேன்.
கடவுள் உண்டா இல்லையா என்ற  கேள்வியோடு
புத்தரிடம் ஒருவர் வந்தார்.அம்பு தைத்துக்
காயமுற்றுக் கிடைக்கும் ஒருவனை  முதலுதவி
செய்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல
வேண்டுமே தவிர, அம்பு எப்படித் தைத்தது,
எய்தவன் யார், அவன் எப்படி இருந்தான்
என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டு
இருக்கக் கூடாது; இப்படிக் கேள்வி கேட்பது
காயமுற்றவனின் துயரைத் தீர்க்காது என்று
பதில் சொன்னாராம் புத்தர்.

நீ பொருள்முதல்வாதியா கருத்துமுதல்வாதியா
என்று கேட்பது மேற்கூறிய புத்தரின் கதையில்
வருகிற கேள்வி போன்றது. அது துயர்  தீர்க்கும்
கேள்வி அல்ல.

இந்த 2018ல் பல்வேறு வகையான தூரங்களுக்கு
நாம் ஆளாகி உள்ளோம். பன்னாட்டு
நிறுவனங்களும் அவற்றின் கட்டளைக்குக்
கீழ்ப்படியும் அரசுகளும்  மக்களின் துயரத்தை
மேலும் அதிகரிக்கின்றன. இவற்றில் இருந்து
விடுபடுவது எப்படி? இப்படித்தான் விவாதத்தைத்
தொடங்க வேண்டும்.

நமது துயரங்களுக்குக் கடவுள் காரணம் அல்ல.
முற்றிலும் பொருளியல் வகைப்பட்ட
காரணங்களாலேயே நாம் துயரம் அடைகிறோம்
என்றுதான் விவாதத்தைத் தொடர வேண்டும்.
இப்படி விவாதத்தைத் தொடங்குபவரே
மார்க்சியவாதி. மார்க்சியத்தை நம் காலத்தில்
இப்படித்தான் ஒருவருக்கு அறிமுகப் படுத்த
வேண்டும். இதற்கு மாறாக, கடவுள் உண்டா
இல்லையா என்று பேசுவதில் அர்த்தம் இல்லை.
ஆனால் இளங்கோ பிச்சாண்டி விவாதத்தை
இப்படித் தொடங்கவில்லை

ஒருவரை மார்க்சியரா அல்லது மார்க்சியத்துக்கு
எதிரானவரா என்று தீர்மானிப்பதற்கு, அவர்
பொருள்முதல்வாதியா அல்லது
கருத்துமுதல்வாதியா என்று கேட்பதில்
பொருளில்லை. கடவுள் நம்பிக்கை உள்ள
ஒருவரும் போல்ஷ்விக் கட்சியில் உறுப்பினராக
இருக்க முடியும் என்றார் லெனின். அதாவது
கட்சியின் செயல்பாட்டில் உடன்பாடு
இருக்குமானால், ஒரு கருத்துமுதல்வாதியும் கூட
கட்சிக்குள் இருக்க முடியும் என்றார் லெனின்.

ஒரு கருத்து ஒருவனைப் பற்றிக் கொண்டால்,
அக்கருத்தே பொருளாயத சக்தியாக மாறி
அவனைச் செலுத்தும். இது மார்க்சியத்தின்
பிரபலமான கூற்று. இது ஒரு அற்புதமான கூற்று.

கருத்து ஒருவனைப் பற்றிக் கொண்டால், அவன்
பொருளாகி விடுகிறான்; சக்தியாகி விடுகிறான்.
இங்கு கருத்துக்கும் பொருளுக்கும் உள்ள
அற்புதமான பிணைப்பு சொல்லப் படுகிறது.
கருத்தும் பொருளும் இணைகிற புள்ளி இது.

அறிவியல் ஆய்வு என்னும் கருத்து ஒரு
விஞ்ஞானியைப் பற்றிக் கொள்ளுமானால்,
அவர் பசி தாகம் மறந்து, தூக்கம் மறந்து
ஆராய்ச்சியையே ஒரே குறியாகக் கொண்டு
அதிலேயே முற்றிலுமாக ஈடுபடுகிறார்.
மார்க்சின் வாழ்வில் அளவற்ற துன்பங்கள்
இருந்தபோதிலும், அவற்றைப்
பொருட்படுத்தாமல் மார்க்ஸ் ஆய்வில்
ஈடுபட்டார். கருத்து ஒருவரைப் பற்றிக்
கொள்ளுமென்றால் அது மாபெரும் பொருளாயத
சக்தியாகி விடுகிறது என்பது இதுதான்.
------------------------------------------------------------------------
தொடரும்....அடுத்து: மதம் பற்றி.
***********************************************
     



        

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக