வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மார்க்சிய அறிஞர் சமீர் அமின் மறைந்தார்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
உலகப் புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் சமீர் அமின்
(Samir Amin 1931-2018) அண்மையில் ஆகஸ்டு 12ல்
மறைந்தார். எகிப்து நாட்டில் கெய்ரோ நகரில்
பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் எகிப்தில்
வாழ்ந்தார். அன்றைய எகிப்து அதிபர் நாசர்
கம்யூனிஸ்டுகளை ஒடுக்க ஆரம்பித்ததும்
இவர் பிரான்சுக்கு வந்து அங்கேயே பலகாலம்
வாழ்ந்தார் தம் வாழ்நாளின் இறுதிப்பகுதியில்
இவர் மேற்கு ஆப்பிரிக்காவின் செனெகல் (Senegal)
என்னும் நாட்டில் வாழ்ந்தார். அரசியல்
பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

இஸ்லாமியரான இவர் இஸ்லாமிய மதம் சார்ந்த
அரசியலை முற்றிலும் நிராகரித்தவர். மேலும்
இவர் ஒரு தீவிர நாத்திகரும் ஆவார்.

ஆரம்ப காலத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியோடு
இவருக்குத் தொடர்புகள் இருந்த போதிலும்,
தம் வாழ்நாள் முழுவதும் இவர் எந்தக் கம்யூனிஸ்ட்
கட்சியிலும் இணைந்து பணியாற்றவில்லை.
இவர் ஒரு மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologist) ஆவார்.
அதே நேரத்தில்,உலக சமூக அரங்கம்
(World Social Forum) என்னும் அமைப்பின் முக்கியத்
தலைவர்களில் இவர் ஒருவர். 

கம்யூனிஸ்ட் கட்சியில் சேராமல், அதே நேரத்தில்
மார்க்சியத்தைக் கற்றுத் தேறி, மார்க்சியத்திற்கு
பங்களிப்புச் செய்யும் அறிஞர்கள்
மார்க்ஸாலஜிஸ்டுகள் என்று  அழைக்கப்
படுகிறார்கள். மார்க்ஸாலஜி (Marxology),
மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologist) ஆகிய 
பதங்களையும் அவற்றின் பிரயோகங்களையும்
முதன் முதலாக தமிழ்ச் சமூகத்திற்கு
அறிமுகம் செய்து வைத்தது நியூட்டன்
அறிவியல் மன்றமே என்பது வாசகர்களுக்கு
நினைவிருக்கும். (இது குறித்த எமது பழைய
கட்டுரைகளை வாசகர்கள் படிக்கலாம்).

உலக முதலாளித்துவத்தைக் கடுமையாக
எதிர்த்தவர் சமீர் அமின். 1) நிதி மூலதனம்,
2) தொழில்நுட்பம், 3) ஆயுதங்கள், 4) இயற்கை
வளங்களைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பு ,
5)  ஊடகங்கள் ஆகிய ஐந்து அம்சங்களைத்
தன் கையில் வைத்திருக்கும் உலக
ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல் உலகம்
உருப்படாது என்றார் சமீர் அமின்.

உலகை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கும்
இவரின் கொள்கையின்படி, ஏகாதிபத்திய
நாடுகளை மையம் (core) என்றும் சுரண்டப்படும்
நாடுகளை எல்லையோரம் (periphery) என்றும்
வகைப்படுத்தினார்.

இவரின் இன்னொரு அரசியல் பொருளாதாரக்
கொள்கை இணைப்புத் துண்டிப்பு (delinking)
என்பது. ஏகாதிபத்தியத்தின் பிடியில்
இருந்து உலகமயப் பொருளாதாரத்தில்
இருந்து சுரண்டப்படும் நாடுகள் தங்களைத்
துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே
இக்கொள்கை.

உலகம் ஒரு குடையின் கீழ் வந்து விட்டது.
உலகமயத்தின் மூலம் உலகளாவிய
முதலாளித்துவச் சுரண்டல் உறுதிப்பட்டு
வருகிறது. அதே நேரத்தில் உலகளாவிய
பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையோ
அல்லது உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே
கருத்துப் பரிமாற்றமோ, ஒருமைப்பாடோ
சாத்தியமாகவில்லை.

இச்சூழலில் சமீர் அமின் போன்றவர்கள்
முக்கியத்துவம் பெறுகின்றனர். குறிப்பாக
ஆப்பிரிக்க நாடுகளில் இவருக்குச் செல்வாக்கு
இருக்கிறது.

இவரின் ஆய்வு முடிவுகள், பொருளாதாரக்
கொள்கைகளில் ஏற்புடையவற்றை
இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள்
ஏற்றுக் கொள்ளலாம்.
நம் நாட்டுக்குப் பொருந்தாதவற்றை
நிராகரிக்கலாம்.
********************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக