வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

மார்க்சிய ஜெய்னுலாப்தீன்களும்
மறைந்த மார்க்சிய அறிஞர் சமீர் அமினும்!
சமீர் அமின் பற்றிய கட்டுரையின் 2ஆம் பகுதி!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
"தோழர்" ஜெய்னுலாப்தீன் தவ்ஹீத் ஜமாத் என்னும்
இஸ்லாமிய அமைப்பின் தலைவர். இவருக்குரிய
சிறப்பு என்னவெனில், இவரைப் பின்பற்றுவோர்
இஸ்லாமிய மதத்தையம் தாண்டி வெளியிலும்
உள்ளனர் என்பதே. அவரே எதிர்பார்க்காத விதத்தில்
மார்க்சிய முகாமில் பல ஜெய்னுலாப்தீன்கள்
பெருவாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

பள்ளிவாசலில் நின்றுகொண்டு அல்லாஹு அக்பர்
என்று கோஷமிடுகிறார் ஜெய்னுலாபிதீன்.
தெருவில் நின்றுகொண்டு மார்க்சுஹு அக்பர்
என்று கோஷமிடுகிறர்கள் மார்க்சிய
ஜெய்னுலாப்தீன்கள். இவர்கள் மார்க்சியத்தை
இஸ்லாம் போன்ற ஒரு மதமாகக் கருதுகிறவர்கள்.
இவர்களுக்கும் ஜெய்னுலாப்தீனுக்கும் வேறுபாடு
காண இயலாது.

"முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம்"
என்று ஒரு நூல் எழுதினார் லெனின். 1916ல்
லெனின் எழுதிய இந்நூல் 1917ல் பிரசுரமானது.
மார்க்சிய ஜெய்னுலாப்தீன்கள் இந்த நூலின்
பெயரை அறிவார்கள்; சாரத்தை அல்ல.

லெனின் இந்த நூலை எழுதி 100 ஆண்டுகள்
கடந்து விட்டன. இந்த 100 ஆண்டுகளில்
ஏகாதிபத்தியம் எவ்வளவோ மாற்றங்களை
அடைந்து விட்டது. பழைய உத்திகளைக்
கைவிட்டு புதிய தந்திரங்களைக் கடைப்பிடித்து 
வருகிறது.

மூலதனத்துக்கு ஒரு உலகளாவிய தன்மை
உண்டு என்று மார்க்ஸ் கருதினார். எனவேதான்
உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்ற
முழக்கத்தை முன்வைத்தார்.நிதி மூலதன
ஏற்றுமதி என்னும் ஏகாதிபத்தியப் பண்பை
ஆய்வு செய்த லெனின், அதன் சர்வதேசத்
தன்மையை அன்றே உணர்த்தினார். மார்க்ஸ்
லெனின் கூறியபடியும், அதே நேரத்தில்
அவர்கள் கூறியவற்றையும் தாண்டி இன்றைய
ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளது. பல்வேறு
மாற்றங்களைத் தன்னுள் புகுத்திக் கொண்டுள்ளது.

லெனின் காலத்தில் இல்லாத என்ஜிஓக்கள்
(NGO =Non Governmental Organisation) பிற்காலத்தில்
தோன்றியுள்ளன. தத்துவ அரங்கில்
பின்நவீனத்துவம் தோன்றியுள்ளது. இன்றைய
ஏகாதிபத்தியமானது உலகமயத்தின் மூலம்,
WTO போன்ற  அமைப்புகளின் மூலம் உலகையே
தன் நேரடியான பொருளியல் ஆதிக்கத்தின்
கீழ் கொண்டு வந்துள்ளது. யுத்தம் இல்லாமலே
உலக நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றி
உள்ளது.

இத்தகைய மாற்றங்களைப் பற்றிய துல்லியமான
அறிவு ஒவ்வொரு நாட்டின் மார்க்சியர்களுக்கும்
தேவை. அந்த அறிவைப் பெற லெனின் 1916ல்
எழுதிய ஏகாதிபத்தியம் பற்றிய நூலையும்
தாண்டிச் செல்ல வேண்டும். குறைந்த
பட்சமாக ரோசா லக்சம்பர்க் எழுதிய
மூலதனக் குவிப்பு (Accumulation of capital) என்ற
நூலைப் படித்திருக்க வேண்டும். இந்நூலின்
ஆங்கில மொழிபெயர்ப்பு சென்னை கன்னிமாரா
நூலகத்தில் உள்ளது.

லெனினுக்குப் பின்னர் ஏகாதிபத்திய
அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்களை அறியப்
பலரையும் படிக்க வேண்டும். அந்தப் பலரில்
ஒருவர்தான்  மறைந்த சமீர் அமின்.

சமீர் அமின் ஒரு மார்க்சியவாதி அல்லர்.ஆனால்
அவர் ஒரு மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologist) ஆவார்.
ஏதெனும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து
அக்கட்சியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்
கொள்பவரே மார்க்சியவாதி ஆவார். ஆனால்
மார்க்ஸாலஜிஸ்ட்கள் மார்க்சியத்தை ஏற்றுக்
கொண்ட போதிலும்,எந்த ஒரு கம்யூனிஸ்ட்
கட்சியின் வேலைத்திட்டத்தையும் (party programme)
ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் அல்லர்.
எனவேதான் அவர்கள் மார்க்ஸாலஜிஸ்டுகள்
என்று அழைக்கப் படுகின்றனர்.

மார்க்சியத்தின் வளர்ச்சிப் போக்கில், சமூகத்தில்
மார்க்ஸாலஜிஸ்டுகள் தோன்றுகின்றனர்.
இது இயற்கையே. இதை எந்த ஒரு கம்யூனிஸ்ட்
கட்சியாலும் தடுக்க இயலாது. ஒரு வகையில்
மார்க்சியம் செல்வாக்குப் பெற்றதன்
அடையாளமே மார்க்ஸாலஜிஸ்டுகளின்
தோற்றம் ஆகும்.

மனித சமூக வரலாற்றில் யார் எவராலும்
புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக மார்க்சியம்
ஆகி விட்டதன் விளைவே மார்க்ஸாலஜிஸ்டுகளின்
தோற்றம் என்ற உண்மையை மார்க்சிஸ்டுகள்
உணர வேண்டும். சமீர் அமின் ஒரு மார்க்ஸாலஜிஸ்ட்
ஆவார். மார்க்சியர்களுக்கு உரிய அளவுகோலால்
சமீர் அமினை அளக்க இயலாது. ஒரு வோல்ட்
மீட்டரை வைத்துக் கொண்டு ஒரு செப்புக்
கம்பியின் பருமனை அளக்க முடியாது.

சமீர் அமின் பிராங்பர்ட் சிந்தனையாளர் அல்லர்.
அவரை பிராங்பர்ட் சிந்தனைப் பள்ளியுடன்
ஒப்பிடுவது வேப்பமரத்தையே பார்க்காதவன்
அதைப் பனைமரம் என்று கூறுவதைப்
போன்றது.)அவன் பனைமரத்தையும்
அறியாதவன்).

பிராங்பர்ட் சிந்தனைப்பள்ளி பண்பாட்டு
அம்சத்துக்கே அதிக முக்கியத்துவமும்
அழுத்தமும் தருகிற ஒரு சிந்தனைப் போக்கு.
அடித்தளமான பொருளியல் அம்சத்தை விட,
மேற்கட்டுமானம் எனப்படும் பண்பாட்டு
அம்சத்துக்கே பிராங்பர்ட் சிந்தனையில்
பிரதான இடம் உள்ளது.எனவே அறம் பற்றியும்
மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது
பற்றியும் பிராங்பர்ட் சிந்தனையாளர்கள்
பேசுகின்றனர்.

சமீர் அமின் ஒரு பொருளியல் அறிஞர்.
பொருளியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
அவரின் பங்களிப்பு பல்துறைகள் சார்ந்து
இருந்தபோதிலும், முற்ற முழுக்க அவர்
பொருளியலுக்கே அழுத்தம் தந்தவர்.
உலகம் முழுவதும் அவர் பொருளியல்
அறிஞராகவே கருதப் படுகிறார். அவரை
பண்பாட்டுக்கு அழுத்தம் தரும் பிராங்பர்ட்
சிந்தனையாளராகக் கருதுவது அபத்தம்.

லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க
நாடுகளின் பொருளாதார நிலை குறித்து
காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டு
ஏகாதிபத்தியச் சுரண்டலைப் பெருமளவு
அம்பலப் படுத்தியவர் அவர்.

ஆளும் வர்க்கச் சார்புப் பொருளியலையே  முன்வைத்த இந்தியாவின் அமர்த்தியா சென்,
வங்கதேசத்தின் முகமது யூனுஸ் ஆகிய
பொருளாதார மேதைகளுக்கு நோபல் பரிசு
வழங்கி கெளரவித்த ஏகாதிபத்தியம்
சமீர் அமினுக்கு ஏன் நோபல் பரிசு 
வழங்கவில்லை? இதற்குக் காரணம்
முதலாளித்துவத்தின் சுதந்திரச் சந்தைப்
பொருளாதாரத்தை (free market economy)
இடைவிடாமலும் தீவிரமாகவும் சமீர் அமின்
எதிர்த்து வந்ததும்  அவற்றுக்கு மாற்றை
முன்மொழிந்ததுமே ஆகும். ஐரோப்பிய
மையத்துவம் (Euro centrism) என்பது உறுதியுடன்
எதிர்த்த சமீர் அமினை ஏகாதிபத்தியம்
அங்கீகரிக்காது. 

சமீர் அமீனின் மையம்-ஓரம் (core-periphery)
என்ற கோட்பாட்டையும், இணைப்புத்
துண்டிப்பு (delinking) என்னும் கோட்பாட்டையும்
முந்திய கட்டுரையில் அறிமுகம் செய்திருந்தேன்.
பிரதானமாக, சமீர் அமின் ஒரு "சார்ந்திருத்தல்"
கோட்பாட்டாளர் ஆவார்.( Samir Amin is a dependency
theorist). சார்ந்திருத்தல்  என்னும் கோட்பாடு
(dependency theory) முதலாளித்துவத்தின் சுதந்திர
சந்தைப் பொருளாதாரத்திற்கு நேர் எதிரான
கோட்பாடாகும். சமீர் அமினுக்கு முன்பே
சார்ந்திருத்தல் கோட்பாடு பொருளியலில்
பிரபலமான ஒன்றாகும். சமீர் அமின்
இக்கோட்பாட்டின் தலைசிறந்த சமகாலக்
கோட்பாட்டாளர் ஆவார்.
(One of the best contemporary dependency theorists).

சமகால உலகை ஒற்றைத் துருவ உலகமாக
மாற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி
செய்து வருகிறது. இதை அமெரிக்கா தவிர்த்த
பிற முதலாளித்துவ அமைப்புகளும் நாடுகளும்
கூட எதிர்க்கின்றன. மார்க்சியமும் எதிர்க்கிறது.

இந்த எதிர்ப்பில் சமீர் அமினின் பொருளியல்
கோட்பாடுகள் மார்க்சியத்திற்குப் பயன்படக்
கூடும். எவ்வளவு தூரம் பயன்படும் என்ற
கேள்விக்கு என்னிடம் தற்போது விடை இல்லை.
அதற்கு விடை காண வேண்டுமெனில், சமீர்
அமின் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும்.

குறிப்பாக, சமீர் அமின் எழுதிய "இணைப்புத்
துண்டிப்பு: பல மைய உலகத்தை நோக்கி"
(Delinking: towards a poly centric world) என்ற நூலைப்
படிக்க வேண்டும். இன்னும் அவர் எழுதிய
பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு
சில நூல்களையும் படிக்க வேண்டும். இந்த
நூல்களில் எதையும் நான் இதுவரை
படித்ததில்லை. மாறாக, அவரின் பொருளியல்
கோட்பாடுகள் மீதான சில விமர்சனக்
கட்டுரைகளை மட்டுமே படித்துள்ளேன்.

இதை வைத்துக்கொண்டு சமீர் அமினை
என்னால் மதிப்பிட (Evaluation of Samir Amin) இயலாது.
வட கொரிய அதிபர் கிம் (தற்போதைய அதிபரின்
தந்தை) சமீர் அமினின் பொருளியல்
கோட்பாடுகளை வடகொரியாவில்
செயல்படுத்தினார் என்பது தெரிந்ததே.

சுருங்கக் கூறின், ஏகாதிபத்திய எதிர்ப்பு
முகாமில் உள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும்
பொருளியல் கோட்பாடுகளைக் கொண்டவர்
சமீர் அமின் ஆவார். எவ்வளவு தூரம் சமீர் அமின்
பயன்படுவார் என்பதை ஆராய்ந்து அறிந்த
பின்னரே சொல்ல இயலும். என்றாலும் அவரின்
கொள்கைகள் மார்க்சியர்களின் பரிசீலனைக்கு
ஏற்றவை என்பதை மட்டும் என்னால் உறுதியாகச்
சொல்ல முடியும்.
(நன்கு கவனிக்கவும்: பரிசீலனைக்கு ஏற்றவை).
பரிசீலித்த பின்னர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

சீனாவிலோ ரஷ்யாவிலோ சோசலிசம் நிலவுவதாக
சமீர் அமின் ஒருபோதும் கருதியதில்லை.
சோசலிசம் என்பது ஒரு நீண்ட கால நிகழ்வுப்
போக்கு என்பதே அவரின் கருத்து.
சோஷலிசத்துக்கான நீண்ட பாதை
(A long road to socialism) என்பதையே அவர் கூறி வந்தார்.

லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின்
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்
பிற மூன்றாம் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட்
கட்சிகளின் தலைவர்கள் சமீர் அமின் மறைவுக்கு
அஞ்சலி செலுத்தி உள்ளனர். மாபெரும்
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று
பல கம்யூனிஸ்ட் கட்சிகள் அவருக்குப்
புகழஞ்சலி செலுத்தி உள்ளன.

இந்திய மார்க்சிய முகாமில் சமீர் அமின்
சிறிதளவும் அறிமுகமே இல்லாதவர்.
உலகமயத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது
பற்றி இந்தியாவில் உள்ள எந்தவொரு
கம்யூனிஸ்ட் கட்சியும் எந்தவொரு கொள்கை
அறிக்கையையும் இதுவரை முன்வைக்கவில்லை.
அவ்வப்போது சில நிகழ்வுகளின் மீது எதிர்வினை
ஆற்றுவது என்பதைத் தவிர, இந்தியாவின்
கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகமயத்தை எதிர்க்கும்
காத்திரமான வேலைத்திட்டத்தை
முன்வைக்கவில்லை.

சமீர் அமினின் கோட்பாடுகளைப் பரிசீலித்து
இத்தேக்க நிலையை உடைக்க உதவக்கூடும்.  
*******************************************************  

                  
    
  
        




  



  
  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக