வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

செயல் தலைவரும் ஷெல்லியும்!
காலப்பேழையும் கவிதைச் சாவியும்!
------------------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------
நான் மனுஷ்ய புத்திரனை ஆதரிக்கவில்லை. இதன்
பொருள் நான் அவரின் கவிதைகளை
ஆதரிக்கவில்லை என்பதே. அவரின் மாதவிடாய்க்
கவிதையை மட்டுமல்ல, அவரின் எல்லாக்
கவிதைகளையுமே நான் ஆதரிக்கவில்லை.

இதற்குக் காரணம் அவரின் கவிதைகளை விட
மிகச் சிறந்த கவிதைகளை நான் வாசித்து
இருக்கிறேன் என்பதே.

பாரதிக்குப் பின்னான கவிதை உலகில் முதல்
மூன்று இடங்கள் கீழ்க்காணும் மூவருக்குச்
சொந்தம்.
1. கலைஞர் மு கருணாநிதி
2. துரை சண்முகம்
3. மனுஷ்ய புத்திரன்.

அண்மையில் திமுகவின் செயல்தலைவர் அண்ணன்
தளபதி அவர்கள் எழுதிய கலைஞருக்கான இரங்கல்
கவிதை நாடு முழுவதும் பெரும் செல்வாக்கைப்
பெற்றது. நான்காம் இடத்தை நோக்கி தளபதி
அவர்கள் நகர்கிறார் என்பதை அது
புலப்படுத்துகிறது.

ஏற்கனவே நான்காம் இடத்தில் இருக்கும்
கவிஞர் சினேகனை இது சற்றே சங்கடப்
படுத்துகிறது.  

பாடாண் திணை கையறுநிலைத் துறையில்
அமைந்த தளபதியின் அப்பாடல் சங்கப்
பாடல்களுக்கு நிகரானது.

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.

இனக்குழுச் சமூகத் தலைவன் சாத்தன்
மறைந்த துயரில் புலவர் வடித்த கையறுநிலைக்
கவிதை இது.

ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ் மறைந்தபோது
புரட்சிக் கவிஞன் ஷெல்லி எழுதிய இரங்கற்பா
(An elegy on the death of Keats by Shelly) ஆங்கில இலக்கியத்தில்
சாகாவரம் பெற்றது. செயல்தலைவரின் கவிதை
ஷெல்லியின் கவிதைக்கு   நெருக்கமாக வருகிறது.

I weep for Adonais—he is dead! 
       Oh, weep for Adonais! though our tears 
       Thaw not the frost which binds so dear a head! 
       And thou, sad Hour, selected from all years 
       To mourn our loss, rouse thy obscure compeers, 
       And teach them thine own sorrow, say: "With me 
       Died Adonais; till the Future dares 
       Forget the Past, his fate and fame shall be 
An echo and a light unto eternity!"  

கலைஞரின் காலைப்பேழையும் கவிதைச் 
சாவியும் என்ற கவிதைத் தொகுப்பை 
மனுஷ்ய புத்திரனின் என் படுக்கையறைக்குள் 
யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்ற தொகுப்புடன் 
ஒப்பிட்டுப் பார்த்தால் யார் பெருங்கவிஞர் என்ற உண்மை புலப்படும்.

திராவிட இயக்கத்துக்கு வெளியிலான கவிஞர்கள்
என்று பார்த்தால் முதல் இடத்தில் வீற்றிருப்பவர் 
கவிஞர் துரை சண்முகம். மகஇக கவிஞர் 
இவர். துரை சண்முகத்தின் கவிதையைப்  
படித்த பிறகு ஒவ்வொரு முறையும் அவருக்கு 
ஞானபீடம் வழங்கப்படும் என்ற என் நம்பிக்கை 
மென்மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

கலைஞர் துரை சண்முகம் மனுஷ்ய புத்திரன் சினேகன் ஆகியோருடன் 
செயல் தலைவரும் நால்லதொரு கவிஞராக 
மலர்வார் என்பது என் நம்பிக்கை.

ஐந்தே நேரத்தில் பாஜக தலைமைக்கு ஒரு 
வேண்டுகோள். அருள்கூர்ந்து மனுஷ்ய 
புத்திரனின் படுக்கையறையில் ஒளிந்திருக்கும் ஹெச் ராஜாவை அங்கிருந்து முதலில் வெளியேற்றுங்கள்.
********************************************    

  

 




       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக