திங்கள், 13 ஆகஸ்ட், 2018

வீழ்ந்தவை விருட்சங்கள் மட்டுமல்ல!
---------------------------------------------------------------
வீரை பி. இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------------------------------------
வாய்க்காங் கரை வீட்டுச் சிறுவர்கள்
வாசமடக்கி மரத்தடியில்
முத்துச் செதுக்கி
விளையாடுகிறார்கள்
முத்துக்களை இழந்த சிறுவன்
கொஞ்சம் முத்து கடனாகக் கேட்க
சேக்காளி தர மறுத்ததால்
ஆவுடையம்மை அக்காவிடம் போய்
முத்து வாங்கி வந்து விளையாடுகிறான்.
பூவரச மரத்தை ஒட்டி
சமையாத பிள்ளைகள்
பாண்டி விளையாடுகிறார்கள்
கால் இடறாத வண்ணம்
பாவாடையை லேசாக
உயர்த்திச் சொருகிக்கொண்டு
கட்டம் கட்டமாகத் தாவுகையில்
எழும்பும் கொலுசுச் சத்தம்
மனசை வருடிக் கொடுக்கிறது.
முடுக்கடி வீட்டு நடையில்
கொஞ்சம் பெரிய பையன்கள்
கள்ளன்-போலீசு
விளையாடுகிறார்கள்
ஒளிந்து கொள்ளச் சவுகரியமாக
நடுமுடுக்கு இருப்பதால்
கள்ளன்களாக இருப்பதற்கே
எப்போதும் பையன்கள்
போட்டி போடுவார்கள்.
அதுக்கு அங்கிட்டு
அழிப்போட்ட வீட்டுத் தாழ்வாரத்தில்
நாலு பேர் சதுரமாக உட்கார்ந்து
தாயம் விளையாடுகிறார்கள்
சொக்கலால் பீடியும்
யானை சிகரெட்டும்
துணை நிற்க.
லேசாக இருட்டத் தொடங்கியதும்
இடுப்பில் குடத்துடன்
தண்ணீர் எடுக்க வரும்
சமைந்த பெண்களை
எதிர்பார்த்து நிற்கும்
இளவட்டங்களின் காத்திருப்புக்களால்
கர்வம் கொள்கிறது அந்திமாலை.
தெரு முழுவதும்
மனிதத்தின் உயிர்ப்பும்
அந்த உயிர்ப்பின் வாசத்தைச்
சுமந்து வரும் தென்றலும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எமக்கு உரியனவாய் இருந்தன.
இன்று
மரம் இல்லாமலும்
யாரும் விளையாடாமலும்
வெற்று நிலப்பரப்பாய்
கைம்பெண் கோலத்தில்
நிற்கிறது எங்கள் தெரு
பாடாண் திணையில்
கையறுநிலைத் துறையில் அமைந்த
என் பாடலைப் பெற்றுக் கொண்டு.
***********************************************


கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா?
---------------------------------------------------------------------
உங்கள் பதிவைப் படித்தேன். ஏற்கனவே
பதில் சொல்லப்பட்ட கேள்விகளை நீங்கள்
புதிது போல எழுதி இருக்கிறீர்கள். நாம் தமிழர்
சீமான், திருமுருகன் காந்தி, பாரிசாலன்,
கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி என்று பலரும்
சொல்லி வரும் விஷயம்தான் இது. இந்தியாவில்
தடுப்பூசி எதிர்ப்பு லாபி கொஞ்சம் .
வலிமையானதுதான். நிற்க.

தோழர் ஸ்டாலின் காலத்தில் 1950ல்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (CPSU)
தீர்மானம் .நிறைவேற்றி உள்ளது.
அந்த ஆவணங்களைப் படிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்சிய மூல ஆசான் ஸ்டாலின் அவர்களே
அறிவியலற்ற  மருத்துவ முறை என்று
தடை செய்த ஹோமியோபதியை மார்க்சியம்
பேசும் நீங்கள் எப்படி ஆதரிக்க முடியும்?

மார்க்சிஸ்டுகள் யாரும் ஹோமியோபதியை
ஏற்க முடியாத, ஆதரிக்க முடியாத நிலையை
தோழர் ஸ்டாலின் ஏற்படுத்தி இருக்கிறாரே!

ஹோமியோபதி ஒரு அறிவியல் என்று
உங்களால் நிரூபிக்க முடியுமானால்,
ஸ்டாலின் சொன்னது தப்பு என்று பகிரங்கமாக
அறிவிக்க உங்களால் முடியுமா?

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா?
ஒன்று ஹோமியோபதியை விட்டு விடுங்கள்.
அல்லது மார்க்சியத்தை விட்டு விடுங்கள்.

நிலைமை இப்படித்தான் தோழரே இருக்கிறது.
இதில் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு
மார்க்சியம் முக்கியம். எனவே
ஹோமியோபதியை நான் எதிர்க்கிறேன்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக