வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

இது மட்டுமே மார்க்சிய லெனினிய மதிப்பீடு!
-------------------------------------------------------------------------------
தோழர் திருமேனி அவர்களுக்கு,

சுண்டெலிகளைப் பொறுத்தமட்டில் பூனைதான்
சிங்கத்தை விட வலிமையான மிருகம் என்று ஓர்
ஐரோப்பியப் பழமொழி உண்டு. எங்கல்ஸ் தமது
கட்டுரைகளில் இந்தப் பழமொழியை மேற்கோள்
காட்டி உள்ளதை நான் படித்து இருக்கிறேன்.

அதைப்போல, தங்களின் பதிலில் கணிசமான
பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்ட
கலைஞருக்கு அஞ்சலி பற்றிய விமர்சனமாக
உள்ளது. .

மேலும் விடுதலைச் சிறுத்தைகளின்
திரு ரவிக்குமார்,மற்றும் எவரோ
திரு ராஜேந்திரன் என்பவர் ஆகியோர் எழுதிய
அஞ்சலிக் குறிப்புகள் பற்றிய தங்களின்
விமர்சனங்களையும் இங்கு கொண்டு வந்து
கொட்டி உள்ளீர்கள். இவ்விரண்டையும் நான்
படிக்கவில்லை; படிக்கப் போவதும் இல்லை.
 (மக்கள் அதிகாரத்தின் கட்டுரையை மட்டுமே படித்துள்ளேன்). தங்களின் அக்கறைக்குரிய
மேற்கூறிய கட்டுரைகள் குறித்து நான்
பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது மட்டுமே மார்க்சிய லெனினிய மதிப்பீடு!
-------------------------------------------------------------------------------
கலைஞரைப் பற்றிய  நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் மதிப்பீடு மட்டுமே மார்க்சிய
லெனினிய மதிப்பீடு ஆகும். எமது மதிப்பீடு
மட்டுமே காய்தல் உவத்தல் அகற்றி, கறாரான
மார்க்சியப் பார்வையில் கலைஞரை
அணுகுகிறது.

கட்டுரையின் முதல் வாக்கியமே மொத்தக்
கட்டுரையின் சாரத்தையும் கோடி காட்டுகிறது.
எல்லோரும் கரும்பை நுனியில் இருந்துதான்
உண்பார்கள். அடியில் இருந்து உண்டால்
என்ன ஆகும்? முதலில் இனிக்கும்; போகப்
போகக் கசக்கும். இவ்வளவு தெளிவாக
பாமரனுக்கும் புரியும்படியாக கலைஞரை
மதிப்பிட்டு விடுகிறது எமது கட்டுரை.

கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய விளக்கத்தில்
ஏங்கல்ஸ் சொல்லுவார்: "தொடக்க கால
முதலாளித்துவம் ஆற்றிய முற்போக்கான
பாத்திரத்துக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையானது
முழுமையான நியாயத்தை (full justice) வழங்கி
விடுகிறது" என்று.

மேலும் ஆரம்பகால கிறிஸ்துவத்தின்
முற்போக்கான பாத்திரத்தைப் பற்றியும்
எங்கல்ஸ் கட்டுரை எழுதி உள்ளார்.
"Give the devil its due"என்று ஒரு ஆங்கிலப் பழமொழி
உண்டு. பிசாசுக்கும் கூட அதற்கு உரிய
பங்கைக் கொடுத்து விடு என்று இதற்குப் பொருள்.

எங்கல்சின் வழியைப் பின்பற்றி,  கலைஞரின்
தொடக்க கால அரசியலின் முற்போக்கான
பாத்திரத்தை எமது கட்டுரை மறுக்கவில்லை.
நெருக்கடி நிலையை  எதிர்த்து கலைஞர்
உறுதியுடன் நின்றதை எமது கட்டுரை
அங்கீகரிக்கிறது.

கலைஞரின் பிற்காலத்திய மற்றும் இறுதிக்கட்ட
அரசியல் எவ்வளவு சீரழிந்த ஒன்று என்பதையும்
எமது கட்டுரை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
கட்டுரையின் சாரமான இந்தப் பகுதியை
ஒரு அழகான வாக்கியத்தின் மூலம் கட்டுரை
விடுகிறது.

"அம்பலப் படுவதற்கோ அல்லது அம்பலப்
படுத்துவதற்கோ இனி எதுவும் எஞ்சி
இருக்கவில்லை என்ற நிலையை அடைந்த
பிறகே கலைஞர் மரணம் அடைந்துள்ளார்."

இதுதான் அந்த வாக்கியம்.

எமது கட்டுரையில் கலைஞர் ஒரு  சீர்திருத்தவாதி 
(reformist) என்று எங்குமே சொல்லப் படவில்லை.
சீர்திருத்தம் என்ற சொல்லே எமது கட்டுரையில் 
கிடையாது.

பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோர் 
பண்பாட்டு அம்சங்களுக்கு மட்டுமே 
முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டவர்கள்.
அவர்களுக்கென்று சொந்தமாகப்  பொருளாதாரக் 
கொள்கை எதுவும் கிடையாது. இந்திய ஆளும் 
வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை 
அப்படியே ஏற்றுக் செயல்பட்டவர்கள் என்பதை 
திரும்பத் திரும்ப கட்டுரையின் மீதான 
பின்னூட்டங்களில் அழுத்திக் .கூறியுள்ளேன்.

கலைஞர் ஒரு தேசிய முதலாளியா என்ற கேள்விக்கும் 
விடையளித்து கலைஞரைப் பற்றிய மதிப்பீடு 
கட்டுரையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டு 
உள்ளேன்.

இறுதியாக, நியூட்டன் அறிவியல் மன்றத்தின் 
கலைஞரைப் பற்றிய மதிப்பீடு மட்டுமே 
மார்க்சிய லெனினிய மதிப்பீடு ஆகும்.  வேறு 
எதுவும் மார்க்சிய லெனினிய மதிப்பீடு அல்ல.
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபித்து உள்ளது.    

     



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக