புதன், 1 ஆகஸ்ட், 2018

அன்பார்ந்த ஐயா,

பொருள்: கீழை மார்க்சியம்: சில ஐயங்கள்

தங்களின் Eastern Marxism: Essays ஆங்கில நூலில்
கூறியுள்ள சில விவரங்களை நான் முதன் முதலாக
தங்களிடம் இருந்தே அறிந்தேன். பின்வரும்
விஷயங்களில் நான் உடன்படுகிறேன்.

1) பெண் வெறுப்பு மிகுந்த ஷேக்ஸ்பியரை மார்க்ஸ்
மிகவும் மதித்துப் போற்றினார். ஆனால் பெண்ணுரிமை
போற்றிய ஆலிவர் கோல்டுசுமித்தைப் புறக்கணித்தார்.

2) இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளை மார்க்ஸ்
காட்டுமிராண்டி மற்றும் அரைக் காட்டுமிராண்டி
நாடுகள் (barbarian and semi barbarian)  என வர்ணித்தார்.
(கம்யூனிஸ்ட் அறிக்கையில் இவ்வாசகம் உள்ளது).

3) கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒரு கட்சி கட்ட வேண்டிய
தேவையில்லை என்று மார்க்ஸ், எங்கல்ஸ் உறுதிபடக்
கூறியுள்ளனர். (கம்யூனிஸ்ட் அறிக்கை அத்தியாயம்-II)

4) லெனின் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி
என்னும் கருவி (APPARATUS) கொடுங்கோலர்களை
உருவாக்கியது என்று எழுதியுள்ளீர்கள். லெனினை
எதிர்த்து ரோசா லக்ஸம்பேர்க் முன்வைத்த
கட்சி கட்டும் கோட்பாடு ஒப்பீட்டளவில்
உன்னதமானதுதானே! ஆனால் தங்கள் நூலில்
ரோசா லக்ஸம்பேர்க் பற்றி எதுவும் கூறவில்லையே.

5) மாவோ பற்றி உயர்வாகக் கூறுகிறீர்கள். அதை
ஏற்கிறேன்  ஆனால் மாவோ கலாச்சாரப் புரட்சி
என்ற பெயரில் செய்ததெல்லாம் சரியா?
லியோ சாச்சியை அடித்துக் கொன்றது சரியா?

6) ஆக, மார்க்சும் ஸ்டாலின் போலத்தானே
நடந்து கொண்டுள்ளார்! ஸ்டாலின் மாற்றுக்
கருத்துடைய டிராட்ஸ்கியைக் கொன்றார்
என்பது போலத்தானே மாவோவும் லியோ
சாச்சியைக் கொன்றுள்ளார்! இது சரியா?

7) சிட்டுக்குருவிகளைக் கொல்வதற்காகவே
மாவோ ஒரு இயக்கம் நடத்தினாரே! அது
சரியா? மாவோ காலத்தில் நடந்த "மாபெரும்
பாய்ச்சல்" (GREAT LEAP FORWARD) சரியா?

8) மாவோ காலத்தில் சீனாவில் ஏற்பட்ட பஞ்சம்
பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே!
ஒரு கோடிப்பேர் பஞ்சத்தால் செத்துப் போனதாக
இரா ஜவஹர் தமது புத்தகத்தில் எழுதி உள்ளாரே.

9) Eastern marxism is little better than western marxism! Then
what is the justification for advocating for eastern marxism?

10) தாங்கள் எனக்கு விளக்கம் அளிக்குமாறு
பணிவுடன் வேண்டுகிறேன். என்னுடைய
மின்னஞ்சல்களில் ஏதேனும் தவறு இருந்தால்
அருள்கூர்ந்து என்னை மன்னிக்கவும்.   
  


தனித்தமிழ் என்பது காலத்துக்கு ஒவ்வாத
பத்தாம் பசலித்தனம்; பழமைவாதம், இது
தமிழுக்கோ மக்களுக்கோ பயன் தராது.
வளர்ச்சி என்பது நீண்டதொரு இயக்கப்போக்கு.
அதில் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.

மொழி என்பது static ஆனதல்ல. அது dynamic.
எனவே மொழியானது தன் இயக்கத்தின்
போக்கில் தன்னுடன் ஊடாடும் மொழிகளில்
இருந்து சொற்களைப் பெறும்; கொடுக்கும்.

சொற்களை மொழி பெறுதல் கூடாது என்று கூறுதல்
இயற்கைக்கு முரணானது.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
ஈட்டச் சொல்லே
என்பதுதான் தமிழின் சொற்களைப் பற்றிய
வகைமை. திசைச்சொல், வடசொல் போக
ஆங்கிலச் சொற்களும் இன்று தமிழுக்கு
வந்து சேரவே செய்யும்.

மிக்சி, கிரைண்டர், குக்கர், பிரிச்சு (பிரிட்ஜ்),
என்றுதான் தாய்மார்கள் பேசுகிறார்கள்.
இத்தாய்மார்கள் ஆங்கிலம் அறியாதவர்களும் கூட.

மொழி என்பது நிலவுகிற உற்பத்தி முறை
சார்ந்து மாற்றம் பெறுவது. இது மார்க்சியப்
பார்வை. மாற்றமே இல்லாமல் இருக்க
மொழி என்பது மதமல்ல. எனவே தனித்தமிழ்
என்று கூறுவது மொழியின் இயக்கம் பற்றிய
அறிவியல் விதிகளை அறியாமல் பேசுவதே ஆகும்.

இதெல்லாம் பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?

அறிவாலயத்திலேயே தனக்கு இடம் அமைக்கப்பட
வேண்டும் என்று முன்பு ஒருமுறை கலைஞர்
கூறியதாக எனக்கு ஞாபகம். கலைஞரின்
விருப்பத்தைக் கணக்கில் கொண்டு செயல்
வேண்டும்.

தமிழை எப்படிப்பேச வேண்டும், எப்படி எழுத
வேண்டும் என்ற விஷயத்தில் மார்க்சிஸ்டுகள்
மட்டுமே சரியான முடிவு எடுக்க முடியும்.
ஏனெனில் மார்க்சியம் மட்டுமே மொழியையும்
மொழி பேசும் மக்களையும் கணக்கில் கொண்டு
அறிவியல் வழியில் முடிவுகளை எடுக்க வல்ல
தத்துவம்.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அன்றைய
சோவியத் ஒன்றியத்தின் பல மொழிகளை
வளர்த்து எடுத்தது மார்க்சியமே. இதனால்தான்
ஜாரிஸ்டு ரஷ்யாவாக இருந்த ரஷ்யா 1922ல்
சோவியத் ஒன்றியம் ஆனது. ரஷ்யப் புரட்சி
நடந்தவுடனேயே, அதாவது 1917ல் சோவியத்
ஒன்றியம் .உருவாகி விடவில்லை. லெனின்
எல்லா மொழிகளுக்கும் சமஉரிமை கொடுத்தார்.
எல்லா மொழிகளையும் வளர்த்தார்.

நன்னூலுக்கு அப்புறம் தமிழுக்கு இலக்கணம்
எதுவும் சமைக்கப் படவில்லை. நன்னூலுக்கு
அப்புறம் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கில்
கொண்டு புதிய இலக்கணம் உருவாக்குவது
இன்றையத் தேவை. இதை யார் செய்வது?
மக்களின் சார்பாக மார்க்சியம் செய்யும்.

புதிய இலக்கணம் தேவைப்படும் காலத்தில்
நின்று கொண்டு, பழமையை வலியுறுத்திப்
பேசுவது மக்களுக்கோ மொழிக்கோ பயன் தராது.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே பேருந்து
என்ற சொல் அறிமுகமாகியது. இன்று பேருந்து
என்பது பெரு வழக்காகி விட்டது. 1966ல் பஸ்
என்பதை பசு என்றுதான் எழுதிக் கொண்டு
இருந்தார்கள் தனித்தமிழ் ஆட்கள்.
  

BUS, PUS என்ற இரண்டு சொற்களுக்கும்
உள்ள வேறுபாட்டை எழுத்தில் கொண்டு வருவது
எப்படி என்று தோழர் வேல்முருகன் கேட்கிறார்.
இப்பிரச்சினைக்கு தமிழக அரசு ஒரு தீர்வைத்
தந்துள்ளது.

காவல் நிலையங்களில் P5 Police station என்றும்
B5  Police station என்றும் உள்ளன. இவற்றை
வேறுபாடு தெரியும் விதத்தில் எழுதுவது எப்படி?
P5 என்பதை ப்பி5 என்றும் B5 என்பதை பி5 என்றும்
எழுத வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது.
அதன்படி எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை
நான் பலமுறை கண்டுள்ளேன். பலரும்
கண்டிருக்கக் கூடும்.

எனவே அரசின் வழிகாட்டுதலின்படி, pus என்பதை
ப்பஸ் என்றும், bus என்பதை பஸ் என்றும் எழுத
வேண்டும்.

தனித்தமிழ் போன்ற முரட்டுப் பிடிவாத
இயக்கங்களில் நான் PUC படிக்கும்போது சேர்ந்தேன்.
சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் வளன் அரசு
மூலம் ஈர்க்கப்பட்டு தனித்தமிழ் இயக்கத்தில்
சேர்ந்தேன். மார்க்சியத்திற்கு வந்ததுமே
தனித்தமிழைக் .கைவிட்டேன். இதுதான் நான்
மயக்கத்தில் இருந்து தெளிவுக்கு வந்த வரலாறு.
       

தோழர் தியாகுவுடன் மிக நெருக்கமான
நட்பில்தான் இருந்தேன். அவரின் தனித்தமிழ்ப்
பிடிவாதங்கள் அவரைத் தனிமைப் படுத்தி உள்ளன.
மக்களுக்கான மார்க்சியம் எப்படி வறட்டுப்
பிடிவாதங்களை மேற்கொண்டு ஒழுக இயலும்?

தோழர் காலன்துரை அவர்களே,
தமிழை வளர்த்து சொல்வளம் உடைய மொழியாக
மாற்றாவிட்டால், அது அழிவது திண்ணம்.
இதற்குத்தான் எத்தனை தடைகள்? தடையாய்
யார்? தியாகு போன்ற ஆட்கள்தான். மூலதனம்
என்ற நூலை மூலமுதல் என்று மாற்றி
வெளியிட்டு விட்டார். இப்போது யாருக்கும்
புரியாமல் ஆக்கி விட்டார். இதுதான் அவரின்
சாதனை!!!!


திரு தா மணி அவர்களுக்கு,

1) தொடர்ச்சியாக சில நாட்களாக அறிவியல் தமிழ்
குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
முன்நிகழ்ந்தன பற்றி அறிந்திட முந்தைய
பதிவுகளைப் படித்திருக்க வேண்டும். அதைச்
செய்யாமல் திடீரென இந்தப்பதிவை மட்டும்
படித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தால், அது
பிறழ்புரிதலை உண்டாக்கும்.

2) மார்க்சியர்கள் பயன்படுத்தும் தமிழ்
தொடர்புறுத்த வல்ல தமிழ் (communicative) ஆகும்.
அது பண்டிதத் தமிழோ தனித்தமிழோ அல்ல.

3) இது பகடி கலந்த பதிவுதான். நீருக்குள் மீனாய்
மக்களோடு இருக்காமல், மக்களை விட்டு விலகி,
தந்தக் கோபுரத்தில் நின்று கொண்டு,
மேட்டிமைத்தனமான தமிழை மக்களிடம்
திணிக்க முயலுவோர் மீதான பகடி.

4) மொழி எவ்வாறு இயங்குகிறது, இயக்கத்தின்
போக்கில் அது எவ்வாறு மாற்றம் அடைகிறது,
சொற்களின் கொடுக்கல் வாங்கல் எவ்வாறு
நிகழ்கிறது ஆகியவை பற்றி எந்தப் புரிதலும்
இல்லாமல், மாற்றத்துக்கு எதிராக நிற்பது
அறிவுடைமை ஆகாது.

5) லெனின் என்பதை இலெனின் என்று எழுத
வேண்டும். ஏனெனில் லகரம் மொழிமுதல் வராது
என்பது சிலரின் பிடிவாதம்.

6) லகரம் மொழிமுதல் வரும் என்று புதிய விதி
செய்ய வேண்டும். எனவே தமிழுக்கு இன்று
புதிய இலக்கணம் தேவை. இந்தப் பொருளில்
காத்திரமான கருத்துக்களைத் தாங்கள்
வழங்கலாம். வரவேற்கிறோம்.

7) இப்பொருளில் அமைந்த முன்னரே எழுதிய
பதிவுகளையும்  படித்துப் பார்த்துக் கருத்துக்
கூறுமாறு வேண்டுகிறோம்.   

8) தனிநபர் தாக்குதல், வசைகள் தவிர்க்கப்பட
வேண்டும்.   .




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக