செவ்வாய், 2 ஜூன், 2015

கந்தலாகிப் போன காரண-காரியப் பொருத்தம்!
காரணமும் விளைவும் (CAUSE AND EFFECT) என்ற மார்க்சியக் 
கோட்பாடு பொய்யாகிப் போனது குவான்டம் இயற்பியலில்!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------------------------------
மார்க்சியத் தத்துவத்தில், காரண-காரியப் பொருத்தம் என்பது 
(Cause and effect relationship) மிகப் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு 
கோட்பாடு. இயற்கையிலும் மனித வாழ்விலும் உள்ள ஒவ்வொரு 
அம்சத்திலும் இந்த விதி செயல்படுவதாக மார்க்சியப் 
பொருள்முதல்வாதம் நம்புகிறது. எனவே, காரண-காரியப் 
பொருத்தம் என்னும் இந்த விதியை, தத்துவார்த்த 
வகையினம் (PHILOSOPHICAL CATEGORY) என்று 
பொருள்முதல்வாதம் வரையறுக்கிறது.
**
கிராமப் பாதையில் நடந்து செல்கிறோம். காலில் முள் குத்தி 
விடுகிறது. இதனால் ரத்தம் வருகிறது. இந்த நிகழ்வில்,
முள் குத்தியது காரணம் (CAUSE) ஆகும். ரத்தம் வந்தது 
விளைவு (EFFECT) ஆகும். காரணம் இல்லாமல் விளைவு 
இல்லை. முள் குத்தாமல் ரத்தம் வரவில்லை. இதுதான் 
காரண-காரியப் பொருத்தம் எனப்படுகிறது. மேலும், காரணம் 
முந்தியது; விளைவு பிந்தியது. அதாவது,
cause preceeds the effect.
**
மார்க்சியப் பொருள்முதல்வாதம் மட்டுமின்றி, 
கருத்துமுதல்வாதமும் இந்தக் காரண-காரியப் 
பொருத்தத்தை அன்புடன் தழுவிக் கொள்கிறது.
அதாவது, காரணம்-விளைவு கோட்பாட்டைக் 
கருத்துமுதல்வாதமும் ஏற்றுக் கொள்கிறது.
**
சொல்லப் போனால், உண்மையில், கருத்துமுதல்வாதம் 
பெற்றெடுத்த குழந்தைதான் இந்தக் காரணம்-விளைவு 
கோட்பாடு. பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்.
உலகம் இருக்கிறது. பூமி, சூரியன், சந்திரன் இவையெல்லாம்  
இருக்கின்றன. இது விளைவு(effect) ஆகும். அப்படியானால்,
இந்த விளைவுக்குக் காரணம் என்ன? கடவுள்தான் 
காரணம் ஆவார். ஆக, கடவுள் காரணம்: இந்த உலகம் 
விளைவு என்கிறது கருத்துமுதல்வாதம்.
**
அனேகமாக எல்லா மதங்களிலும், குறிப்பாக கீழ்த்திசை 
மதங்களில், இந்து மதம், சமணமதம் போன்றவற்றில்,
கர்ம வினை (KARMA ) என்ற ஒரு கோட்பாடு உண்டு. 
முற்பிறவியில் செய்த கர்ம வினைக்கு ஏற்ப, இப்பிறவி 
வாழ்க்கை அமையும் என்பதுதான் கர்மவினைக் கோட்பாடு.
தமிழ் இலக்கிய மரபில், இது ஊழ் எனப்படுகிறது. அதாவது 
ஊழ் என்பது கர்மவினை ஆகும்.
**
"ஊழிற் பெருவலி  யாவுள மற்றொன்று 
சூழினும் தான்முந் துறும்" 
 "ஊழையும் உப்பக்கம் காண்பர்"
ஆகிய குறட்பாக்களைக் கருதவும்.
**
"ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூ உம்" 
என்பார் இளங்கோவடிகள்.
இவ்வாறு, தமிழ் இலக்கிய மரபில் காணப்படும் ஊழ் 
என்பது கர்மவினையே என்று அறிக. அதாவது, 
காரணம்-விளைவு கோட்பாடே என்று அறிக.
**
தரக்குறைவான ஒரு தமிழ்த் திரைப்படத்தில், ஒரு 
கோமாளி நடிகன், படம் முழுவதும் ஒரு வசனத்தை 
அடிக்கடி சொல்வான். 
"ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்"
என்ற அந்த வசனம் காரணம்-விளைவு கோட்பாட்டை 
விளக்குவதே.
**
இவ்வாறு கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் 
போட்டி போட்டுக் கொண்டு தூக்கிக் கொஞ்சிய  குழந்தையான 
காரணம்-விளைவு  கோட்பாட்டை குவாண்டம் இயற்பியல் 
அடித்துக் கொன்று விட்டது. 1900ஆம் ஆண்டு பெர்லின் 
நகரில் மாக்ஸ் பிளான்க் என்ற இயற்பியல் அறிஞரால் 
தோற்றுவிக்கப்பட்டு, ஐன்ஸ்டின், நியல்ஸ் போர் 
ஆகியோரால் வளர்க்கப்பட்டு, அறிஞர்கள் ஹெய்சன்பர்க்,
லூயி டி பிராக்லி, பால் டிரக், ஷ்ராடிங்கர் காலத்தில் 
பொற்கால உச்சத்தைக் கண்ட குவாண்டம் விசையியல் 
(Quantum mechanics) காரணம்-விளைவு கோட்பாட்டை 
ஏற்றுக் கொள்ளவில்லை. 
**
இயற்கையில், அணு சார்ந்த, நுண்ணிய துகள்களின் 
உலகம் முதல், பிரும்மாண்டமான வானியல் நிகழ்வுகள் 
வரை காரணம்-விளைவு கோட்பாடு செயல்படவில்லை 
என்று நிரூபித்துள்ளது குவான்டம் விசையியல். இந்த 
மறுக்க முடியாத நிரூபணத்தைக் கண்டபின், 
கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் 
மூர்ச்சை அடைந்தன.
**
மார்க்சிய வகுப்பு எடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் 

கொண்டு, சில சிந்தனைக் குள்ளர்கள், காரணம்-விளைவு 
என்றெல்லாம் உளறிக் கொண்டு இருப்பதைப்  
பார்க்கும்போது, சிரிப்புச் சிரிப்பாக வருகிறது.
------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: குவான்டம் விசையியலில் காரணம்-விளைவுக்கு 
இடமில்லாமல் போனது எப்படி என்பதை, அறிவியல் 
விளக்கங்களுடன், அடுத்த கட்டுரையில் விரிவாகப் 
பார்க்கலாம்.
****************************************************************               

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக