செவ்வாய், 20 அக்டோபர், 2015

இரண்டாம் விவேகானந்தர் யார்?
பகவத் கீதை தேசியப் புனித நூலே!
பகவத் கீதையை எதிர்ப்பது மூடத்தனம்!
பெரியாரிய அம்பேத்கரியவாதிகளே திருந்துங்கள்! 
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------
செப்டம்பர் 11, 1893. இந்த நாள் உலக வரலாற்றில் இடம் பெற்ற நாள்.
இந்த நாளில்தான் விவேகானந்தர் அமெரிக்காவின் சிக்காகோ 
நகரில் கூடிய மதங்களின் உலகப் பாராளுமன்றத்தில் 
(World Parliament of Religions) இந்து மதத்தின் பெருமைகளை 
எடுத்துக் கூறினார்.

104 ஆண்டுகள் கழித்து, விவேகானந்தரைப் போலவே 
இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் 
மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும் கேரள மாநில 
முதல்வருமான ஈ கே நாயனார். 1997 ஜூன் 18 அன்று 
வாத்திகன் நகரில் உள்ள போப்பாண்டவரைச் (Pope John Paul II)
சந்தித்து அவருக்கு பகவத் கீதையைப் பரிசளித்தார் 
மார்க்சிஸ்ட் பெருந்தலைவர் தோழர் ஈ கே நாயனார்.

பகவத் கீதை மகத்தான நூல். அது இந்துக்களின் புனித 
நூல் மட்டுமின்றி இந்தியாவின் தேசிய நூலும் ஆகும்.
இந்திய நாகரிகம் பண்பாடு ஆகியவற்றின் அடையாளச் 
சின்னமாகத் திகழும் பகவத் கீதையின் ஆங்கில 
மொழிபெயர்ப்பு நூலை போப்பாண்டவருக்குப் பரிசளித்தார் 
மகத்தான மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ஈ கே நாயனார்.
இதன் மூலம் இரண்டாம் விவேகானந்தர் என்ற பெருமையைப் 
பெற்றார் தோழர் நாயனார். 

போப்பாண்டவரைச் சந்தித்தபோது, தோழர் பினராய் விஜயன் 
அவர்களையும் இன்னும் சிலரையும் உடன் அழைத்துச் சென்று 
இருந்தார் தோழர் நாயனார்.

காரல் மார்க்சின் தாஸ் காபிடல் நூலையோ அல்லது லெனின் 
எழுதிய அரசும் புரட்சியும் என்ற புகழ் பெற்ற நூலையோதான்
தோழர் நாயனார் பரிசளிப்பார் என்று இங்குள்ள சிலர் 
அப்பாவித்தனமாக நம்பினார். பாவம் மூடர்கள்! பகவத் 
கீதையின் மகிமை அறியாக் கசடர்கள்.

பைபிளுக்கு அடுத்து அதிகமான உலக மொழிகளில் மொழி 
பெயர்க்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற நூலான திருக்குறளை 
நாயனார் பரிசளித்து இருக்கலாமே என்று சிலர் எண்ணலாம்.
மலையாளியான நாயனார் தமிழ்நூலை ஏன் பரிசளிக்க 
வேண்டும் என்று மார்க்சிஸ்டுகள் உங்களை மடக்கி விடக்கூடும்.

அப்படியானால் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை 
நூலையோ அல்லது நோபல் பரிசு பெற்ற தாகூரின் 
கீதாஞ்சலியையோ நாயனார் கருதி இருக்கலாமே 
என்றும்கூட சிலர் ஆதங்கம் அடையலாம்.
நேருவின் டிஸ்கவரி  ஆஃப் இந்தியா நூலையோ 
குமரன் ஆசான் கவிதைகளையோ புறக்கணித்து விட்டு 
பகவத் கீதையை, ஒரு மதவெறி நூலையா நாயனார் 
போற்றினார் என்றுகூட சிலர் கோபம் அடையலாம்.

"சதுர வர்ணம் மயா சிருஷ்டம்" என்று கூறுகிற நால்  வருண 
முறையை, சாதியை நான்தான் படைத்தேன் என்று கடவுளே 
கூறுகிற புனிதநூல் பகவத் கீதை. அதன் மகிமையை நன்கு 
உணர்ந்த தோழர் நாயனார் அதையே போப்பாண்டவருக்குப் 
பரிசளிக்கத் தகுதி வாய்ந்த நூலாகக் கருதினார் என்பதை 
சராசரி கூமுட்டைகளால் உணர முடியாது. அதற்கு ஆழ்ந்த 
மார்க்சிய அறிவு வேண்டும். அது தோழர் நாயனாரிடம் 
இருந்தது. 

பகவத்கீதை தேசியப் புனித நூலே. பெரியாரிஸ்டுகள்,
அம்பேதக்ரியவாதிகள், திராவிட இயல் சிந்தனையாளர்கள் 
ஆகியோர் இனியாவது திருந்த வேண்டும். ஈ கே நாயனாரைப் 
பார்த்துத் திருந்துங்கள். பகவத் கீதையைப் போற்றுங்கள்!

கோல்வால்கர் ஜிந்தாபாத்! ஹெட்கேவார் ஜிந்தாபாத்!
நாயனார் ஜிந்தாபாத்! பகவத்கீதை ஜிந்தாபாத்!!
அப்படியானால், காரல் மார்க்ஸ்??? அவரைத் தூக்கிப் 
போடுய்யா கக்கூஸ்ல என்கிறார்கள் மார்க்சிஸ்ட்கள்!
**************************************************************     


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக