திங்கள், 19 அக்டோபர், 2015

திராவிட இயக்கத்தின் முற்போக்கு எழுத்துக்களைத்
தொடர்ந்து புறக்கணித்த சாகித்ய அகாடமி!
அண்ணா கலைஞர் தென்னரசு படைப்புகள்
பரிசுக்குத் தகுதி உடையவையே!
-------------------------------------------------------------------------------------
சாகித்ய அகாடமி தொடங்கப்பட்ட காலத்திலும் (1954)
அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளிலும் திராவிட இயக்க
எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் தீவிரமான
செல்வாக்குச் செலுத்தி வந்தனர். திராவிட இயல்
எழுத்தாளர்கள் பலர் இருப்பினும், சிறப்பாக மூவரைக்
குறிப்பிடலாம். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,
எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோரே அம்மூவர்.

இருப்பினும் சாகித்ய அகாடமி இம்மூவரின்பால்
தீண்டாமையையே கடைப்பிடித்தது.  அண்ணாவின்
சிறுகதைகள், பார்வதி பி.ஏ போன்ற நாவல்கள் மிகப்
பெரும் முற்போக்குப் படைப்புக்கள்.

கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன், குறளோவியம்,
சங்க இலக்கியத் தங்க வரிகள், சிலப்பதிகார நாடக காப்பியம்
ஆகியன சிறந்த இலக்கியப் படைப்புகளே. இவற்றில் சாகித்ய
அகாடமி இலக்கணப்படி,  மூலநூல் என்ற வகையில்
ரோமாபுரிப் பாண்டியன் பரிசுக்கு உரியதே.

அண்ணா கலைஞரின் படைப்புக்கள் மிகப்பெரும்
வாசகர்களைச் சென்று அடைந்தவை.(Highest Reach).
தம் முற்போக்கு உள்ளடக்கத்தாலும் சமூக சீர்திருத்தக்
கருத்துக்களாலும் மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும்
முன்னோக்கி நகர்த்தியவை. பிற்போக்கான விழுமியங்கள்,
மூடநம்பிக்கைகள்  ஆகியவற்றைத் தாக்கித் தகர்த்தவை.
கலை மக்களுக்காகவே (Art for peoples sake) என்ற மார்க்சியக்
கோட்பாட்டின்படி, இவை மக்கள் இலக்கியங்கள்.

ஆயினும் அண்ணா  கலைஞரின் படைப்புகள் சாகித்ய
அகாடமியின் பிற்போக்குக் கொள்கை காரணமாக
பரிசுக்கு உரியவையாக ஏற்கப் படவில்லை.

கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலிக்கு சாகித்ய
அகாடமி பரிசு வழங்கியது. ஆனால் அண்ணா கலைஞரின்
படைப்புகள் புறக்கணிக்கப் பட்டன என்பது சாகித்ய
அகாடமியின் பிற்போக்குச் சார்பைக் காட்டும்.

நயன்தார செகல் தமது ஆங்கில நாவலுக்காகப் பரிசு
பெற்றார். அந்த ஆங்கில நாவலை அதிகபட்சம் போனால்
ஒரு ஐம்பது பேர் மட்டுமே படித்திருக்கக் கூடும். இதுவே
மிகத் தாராளமான ஒரு மதிப்பீடு (liberal estimate).
வாசகர்களால் சீந்தப்படாத நாவலுக்கெல்லாம் விழுந்து
விழுந்து பரிசு கொடுக்கும் அகாடமி, லட்சக் கணக்கான
வாசகர்களால் படிக்கப்பட்டு, அவர்களின் சிந்தனையைச்
செம்மை செய்த அண்ணா கலைஞரின்  படைப்புகளை
ஒதுக்கியது அப்பட்டமான பிற்போக்குத்தனமே.

அண்ணா கலைஞருக்கு  மட்டுமல்ல, படைப்பாற்றல் மிக்க
நா பார்த்தசாரதிக்கும் அகாடமி பரிசு வழங்கவில்லை.
நாபாவின் குறிஞ்சி மலர்  இன்றும் போற்றப்படும்
படைப்பு. ஜெகசிற்பியனின் ஜீவகீதம் என்ற சமூக
நாவலும் ஆலவாய் அழகன் என்ற வரலாற்று நாவலும்
சிறந்த படைப்புகளே. ஆயினும் அகாடமியால்
புறக்கணிக்கப் பட்டவை.

தி ஜானகிராமன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில்
ஒருவர். அவரைத் தொடர்ந்து புறக்கணித்த அகாடமி
இறுதியில் வேறு வழியில்லாமல் அவரின் சக்தி வைத்தியம்
என்ற நூலுக்குப் பரிசு வழங்கியது. இவாறு அகாடமியால்
புறக்கணிக்கப் பட்ட படைப்புகளை எழுதப் புகுந்தால்
அது மிகவும் நீண்டுவிடும்.

இன்று அகாடமிக்கு எதிராக எழுந்து வரும் தொடர்ந்த
எதிர்ப்புகளின் மூலக் காரணிகளில் ஒன்றாக, அகாடமியின்
கடந்தகாலப் புறக்கணிப்புகள் இருக்கிறது என்ற
உண்மையையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது.
***********************************************************    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக