புதன், 28 அக்டோபர், 2015

350 இயக்கம் வாழ்க!
வளிமண்டல கார்பன்டை ஆக்சைடின் 
குறைந்த அளவும் கூடுதல் தீங்கும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னால், ஓரிடத்தில் 
சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, மூச்சை உள்ளே இழுத்து 
வெளியே விடுங்கள். வளிமண்டலத்தில் உள்ள காற்றை நீங்கள் 
உள்ளே இழுக்கிறீர்கள்; பின் வெளியே விடுகிறீர்கள்.
உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் என்னென்ன 
வாயுக்கள் உள்ளே செல்கின்றன? வெளியே வருகின்றன?

பூமிக்கு ஒரு வளிமண்டலம் (atmosphere) இருக்கிறது. ஒரு கனத்த
போர்வையைப் போல இது பூமியை மூடுகிறது. இதன் மூலம் 
சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும்  கதிர்வீச்சு
பூமியைத் தாக்காமல்  வளிமண்டலம் நம்மைக் காக்கிறது.

பூமியின் வளிமண்டலத்தில், கன அளவு ரீதியாக (by volume) 
அதிக அளவு நைட்ரஜன் இருக்கிறது.அதாவது 78 சதம். 
அடுத்து ஆக்சிஜன் 21 சதம் இருக்கிறது. இவை இரண்டும் 
சேர்ந்து 99 சதம் ஆகி விடுகிறது. மேலும் ஆர்கான் 0.9 சதம் 
இருக்கிறது. மீதமுள்ள பிற வாயுக்கள் கார்பன் டை
ஆக்சைட் உள்ளிட்டு 0.1 சதம் உள்ளன.

நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, பிரதானமாக ஆக்சிஜனும் 
நைட்ரஜனும் ஆர்கானும் உள்ளே செல்கின்றன. நீங்கள் 
வெளிவிடும் மூச்சுக் காற்றில் 78 சதம் நைட்ரஜன் மற்றும்
அதிகபட்சமாக 16 சதம் ஆக்சிஜன், அதிகபட்சமாக 5 சதத்திற்குச்
சற்றே மேலாக கார்பன்டை ஆக்சைட், ஆர்கான்  உள்ளிட்ட 
பிற வாயுக்கள் 1 சதம் என்று இருக்கின்றன. (78+16+5+1 = 100)

99 சதம் உள்ள வாயுக்களான நைட்ரஜனும் ஆக்சிஜனும் 
பூமியைச் சூடேற்றவில்லை. ஆனால் ஒரு சதத்திற்கும் 
குறைவாக நம் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களான 
ஆவி நிலையிலான நீர் (water vapour), கார்பன் டை ஆக்சைட், 
மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஒசோன்,  குளோரோ 
ஃபுளூரோ கார்பன் ஆகிய பசுங்குடில் வாயுக்கள் பூமியை 
வெப்பம் ஆக்குகின்றன. GWP எனப்படும் Global Warming 
Potential இந்த வாயுக்களுக்கு அதிகம்.

தொழிற்புரட்சிக்கு முன், அதாவது 1750ஆம் ஆண்டிற்கு முன் 
வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைட் இந்த அளவு 
சேகரம் ஆகவில்லை. 1750இல் 280 ppm என்ற அளவில் 
வளிமண்டலத்தில் இருந்த கார்பன்டை ஆக்சைட், இன்று 
2015இல் 400 ppm என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. இதுவே 
பூமி வெப்பம் அடைவதற்கான காரணம் ஆகும்.
(ppm = part per million)

வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடின் அளவை 
350 ppm என்ற அளவுக்கு குறைத்திட உறுதி ஏற்போம்.
*********************************************************************       
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக