வெள்ளி, 23 அக்டோபர், 2015

காரல் மார்க்சும் கிருஷ்ணரும் ஒன்று!
மார்க்சிஸ்டுகளின் புதிய அத்வைதம்!
மார்க்சிஸ்ட்களின் பாலசங்கமும் பாஜகவின் பாலகோகுலமும்! 
----------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------------------------
1) துவைதம் என்றால் இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டல்ல
ஒன்று. காரல் மார்க்சும் கிருஷ்ணரும் வேறு வேறு என்றால்,
அது துவைதம். வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே
என்றால் அது அத்வைதம். காரல் மார்க்ஸ் வேறு யாருமல்ல,
அவர் கிருஷ்ணரின் அவதாரமே என்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

2)  ஜன்மாஷ்டமி! இது ஒரு புனிதத் திருநாள். கிருஷ்ணர் பிறந்த
நாள். கிருஷ்ணர் அஷ்டமியில்தானே பிறந்தார்!

3) அப்படியானால் ராமர் என்று பிறந்தார்? விடை
தெரியவில்லையா? உடனே அருகிலுள்ள மார்க்சிஸ்ட்காரரை
அணுகுங்கள். விடை கிடைக்கும்; மார்க்சிய விளக்கமும்
கிடைக்கும்.ராமர் பிறந்ததில் என்ன மார்க்சிய விளக்கம் இருக்கப்
போகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு
மார்க்சியத்தில் ஆழ்ந்த அறிவு இல்லை என்று அர்த்தம்.

4) தயவு செய்து பாஜக ஆட்களை அணுக வேண்டாம்;
அவர்களுக்கு விடை தெரியாமலும் இருக்கக் கூடும்.

5) கேரளத்தில் இந்த ஆண்டு பாஜகவும் மார்க்சிஸ்டுகளும்
போட்டி போட்டுக் கொண்டு கிருஷ்ண ஜெயந்தியைக்
கொண்டாடினார்கள்.

6) பாஜகவின் சிறுவர்க்கான  அமைப்பு பாலகோகுலம்.
மார்க்சிஸ்டுகளின் சிறுவர் அமைப்பு பாலசங்கம்.
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவதில் இவ்விரு
அமைப்புகளுக்கும் போட்டா போட்டி.

7) கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட்கள்
நடத்திய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தின் ஒரு பகுதியை
வாசகர்கள் படத்தில் காணலாம். படத்தைப் பாருங்கள்!
கிருஷ்ணர் வேடமிட்டு ஒரு குழந்தை ஊர்வலத்தில்
போகிறது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட்கள் காரல்
மார்க்சின் படத்தை ஏந்திப் பிடித்தபடி போகிறார்கள்.

8) முழுக்க நனஞ்சாச்சு, இனிமே முக்காடு எதுக்கு
என்கிறார்கள் மார்க்சிஸ்ட்கள்.

9) பாவம் பாஜக! அடிவயிறு கலங்கிப் போய் நிற்கிறார்கள்.
இதுவரை இந்துத்துவம் அவர்களின் ஏகபோகமாய் இருந்தது.
இப்போது மார்க்சிஸ்டுகள் பங்குக்கு வந்து விட்டார்கள்.
**************************************************************        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக