சனி, 3 அக்டோபர், 2015

ரத்தவகையும் ரத்த தானமும்!
------------------------------------------------
நம்மைப் போன்ற நவீன மனிதன் இந்த பூமியில் தோன்றி
இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு நவீன
மனிதன் என்பது உடலமைப்பில் தற்கால மனிதனை ஒத்திருக்கும்
ஹோமோ சேப்பியன் இனத்தைக் குறிக்கும். என்றாலும், 
இரண்டு லட்சம் ஆண்டுகள் வரலாற்றை உடைய மனிதன்
தன்  உடலைப் பற்றி அறிந்து கொள்ளத் தொடங்கியதும் அறிந்து
கொண்டதும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான்.

ஏடறிந்த வரலாற்றின்படி, கீழ்த்திசை நாடுகளில் நவீன 
மருந்தியலின் தந்தை என்று போற்றப்படும் நம் நாட்டவரான 
சுஸ்ருதர் என்ற அறிஞரிடம் இருந்தே உடல் அமைப்பியல் 
மற்றும் உடல் இயங்கியல் (anatomy and physiology) குறித்த 
நவீன அறிவு தொடங்குகிறது. இவரது காலம் கி.மு ஆறாம் 
நூற்றாண்டுக்கு முற்பட்டது.

மேற்கில் ஹிப்போகிராட்டஸ் என்ற அறிஞரிடம் இருந்து 
நவீன உடல்சார் அறிவு தொடங்குகிறது. இவரது காலம் 
கி.மு 460-370 ஆகும்.    

மனித உடலில் ஜீரண  மண்டலம், சுவாச மண்டலம், 
ரத்த ஓட்ட மண்டலம், கழிவு வெளியேற்று மண்டலம் உள்ளிட்ட 
பல்வேறு மண்டலங்கள் செயல்படுகின்றன. இது குறித்த 
நமது அறிவு காலந்தோறும் வளர்ந்து பெருமளவு முழுமை 
அடைந்ததுள்ளது.

ஆங்கில மருத்துவர் வில்லியம் ஹார்வி (1578-1657) மனித உடலில்
உள்ள ரத்த ஓட்டத்தை முதலில் கண்டறிந்தார். 1628இல்
பதிப்பிக்கப்பட்ட அவரின் "De Motu Cardis" என்ற நூலில், ரத்த
ஓட்டம் பற்றி விளக்கி இருந்தார். ரத்த தானம் மூலமாக உயிர் 
இழப்பைத் தடுத்து உயிர் காக்கும் நவீன மருத்துவத்துக்கு 
வித்திட்டவர் வில்லியம் ஹார்வியே.

ரத்தத்தில் நாலு வகை 
-------------------------------------
ரத்தம் ஒரே நிறம் என்றாலும் ரத்தத்தின் சிவப்பு அணுக்களில்
உள்ள ஆன்டிஜென்களைப் பொறுத்து (antigen), ரத்தம் நான்கு
வகையாகப் பிரிக்கப் படுகிறது.
1) A 2) B 3) AB 4) O ஆகிய நான்கு வகைகளே அவை.
A ஆன்டிஜென் இருந்தால் அது A வகை.
B ஆன்டிஜென் இருந்தால் அது B வகை.
A, B என்ற இரண்டு ஆன்டிஜென்களும் இருந்தால் அது AB வகை.
இவ்விரண்டு ஆன்டிஜென்களும் இல்லை என்றால் அது O வகை.  
இவ்வாறு ரத்தத்தை வகை பிரிப்பது ABO முறை (ABO system) ஆகும்.

ஆன்டிஜென் என்பது புரதம், கார்போஹைட்ரேட்,
கிளைக்கோ புரதம் ஆக இப்படி ஏதேனும் ஒன்று. 

ரத்தத்தில் உள்ள Rh காரணி 
---------------------------------------------
ABO முறை என்பது ரத்த வகையைக் கண்டறியும் ஒரு முக்கியமான
முறை என்றாலும், ரத்தம் செலுத்துதலுக்கும், ரத்த வகை
கண்டறிவதற்கும்   இம்முறை மட்டுமே போதுமானதல்ல.
ஏனெனில், Rh என்ற இன்னொரு முறையும்  கணக்கில்
கொள்ளப் படவேண்டும். Rh என்பது Rhesus என்பதன்
சுருக்கம் ஆகும்.

Rh முறைப்படி, ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் D ஆன்டிஜென்
இருந்தால், அந்த ரத்தம் Rh positive ஆகும். D ஆன்டிஜென்
இல்லாவிட்டால் Rh negtive ஆகும். ரத்தச் சிவப்பு அணுக்களில்
இருக்கின்ற பல்வேறு ஆன்டிஜென்களில் D ஆன்டிஜென்னின்
இருப்பு அல்லது இன்மையை ( presence or absence) மட்டும்
இம்முறை கண்டறிவதால், இது Rh D முறை என்று கறாராகக்
குறிப்பிடப் படுகிறது.

இந்தியாவில் எந்த வகை ரத்தம் அதிகம்?
-----------------------------------------------------------------
ABO முறை, RhD முறை என்னும் இவ்விரண்டு முறைகளையும்
இணைத்து ஒரு மனிதனின் ரத்தவகை தீர்மானிக்கப் படுகிறது.
உதாரணமாக, A வகை ரத்தம் உடையவர்,  Rh positive ஆக
இருந்தால், அவரின் ரத்தம் A positive  வகை ஆகும்.
இந்தியாவிலும் பொதுவாக ஆசியாவிலும் உள்ள மக்களின்
ரத்தம் 95 சதத்துக்கும் மேல் Rh positive ஆகவே இருக்கிறது.
         
மனித ரத்தம் நான்கு வகை மட்டுமே என்று யாரும் முடிவு
செய்து விட வேண்டாம். தற்போது, ரத்தத்தில் 35 வகைகள்
கண்டறியப் பட்டுள்ளன. இந்த 35 வகைகளிலும் 600 விதமான
ஆன்டிஜென்கள் உள்ளன. அவற்றில் மிகப் பெரும்பான்மை அரிதானவை.சர்வதேச ரத்தம் செலுத்துதலுக்கான
சங்கம் (ISBT International Society of Blood Transfusion), 2012இல்
35 ரத்த வகைகளைக் கண்டறிந்து அங்கீகரித்துள்ளது.  

ரத்தவகை கண்டறிந்த மருத்துவர்கள் 
-----------------------------------------------------------
ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் நாள் உலக ரத்த தானம்
செய்வோரின் தினம் (World blood donors day) என்பதாக
ஐ.நா சபையால் கொண்டாடப் படுகிறது.  இதில் ஜூன் 14
என்பது காரி லேண்ட்ஸ்டீனர் (Kari Landsteiner) என்னும்
ஆஸ்திரிய நாட்டு மருத்துவ விஞ்ஞானியின் பிறந்த
நாள் ஆகும். இவர்தான் ABO, RhD ஆகிய இருவகை ரத்தப் 
பிரிவை முதன் முதலில் கண்டறிந்தார். 1901இல் ABO 
ரத்த வகையை இவர் கண்டறிந்தார். அலெக்சாண்டர் 
வியனர்  என்பவருடன் இணைந்து 1937இல் RhD வகையைக் கண்டறிந்தார். இவருக்கு 1930இல் உடலியங்கியல்-மருந்துத் 
துறையில் நோபல் பரிசு வழங்கப் பட்டது.


இருப்பினும், காரி லேண்ட்ஸ்டீனர் கண்டறிந்த ரத்த வகைகள் 
A, B, O என்ற மூன்று  மட்டுமே. தற்போது பயன்பாட்டில் 
இருக்கும் நால்வகை ரத்தப் பிரிவுகளை (A, B,AB, O) 
செக் நட்டு மருத்துவரான ஜான் ஜான்ஸ்கி என்பவர் 
1907இல் கண்டறிந்தார். இதைத் தாம் எழுதிய புத்தகத்தில் 
குறிப்பிட்டுள்ளார். இந்த நால்வகை ரத்தப் பிரிவுகளை 
அமெரிக்க மருத்துவ ஆணையம் (American Medical Mission)
1921இல் அங்கீகரித்தது. அது முதல் இந்த நால்வகை ரத்தப் 
பிரிவுகள்    உலகம் முழுவதும் பரவலான பயன்பாட்டில் 
உள்ளன.

வயதுவந்த மனிதனின் உடலில்  சராசரியாக 5 முதல் 5.5 லிட்டர் 
வரை ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது, ஒருவரிடம் 
இருந்து ஒரு யூனிட் அளவுள்ள (300 மி.லி) ரத்தம் மட்டுமே 
பெறப் படுகிறது. இந்த ரத்தம் சிறிது காலத்தில் உடலில் 
மீண்டும் ஊறி விடும். எனவே, ரத்ததானம் கொடுக்கலாம்.
இதனால் எந்தப் பாதிப்பும் நேராது. எனினும், நீரழிவு 
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதைத்  
தவிர்க்க வேண்டும். அவர்களிடம் இருந்து மருத்துவர்கள் 
ரத்த தானம் பெற மாட்டார்கள்.
*************************************************************************      
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக