வெள்ளி, 24 ஜூன், 2016

(1) அறிவியல் வழியிலான கடவுள் மறுப்பை
திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை!
கவிஞர் வைரமுத்து கருத்து! இது சரியா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
தினமணி நடுப்பக்கக் கட்டுரையில் (24.06.2016)
வைரமுத்து கூறிய பின்வரும் 3 கருத்துக்கள்:
1) கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம்.
2) அறிவியல் வழியில் கடவுள் மறுப்பை
திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை.
3) மிக எளிமையாக முன்னடுக்கப்பட்ட கடவுள் மறுப்பு
மிக எளிமையாக வெளியேறி விட்டது.

மேற்கூறிய மூன்று கருத்துக்களையும் நியூட்டன்
அறிவியல் மன்றம் கடந்த 15 ஆண்டுகளாகக்
கூறி வருகிறது. வைரமுத்து கூறியதை ஏற்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகள்: தோற்றமும் கொள்கையும்:
-----------------------------------------------------------------------------------------------------
1) தந்தை பெரியார் 1925 வரை காங்கிரஸ் கட்சியில்
இருந்தார். பின்னர் நீதிக்கட்சியில் சேர்ந்தார்.


2) இதற்கிடையில் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத்
தொடங்கினார். இது கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல.

3) காங்கிரஸ் கட்சியிலும்  நீதிக்கட்சியிலும் தாம்
விரும்பிய கொள்கைகளைச் செயல்படுத்த முடியாத
நிலையில், பெரியார் 1944இல் தி.க.வை தொடங்கினார்.
இது கடவுளை ஏற்காத இயக்கம். கடவுள் மறுப்பைத்
தீவிரமாக முன்னெடுத்த இயக்கம்.

4) 1944இல் தொடங்கிய தி.க, ஐந்தே ஆண்டுகளுக்குள்
பிளவு பட்டது. 1949இல் அறிஞர் அண்ணா பெரியாரைப்
பிரிந்து, திமுகவை தோற்றுவித்தார்.

5) திமுக கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. "ஒன்றே குலம்
ஒருவனே தேவன்" என்று கடவுளை ஏற்கும் இயக்கமே
திமுக என்று அண்ணா அறிவித்தார். என்றாலும்
உலகின் தலைசிறந்த நாத்திகர்களில் ஒருவராக அறிஞர்
அண்ணா திகழ்ந்தார். திமுகவின் முதல் தலைமுறைத்
தலைவர்கள் பலரும் கடவுளை ஏற்காதவர்களாகவே
இருந்தனர்.

6) திமுகவின் இரண்டாம் தலைமுறை அப்படி அல்ல.

7) திமுகவை உடைத்து அதிமுகவை ஆரம்பித்த
ராமச்சந்திர மேனன் கொல்லூர் மூகாம்பிகை பக்தர்.
அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவோ அதிதீவிர
கடவுள் பக்தர். யாகங்கள், பூசைகள், பரிகாரங்கள்
என்று எல்லாச் சடங்குகளையும் மேற்கொள்கிறவர்.

8) 1973இல் பெரியாரின் மறைவுக்குப் பின், மணியம்மை
அவர்களும் பின்னர் ஆசிரியர் வீரமணி அவர்களும்
தி.க.வை நடத்தி வருகின்றனர்.

9) ஆசிரியரோடு முரண்பட்ட பலரும் பெரியாரின்
பெயரைச் சொல்லிக் கொண்டு பல்வேறு அமைப்புகளை
நடத்தி வருகின்றனர். மதிப்பிற்குரிய வே ஆனைமுத்து
ஐயா. கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராசேந்திரன்,
கொளத்தூர் மணி ஆகியோரே இவர்கள். இவர்களின்
அமைப்புகள் யாவும் கடவுளை ஏற்காத அமைப்புகள்.
கடவுள் மறுப்பை முன்னெடுக்கும் அமைப்புகள்.

10) சற்றேறக் குறைய தமது 48 வயதை ஒட்டித்தான்
பெரியார் நாத்திகர் ஆகிறார். தம்மை நாத்திகராக
அறிவித்துக் கொள்கிறார்.

11) 1925இல் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க
விழாவுக்கு, ஒரு இந்துமதச் சாமியார்தான் தலைமை
தாங்கினார். குடியரசு பத்திரிகையின் முதல்
இதழின் அட்டைப் படத்தில் இந்து, கிறிஸ்துவ,
இஸ்லாமிய மதச் சின்னங்கள் பிரசுரிக்கப் பட்டன.
இறைவன் அருளை வேண்டியே இந்த இயக்கத்தை
ஆரம்பிப்பதாக பெரியார்  குறிப்பிட்டார்.

12) பெரியார் நடத்தி வைத்த முதல் சுயமரியாதைத்
திருமணத்தில் மணமகன் இரண்டு பெண்களைத்
திருமணம் செய்து கொண்டார். (அப்போது இது
சட்டபூர்வமாக அனுமதிக்கப் பட்ட ஒன்று. இருதார
மணத்தடைச் சட்டம் எல்லாம் அப்போது கிடையாது)
இறைவன் அருளால் இந்தத் திருமணம் நடைபெறுவதாக
ஓலை எழுதப் பட்டது.

13)இதில் எந்தத் தவறும் இல்லை; குற்றமும் இல்லை.
பார்ப்பனச் சடங்குகளில் இருந்து விடுபட வேண்டும்
என்பதே அன்று ஒரே நோக்கமாக இருந்தது.

14) மேலே கூறியவை அனைத்தும் தெளிவான, ஆதார
பூர்வமான வரலாறுகள். பெரியாரைப் படித்தவர்கள்
இவற்றை அறிவார்கள்.

15) புதிய வாசகர்களுக்காக  இவை இங்கே கூறப்
படுகின்றன.

16) அந்தக் காலக்  கட்டத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி
இருந்தது என்பது பற்றிய தெளிந்த அறிவு
உடையவர்களால் மட்டுமே பெரியாரின்
செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

17) பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பது ஒன்றே
அன்று பெரியாரின் முழுமுதல் பணியாக
இருந்தது. பார்ப்பனர்கள் கடவுளை ஏற்றிப்
போற்றுவதால், பெரியார் கடவுளை எதிர்க்க
ஆரம்பித்தார். அவ்வளவே.

18) கடவுளின் தோற்றம் குறித்து ஆராய்ந்து, கடவுள்
தத்துவம் மற்றும் கடவுள் மறுப்புத் தத்துவம் ஆகிய
தத்துவங்களை எல்லாம் கசடறக் கற்று, தெளிந்து,
கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்தவர் அல்லர்
பெரியார். பார்ப்பான் எதைக் கொண்டாடுகிறானோ
அதை நாம் கீழே போட்டு மிதிக்க வேண்டும் என்ற
முடிவின் அடிப்படையில்தான் பெரியார்
கடவுள் மறுப்பைப் பேசினார்.

19) எனவே பெரியாரின் கடவுள் மறுப்பானது ஏட்டிக்குப்
போட்டி என்ற தன்மையில் அமைந்தது தானே தவிர
அறிவியல் வழிப்பட்டதல்ல. அறிவு பூர்வமானதல்ல.

20) பொருள்முதல்வாதம் என்னும் தத்துவமே உலகின்
தலைசிறந்த கடவுள் மறுப்புத் தத்துவம். இதைத்தான்
மார்க்சியம் தன்னுடைய தத்துவமாக ஏற்றுக்
கொண்டுள்ளது. ஆனால் பெரியாருக்கு இத்தத்துவம்
பற்றி எதுவும் தெரியாது. இது பற்றி அடுத்த கட்டுரையில்
விரிவாக்க காணலாம்.

21) இக்கட்டுரை பெரியாருக்கு எதிரானது என்று
யாரேனும் சில கத்துக் குட்டிகள் கருதலாம்.
கருதித் தங்களின் கசங்கிப்போன அட்டைக்
கத்திகளை எடுத்துக் கொண்டு வரலாம்.

22) பெரியார் இந்த அட்டைக்கத்திகளை நம்பி
இல்லை. பெரியாருக்கு வாளும் கேடயமுமாக
நியூட்டன் அறிவியல் மன்றம் இருக்கிறது. அது
பெரியாரைச் சுற்றி பல்வேறு "பொதுமைய லேசர்
வளையங்களை"(concentric LASER circles) அமைத்து
பெரியாரைப் பாதுகாக்கிறது.

23) பொருள்முதல்வாதம் பற்றிப் புரியாமல், இந்தக்
கட்டுரையின் கருத்துக்களையோ, கவிஞர்
வைரமுத்துவின் கருத்துக்களையோ புரிந்து
கொள்ள இயலாது. அடுத்த கட்டுரையில்
உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி வரும்
பொருள்முதல்வாதம் பற்றிப் பார்ப்போம். (தொடரும்).
***********************************************************
பின்குறிப்பு: வைரமுத்துவின் கட்டுரை முதல்
கமென்டில் தரப்பு பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------









           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக