செவ்வாய், 28 ஜூன், 2016

மொழி பற்றிய அறிவியல் பார்வை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
எந்த மொழியும் கடவுளால் படைக்கப் பட்டதில்லை.
எல்லா மொழிகளையும் மனிதன்தான் படைத்தான்.
ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக்
கண்டுபிடித்தார் என்பது போல, தனி ஒரு
மனிதனால் மொழி கண்டுபிடிக்கப் படவில்லை.
ஒரு நாளிலும் கண்டு பிடிக்கப் படவில்லை.

திரளான மக்களால் பல்வேறு காலங்களின்
படைப்புகள் தொகுக்கப்பட்டே  ஒரு மொழி
உருவாகிறது.

ஆக எந்த மொழியும் தெய்வீக மொழி இல்லை.
எந்த மொழியும் தேவபாஷை இல்லை. தமிழ்
தெய்வீக மொழி என்று கொண்டாடப்  படுகிறது.
சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லப் படுகிறது.
இவை எவையும் உண்மையில்லை. எல்லா
மொழிகளும் மனிதனால் படைக்கப் பட்டவையே.

எல்லா மொழிகளும் மனிதனுக்கானவை. மனிதனுக்குப்
பயன்பட்டவை. பயன்படுபவை. எல்லா மொழிகளுக்கும்
பொதுத்தன்மை உண்டு. அதேபோல ஒவ்வொரு
மொழிக்கும் தனித்தன்மையும் உண்டு.

மனிதர்களைப் போல் மொழிகளுக்கும் பிறப்பு
இறப்பு உண்டு. ஒரு காலத்தில் பேசப்பட்ட மொழிகள்
இன்று அழிந்து போயின என்பதைக் காண்கிறோம்.
பாலி மொழியில் புத்தர் தம் போதனைகளை
எழுதினார். அன்று மக்களால் பேசப்பட்ட மொழி
பாலி. அம்மொழி இன்று இல்லை. இறந்து விட்டது.

நியூட்டன் ஆங்கிலேயர். அவரின் தாய்மொழி
ஆங்கிலம்.  ஆனாலும், உலகையே புரட்டிப்போட்ட
தமது பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா என்ற நூலை
நியூட்டன் லத்தீன் மொழியில்தான் எழுதினார்.
ஏனெனில், லத்தீன் மொழிதான் அறிவியலை 
எழுதத் தக்க மொழி என்று அக்கால ஆங்கில
சமூகம் ஏற்றுக் கொண்டு இருந்தது.

இந்தியாவிலும் அன்றைய இந்திய அறிவியல்
கண்டுபிடிப்புகள் யாவும் சமஸ்கிருத மொழியில்தான்
எழுதப் பட்டு இருந்தன. இது நம் விருப்பு வெறுப்புகளுக்கு
அப்பாற்பட்ட உண்மை.

எனவே, காரணமற்ற, அறிவுக்குப் பொருந்தாத
வெறுப்பு எந்த மொழியின் மீதும் இருக்கத்
தேவையில்லை.

அவரவர்கள் தத்தம் மொழியைப் பேணி வளர்க்க
வேண்டும். இது ஒன்றே தேவையானது.
இதுதான் மொழி குறித்த அறிவியல் பார்வை.

இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பிய
காரல் மார்க்ஸ், சமஸ்கிருத மொழியைக்
கற்றுக் கொண்டார். ஏனெனில் இந்தியாவைப்
பற்றிய தகவல்கள் யாவும் அன்று சமஸ்கிருத
மொழியில்தான் இருந்தன. மார்க்சின் பார்வை
அறிவியல் பார்வை.

தன்னுடைய மொழியை வளப்படுத்த ஒரு
துரும்பைக் கூடத் தூக்கிப்போட வக்கற்ற
வீணர்களே பிற மொழி மீதான வெறுப்பை
மூலதனமாகக் கொள்வார்கள்.

எல்லா மொழிகளும் மானுடத்தின் பொதுவுடைமை.
அறிவுச் செல்வம் எந்த மொழியில் இருந்தாலும்
அதைத் தேடிச் சென்று பெறுவதில் தவறில்லை.
கண்மூடித்த தனமான மொழி வெறுப்பு
மனித குலத்திற்குப் பயன் தராது.
***********************************************************      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக