திங்கள், 27 ஜூன், 2016

எங்கும் சமஸ்கிருதம் எதிலும் சமஸ்கிருதம்!
தடுக்கி விழுந்தால் சமஸ்கிருதம்!
அஜித், விஜய், கமல், ரஜனி பெயர்களின்
பொருள் என்ன?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
தமிழ்க் குழந்தைகளின் ஒரு கோடிக்கும் மேலான
பெயர்களைப் படித்து ஆராய்ந்து, அதன் பிறகு
இக்கட்டுரை எழுதப் படுகிறது.

நடப்பாண்டு (2016) மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த
25000 மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைப்
படித்துப் பாருங்கள். 25000 குழந்தைகளின் பெயர்கள்
எந்த மொழியில் உள்ளன என்று தெரியும்.

அதுபோல, நடப்பாண்டின் பொறியியல் தரவரிசையில் உள்ள ஒன்றேகால் லட்சம் மாணவர்களின் பெயர்களைப்
படித்துப் பாருங்கள்.  உண்மை தெரியும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்
மேலாக, பொறியியல், மருத்துவம், ஐ.ஐ.டி தரவரிசைப்
பட்டியலில் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின்
பெயர்களை  பரிசீலித்து உள்ளது.  

முக்காலே மும்மாகாணி பெயர்கள் சமஸ்கிருதத்தில்
உள்ளன. மேலும் இஸ்லாமிய மாணவர்களின்
பெயர்களில் எதுவும் தமிழில் இல்லை. கிறித்துவக்
குழந்தைகளின் பெயர்களும் தமிழில் இல்லை.

சேவியர், டேவிட், ஃபிரான்சிஸ், அல்போன்ஸ், பீட்டர்
போன்ற பெயர்களும்,
அன்சாரி, ஜமாலுதீன், ஷம்சுதீன், ரஸியா, பாத்திமா
போன்ற பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் இல்லை.

சுருங்கக் கூறின், தமிழகக்  குழந்தைகளின்
பெயர்களில்  97 சதம் பிற மொழிப் பெயர்களே.
3 சதம் மட்டுமே தமிழ்ப் பெயர்கள்.

இவ்வாறு ஒரு கோடிப் பெயர்களை ஆராய்ந்ததில்
ஓர் உண்மை புலப்பட்டது. அது என்ன? ஐயங்கார்
குடும்பங்களில்தான் பிள்ளைகளுக்குத் தமிழில்
பெயர் வைக்கிறார்கள் என்ற உண்மைதான் அது.
இது அழியாத உண்மை.

தமிழ்நாட்டில் அய்யங்கார்களின் எண்ணிக்கை
ஒன்றரை சதம். அதாவது மூன்று சதம் மட்டுமே
மக்கள்தொகை உள்ள பார்ப்பனர்களில் பாதிப்பேர்
ஐயங்கார்கள் என்று எடுத்துக் கொண்டால்.

ஒன்றரை சதமே உள்ள ஐயங்கார்கள், மொத்தத்
தமிழ்ப் பெயர்களில் 50 சதத்திற்கு மேல் உள்ள
பெயர்களை வென்று விடுகிறார்கள். ஆனால்
திராவிட இயக்கப் பின்புலம் உள்ள சூத்திரக்
குடும்பங்களில் 97 சதம் பெயர்கள் சமஸ்கிருதப்
பெயர்களே.

ஆராவமுதன், மணவாளன், ஆண்டாள், கோதை,
நப்பின்னை, மாலன் போன்ற பெயர்கள் 
ஐயங்கார் குடும்பங்களில் இயல்பு.

நிற்க. பிரபலமான நடிகர்களின் சமஸ்கிருதப்
பெயர்களின் பொருளை அறிவோம்.

அஜிதா என்ற பெயர் 1970களில் இந்தியப் புரட்சிகர
இயக்கத்தை புரட்டிப் போட்ட பெயர். அஜிதா
கேரளத்தைச் சேர்ந்த ஒரு நக்சல்பாரிப் போராளி.
அதாவது மாவோயிஸ்ட் போராளி. கேரளத்தில்
புன்புன் காவல் நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களைக்
கைப்பற்றிய ஒரு பெண் போராளி.

அஜிதா என்றால் வெல்ல முடியாதவர் என்று பொருள்.
அஜித் என்பது அதன் ஆண்பால் பெயர். ஆக,
அஜித் = வெல்லற்கரிய, வெல்ல முடியாத.

விஜய் என்றால் வெற்றி என்ற பொருள் பலருக்கும்
தெரியும். விஜயன், விஜயா என்று ஆணுக்கும்
பெண்ணுக்கும் தமிழ்நாட்டில் பெயர்கள் உண்டு.

கமல் என்றால் தாமரை. இதுவும் அனைவரும்
அறிந்ததே. பங்கஜம் என்றாலும் தாமரை. அம்புஜம்
என்றாலும் தாமரை.

ரஜனிகாந்த் என்றால்? ரஜனி= இரவு (ராத்திரி)
காந்தம் என்றால் ஈர்ப்பு. சூரியனை நோக்கி
ஈர்க்கப்படும் பூ சூரியகாந்தி. அதுபோல, இரவை
நோக்கி (நிலாவை நோக்கி) ஈர்க்கப்படும் பூ
என்ற பொருளில்  ரஜனிகாந்த் என்ற பெயர்
அமைகிறது.

எம்மிடம் மூன்று அகராதிகள் உள்ளன. மொழி சார்ந்த
அகராதிகள். 1) தமிழ் அகராதி (சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்). 2) ஆங்கில அகராதி
(ஆக்ஸ்போர்டு).3) சமஸ்கிருத அகராதி.

அகராதியைப் புரட்டாமலேயே  மேற்கூறிய
சமஸ்கிருதப் பெயர்களின் பொருளை எம்மால்
சொல்ல முடிந்தது.

இக்கட்டுரை கூறும் நீதி என்ன? 97 சதம் தமிழர்களின்
பெயர்கள் தமிழில் இல்லை. தடுக்கி விழுந்தால்
சமஸ்கிருதப் பெயருடைய தமிழன் மீதுதான்
தடுக்கி விழ முடியும். எங்கும் சமஸ்கிருதம்!
எதிலும் சமஸ்கிருதம்!

யாராவது தமிழ்ப்பெயர் கொண்ட தமிழன் மீது
தடுக்கி விழ விரும்பினால், இக்கட்டுரை ஆசிரியர்
மீது விழலாம். அதற்குக் கட்டணம் ரூபாய் ஆயிரம்.

எனவே, சமஸ்கிருத எதிர்ப்பு என்று தமிழ் தேசியப்
போலிகள் யாராவது சொன்னால் சிரிப்புச் சிரிப்பாக
வருகிறது. என்னுடைய சிரிப்புச் சத்தம் கல்லறையில்
உறங்கும் மறைமலையடிகளுக்குக் கேட்டிருக்குமோ
என்னவோ, அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்கிறார்.

சமஸ்கிருத எதிர்ப்பு குறித்துப் பேச, மறைமலை
அடிகளையும்  நியூட்டன் அறிவியல் மன்றத்தையும் 
தவிர வேறு யாருக்கும் அருகதை கிடையாது.
*********************************************************************


MUKKALE MUNDAANI ERUTHAAN


முக்காலே முண்டாணி என்றுதான் 
எழுத நினைத்தேன். புரியாதே என்பதால் 
முக்காலே மும்மாகாணி என்று எழுதினேன்.
நலம் விசாரிப்புக்கு நன்றி. 



 




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக