சனி, 25 ஜூன், 2016

(2) உண்மை சுடுகிறது!
வைரமுத்து கூறிய உண்மையும் எழுந்த சர்ச்சையும்!
திராவிட நாத்திகம் அறிவியல் வழிப்பட்ட
நாத்திகம் அல்ல, போலி நாத்திகமே!
--------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
எழுபதுகளின் பிற்பகுதியில் மதுரைப் பல்கலையில்
எம்.ஏ. முதுகலை தமிழ் இலக்கியப்  படிப்பில் 12 தாள்
இருந்தது. (அதே காலத்தில் சென்னைப் பல்கலையில்
10 தாள்தான்) அவற்றுள் ஒரு தாள் "உரையாசிரியர்கள்"
என்பது. ஒப்பிலக்கியம், சைவ சித்தாந்தம் போன்று
மாணவர்கள் தம் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யும்
பாடம் இது. இதை இங்கு கூறக் காரணம்,
உரையாசிரியர்களுக்கு உள்ள முக்கியத்துவமே.

அடியார்க்கு நல்லார், அரும்பதவுரைகாரர்
என்றெல்லாம் உரையாசிரியர்கள் இருந்தனர்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்
என்று கேட்டால்  அடியார்க்கு நல்லார் என்று
சொல்லத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை,
புலியூர்க்கேசிகன் என்றாவது சொல்லத் தெரிந்து
இருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே
இப்பத்திகளின் கூற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

தமிழ் தமிழ் என்று இரட்டைக் கிளவியாகவும்
அடுக்குத்  தொடராகவும் கத்துவோர் கதறுவோர்
கழறுவோர், நச்சினார்க்கினியர் முதல் கலைஞர்
கருணாநிதி வரையிலான உரையாசிரியர்களை
அறிந்திராவிட்டால், தமிழ் என்ற சொல்லை
உச்சரிக்கும் அருகதை அவர்களுக்கு இல்லை.

உரையாசிரியர்களில் பலர் தமது உரையே
மெய்யுரை என்று நிறுவி உள்ளனர். அவ்வாறு
நிறுவிடும் பொழுது, பிறரின் தவறான உரையை
மேற்கோள் காட்டி, "இவ்வுரை போலியுரை என்க"
என்று சுட்டுவது உண்டு. உரையாசிரியர்களை
வாசித்தோர் இதை நன்கு அறிவர்.

உரையாசிரியர்களின் மரபைப் பின்பற்றியே,
அவர்கள் பயன்படுத்திய சொல்லட்சியான "போலி"
என்ற சொல்லாட்சியை நியூட்டன் அறிவியல் மன்றம்
பயன்படுத்துகிறது.

திராவிட இயக்கம் முன்னெடுத்த நாத்திகம் போலி
நாத்திகமே  என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
அடித்துக் கூறுகிறது. இங்கு போலி என்ற
சொல்லாட்சியை  யாம்  தெளிந்த புரிதலுடன்,
உரையாசிரியர்களின் மரபில் நின்று கொண்டு
பயன்படுத்தி உள்ளோம். (தமிழ் இலக்கணம் கூறும்
முதல் போலி, இடைப்போலி, கடைப்போலி ஆகியவை
குறித்து வாசகர்கள் படிக்கலாம்).

நிற்க. கடவுள் மறுப்பை  பெரியாருக்கு முன்பே
முன்னெடுத்தவர்கள் இந்த மண்ணில் பல்லாயிரம்
பேர் உண்டு. இந்தியாவிலும் சரி,  தமிழகத்திலும் சரி,
கடவுள் மறுப்புக்கு குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு
கால வரலாறு உண்டு. உலகின் வேறெந்த
பாகத்தையும் விட, இந்தியாவில்தான்
பொருள்முதல்வாதம் என்னும் கடவுள் மறுப்புத்
தத்துவம் சிறந்தோங்கி இருந்தது என்பதற்கான
வரலாற்றுச் சான்றுகளும் நிரூபணங்களும் உண்டு.

தமிழ் மண்ணே கடவுள் மறுப்பு மண்தான்.
என்றாலும்  இது குறித்ததெல்லாம் அறிய
பெரியார் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை.
பெரியார் பேசிய நாத்திகம் என்பது
பொருள்முதல்வாதம் அல்ல. பெரியாரின்
நாத்திகத்தில்  துளிகூட தத்துவச்  சாரம்
கிடையாது. அறிவியலின் சுவடு கூடக்  கிடையாது.
ஆத்திகம் வாளை உருவிக் கொண்டு வரும்போது,
பெரியாரின் நாத்திகத்தால் ஆத்திகத்தை
வீழ்த்த முடியாது.

எனவேதான் வந்த வேகத்திலேயே பெரியாரின்
நாத்திகம் வெளியேறி விட்டது. இந்த உண்மையைப்
புட்டுப் புட்டு வைக்கிறார் கவிஞர் வைரமுத்து.

நாத்திகர் என்ற பாத்திரத்தை வகித்ததை விட,
இந்து மத எதிர்ப்பாளர் என்ற பாத்திரத்தையே
பெரிதும் வகித்தவர் பெரியார். பிற மதங்களை
விமர்சிக்காதவர் பெரியார். குறிப்பாக இஸ்லாம்
மதத்தை ஆதரித்தவர் பெரியார். எனவேதான்
இஸ்லாமிய மத அபிமானிகளின் செல்லப்
பிள்ளையாகப் பெரியார் கொண்டாடப் படுகிறார்.

தீவிர பெரியார் ஆதரவாளரான பேராசிரியர்
அ மார்க்ஸ், தாம் எழுதிய "பெரியார்" என்ற
சிறுநூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"திராவிட சமயம் என்பதே இஸ்லாம்தான் என்று
பெரியார் கருதினார்".

ஆக, இஸ்லாமியச் சார்பு, கிறிஸ்துவத்தைப்
பொறுத்து மௌனம், தீவிர இந்துமத எதிர்ப்பு
ஆகிய மூன்றும்தான் பெரியாரின் நாத்திகத்தின்
சாரம். இதை எவ்வாறு அறிவியல்வழி நாத்திகமாக
ஏற்க இயலும்?
-----------------------தொடரும்----------------------------
**********************************************************************    







  











            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக