ஞாயிறு, 19 ஜூன், 2016

சமஸ்கிருதம் கற்பதால்
சமஸ்கிருத எதிர்ப்பு மங்கி விடாது!
சமஸ்கிருதப் பேரறிஞரான மறைமலை அடிகள்
ஏன் சமஸ்கிருதத்தை எதிர்த்தார்?
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------
மறைமலை அடிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்
ஆகிய மூன்று மொழிகளிலும் கரை கண்டவர். 75 ஆண்டு
காலம் வாழ்ந்து 1950இல் மறைந்தார் இவர்.

இவரின் இயற்பெயர் வேதாச்சலம். வேதம் எனில் மறை
என்று தமிழில் பொருள்படும். நால்வேதம் என்பதைத்
தமிழில் நான்மறை என்பர். வேதம் ஏன் மறை எனப்படுகிறது
என்றால், அது மறைத்து வைக்கப் பட்டமையால். எனவே
மறை என்பது காரணப் பெயர் என்று அறிக.
இடுகுறி அன்று.

"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றியுரைத் (து) ஏட்டின் புறத்தெழுதார்--ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று"
என்ற திருவள்ளுவ மாலைப் பாடலை ஓர்க. மறை
என்ற சொல்லாட்சி காண்க.

அசலம் என்றால் மலை என்று பொருள். ஹிமம்+ அசலம்
என்பதே ஹிமாச்சலம் ஆகும். இமய மலை என்று பொருள்.
பாரதியார் இமயமலையைப் பனிமலை என்றார்.
(வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்). ஹிமம்
என்றால் பனி.  

இதுபோலவே வேங்கடம் + அசலம் = வெங்கடாசலம்.
வேங்கட மலை  என்று பொருள்.

வேதாசலம் என்ற சமஸ்கிருதப் பெயரை மறைமலை
என்று மாற்றிக் கொண்டார். சென்னைக்கு அருகில்
உள்ள காட்டாங்கொளத்தூர் என்ற ஊரை மறைமலை
நகர் என்று பெயர் மாற்றிய கலைஞர் அடிகளாருக்குப்
புகழ் சேர்த்தார். தம் வாழ்நாளின் பிற்பகுதியில்
துறவு பூண்ட அடிகளார் சுவாமி வேதாசலம் ஆகிப்
பின்னர் மறைமலை அடிகள் ஆனார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று
மொழிகளையும் மறைமலை அடிகள் கற்றார்.
அவர் காலத்தில் (1876-1950) விரும்பும் எந்த
மொழியையும் எவரும் கற்க முடியும். அதற்கான
சூழல் அன்று இருந்தது. இன்று தமிழகத்தில்
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே
ஒருவர் கற்க இயலும். மூன்றாவது மொழி கற்க
விரும்புவோர் தம் சொந்தச் செலவிலும் சொந்த
ஏற்பாட்டிலும் மட்டுமே கற்க இயலும்.  

பல மொழி கற்றதால் மறைமலை அடிகள் தமிழின்
உயர்வை உணர்ந்தார். சமஸ்கிருதமானது தமிழின்
மீது செலுத்திய ஆதிக்கத்தில் இருந்து தமிழை
மீட்டெடுத்தார்.

சமஸ்கிருதம் ஏன் அழிந்தது என்பதற்கான
காரணங்களை ஆராய்ந்து அறிந்தார் அடிகளார்.
துளியும் நெகிழ்ச்சித் தன்மையற்ற வறட்டுத்தனமான 
இலக்கண அமைப்பும் உச்சரிப்பின் கடினமும்
சமஸ்கிருதத்தை சாகடித்தன என்பதை உலகிற்கு
உணர்த்தினார். தனக்கென்று சொந்தமாக ஒரு லிபியை
(native script) எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம்
கொண்டிருக்கவில்லை என்பதையும் உலகிற்கு
உணர்த்தினார் அடிகளார்.

காளிதாசனின் நாடகங்களில் கூட, அரசனும் ராஜகுருவும்
மட்டுமே சமஸ்கிருதத்தில் பேசுவார்கள். அரசி கூட
சமஸ்கிருதத்தில் பேச மாட்டார். இவ்வாறு உச்சத்தில்
இருந்தபோதுகூட, பரந்துபட்ட மக்களிடம் இருந்து
அந்நியப்பட்ட மொழியாகவே சமஸ்கிருதம் இருந்தது
என்பதை அறிந்தார் அடிகளார்.

எத்தகைய முயற்சிகளாலும் சமஸ்கிருதத்தைப்
பிழைக்க வைக்க முடியாது என்பதையும் அடிகளார்
உணர்ந்தார். எனவேதான் அடிகளார் சமஸ்கிருதத்தை
எதிர்த்தார்.
*******************************************தொடரும்***************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக