புதன், 29 ஜூன், 2016

அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தும் சமூகம்
அறிவியல் மனப்பான்மையைப் பெறவில்லை!
சேலம் வினுப்பிரியா தற்கொலை உணர்த்தும்
உண்மை என்ன?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
ஒரு புகைப்படம் கிடைத்தால் போதும். அதை
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நிர்வாணமாக
இருப்பதாகக் காட்டலாம். ஆபாசமாகச் சித்தரிக்கலாம்.

இதெல்லாம் இன்று முகநூலில் செய்ய முடியும்.
ஆனால் இந்த உண்மையெல்லாம் தற்கொலை
செய்து கொண்ட சேலத்து இளம்பெண்
வினுப்பிரியாவின் பெற்றோர்களுக்குத் தெரியாது.

நாட்டில் ஒரு பிரிவினை நிலவுகிறது. ஒருவிதமான
எலெக்ட்ரானிக் பிரிவினை இது. டிஜிட்டல் குடிமக்கள்,
டிஜிட்டல் அல்லாத குடிமக்கள் (digital and non-digital citizens)
என்று மொத்த சமூகமே இரண்டாகப் பிரிந்து
கிடக்கிறது.  

இன்றைய இளைய தலைமுறை டிஜிட்டல்
தலைமுறை (digital generation) ஆகும். இன்றைய
இளைஞர்கள் அதாவது 1995க்குப் பிறகு
பிறந்தவர்கள் எல்லோருமே டிஜிட்டல் குடிமக்கள்.

முந்தைய தலைமுறையில் வெகுசிலர் மட்டுமே
டிஜிட்டல் குடிமக்கள். ஏனையோர் டிஜிட்டலற்ற
குடிமக்கள். வினுப்பிரியாவின் பெற்றோர்
டிஜிட்டல் உலகம் பற்றி அறியாதவர்கள்.
இது அவர்களின் குறை அல்ல.

ஒட்டுமொத்த சமூகமும் அறிவியலின் பயன்களை
நுகர்கிறது. 1970களில் கல்லூரிகளில் சேரும்
மாணவர்கள் தங்களின்  சான்றிதழை டைப்
அடித்து அட்டெஸ்டேஷன் வாங்கி அதைக்
கல்லூரியில் சமர்ப்பிப்பார்கள். அன்று ஜெராக்ஸ்
இயந்திரம் கிடையாது. இன்று ஒவ்வொரு
பாமரனும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை
என்று எல்லாவற்றையும் ஜெராக்ஸ் எடுக்கிறான்.

கணினி, மொபைல், இணையதளம், முகநூல்
யூட்யூப் என்றெல்லாம் நவீன வரவுகள் வந்து
விட்டன. மொத்த சமூகமும் அவற்றை
நுகர்கிறது. ஆனால் அறிவியல் மனப்பான்மை
வளரவில்லை.

என் பெற்றோர்களே என்னை நம்பவில்லை என்று
வினுப்பிரியா கூறினாராம். எப்படி அம்மா
நம்புவார்கள்? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்
அல்ல. இது அறிவியல் சார்ந்த விஷயம்.

வினுப்பிரியா, நீ B.Sc Chemistry படித்து இருக்கிறாய்.
உன் தா யும் தகப்பனும் படித்து இருக்கிறார்களா?
முகநூல் பற்றியும் morphing செய்வது பற்றியும்
உனக்குத் தெரியும். உன் பெற்றோருக்குத்
தெரியுமா?

அவர்கள் உன்னை நம்பவில்லை என்று நீ எப்படி
முடிவுக்கு வரலாம்? ஒரு புகைப்படத்தை வைத்துக்
கொண்டு, அதை எப்படி வேண்டுமானாலும்
உருவகம் செய்யலாம் என்ற தகவல் உனக்குத்
தெரியும் என்பதாலேயே, உன் பெற்றோருக்கும்
தெரியும்; தெரிய வேண்டும் என்று எப்படி
நீ கருதினாய்?

படித்த பிள்ளைகளுக்கே அறிவியல் மனப்பான்மை
ஏற்படவில்லையே! படிக்காத உன் பெற்றோர்களுக்கு
எப்படி அந்த மனப்பான்மை உருவாகியிருக்கும்?

தென்னிந்தியாவிலேயே தமிழ்ச் சமூகம்தான்
அறிவியல் மனப்பான்மை வளராத சமூகம்.
கேரளம், ஆந்திரம், கர்நாடகத்துடன் ஒப்பிட்டால்
தமிழ்நாட்டில்தான் அறிவியல் மனப்பான்மை
மிகவும் குறைவு. இதுதான் உண்மை.

எந்த ஒன்றையும் திறந்த மனதுடன் பரிசீலித்துப்
பார்க்கிற பழக்கம் தமிழர்களுக்கு அறவே
கிடையாது. எதை எடுத்தாலும் வில்லன், ஹீரோ
என்ற இரண்டு துருவ நிலைகளில் வைத்துப்
பார்க்க மட்டுமே தமிழன் பழக்கப் பட்டுள்ளான்.

அறிவியல் மனப்பான்மைக்கு மிகப்பெரும்
எதிரியாக சமகாலத் தமிழன் இருக்கிறான்.
இவனுக்கு, எதையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே
முடிவுக்கு வர வேண்டும் என்ற  ஆராய்ச்சி
மனப்பான்மை துளியும் இல்லை. துருப்பிடித்த
குட்டி முதலாளித்துவத் தத்துவங்கள் கூறும்
முன்முடிவுகளை யோசனையே இல்லாமல்
ஏற்றுக் கொண்டு திரிகிறான்.

மிகப்பெரும் மூடநம்பிக்கைகளின் சுரங்கமாக,
ஊற்றுக் கண்ணாக சமகாலத்து தமிழன்
திகழ்கிறான். இவனைப் பிணித்திருக்கும்
விலங்குகளை உடைத்து, இவனை விடுதலை
செய்யாமல், விடிவு இல்லை.

அறிவியலைப் போற்றுவோம்!
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்!!
*****************************************************************





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக