செவ்வாய், 21 ஜூன், 2016

யோகா சரியா, தவறா? அது முற்போக்கா, பிற்போக்கா?
ஓர் உண்மை நிலை விளக்கம்!
--------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------------
ஐரோப்பியர்களின் கழிப்பறையில் ஒரு வஸ்து கிடந்து
நாறுகிறது என்றால், "ஆஹா, என்ன நறுமணம்" என்று
விதந்தோதி, அதைச் சந்தனமாய் வழித்துப்பூச
ஒரு கூட்டம் வரிசையில் நிற்கும். இக்கூட்டத்தினர்
வேறெங்கும் விட தமிழ்நாட்டில் அதிகம். நிற்க.

இக்கட்டுரை செழுமையான இந்தியத் தத்துவஞான
மரபு என்னும் விசாலமான ஆகாயத்தின் ஒரு சிறிய
சாளரத்தைத் திறந்து காட்டுகிறது.

தத்துவ ஞானம் என்பதை, இந்த உலகத்தைப்
பற்றிய, பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு பார்வை
என்று வைத்துக் கொள்ளலாம்.

தத்துவங்களைப்  பொறுத்த மட்டில் மேலை ஐரோப்பியத்
தத்துவங்கள் காலத்தால் பிந்தியவை. கீழ்த்திசைத்
தத்துவங்கள் யாவும் தொன்மையானவை.  பன்முகத்
தன்மை வாய்ந்தவை. செழுமையான மரபுக்குச்
சொந்தமானவை.

மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ் தத்துவங்களை
இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார். அவை:
1) பொருள்முதல்வாதம் 2) கருத்துமுதல்வாதம்.
எனினும் எங்கல்சுக்கு முன்னரே இந்தப் பிரிவினை
தத்துவ உலகில் இருந்தது.

எளிமையாகக்  கூறுவதென்றால், பொருள்முதல்வாதம்
என்பது கடவுளை ஏற்காத தத்துவம். கருத்துமுதல்வாதம்
என்பது கடவுளை ஏற்கும் தத்துவம்.

இந்தியத் தத்துவஞான மரபில், சாங்கியம் என்று
ஒரு தத்துவம் உண்டு. சற்று ஏறக்குறைய புத்தர்
காலத்திற்குப் பிந்திய தத்துவம் இது. இது ஒரு
நாத்திகத்  தத்துவம். அதாவது பொருள்முதல்வாதத்
தத்துவம். இத்தத்துவத்தின் அறிதல் முறை
பிரத்தியட்சம், அனுமானம்,  சாட்சியம் என்னும்
மூன்று முறைகளைக் கொண்டதாகும்.

இத்தத்துவம் வளர்ந்தபோது, மேலும் விரிவடைந்த
போது யோகா (yoga) என்னும் யோகக்கலையை
இத்தத்துவம் உருவாக்கியது. பதஞ்சலி முனிவர்
கி.பி. நான்காம் நூற்ராண்டில் யோகம் குறித்து
அதுவரை நிலவிவந்த கருத்துக்களையும்
பயிற்சி முறைகளையும் தொகுத்தார்.

ஆக, யோகா என்பது பொருள்முதல்வாதத்தின்
குழந்தை. நாத்திகத் தத்துவத்தின் குழந்தை.
தமிழ்நாடு என்பது போலி நாத்திகர்களின்
சொர்க்கம் என்பதால், போலிப் பகுத்தறிவுவாதிகளால்
யோகா இகழப்படுகிறது.

போலிப் பகுத்தறிவாதிகளும் தொ பரமசிவம் போன்ற
பொருள்முதல்வாதம் அறியாத மூடர்களும், யோகாவை
எதிர்ப்பதன் மூலம் பொருள்முதல்வாதத்தை
எதிர்த்துச் சண்டையிட முயலுகின்றனர்.

தத்துவப் பின்புலமோ தத்துவ வலிமையோ அறவே
இல்லாத குட்டி முதலாளித்துவ இயக்கங்களால்
தமிழ்நாட்டில் போலி நாத்திகம் ஆரவாரம் செய்து
கொண்டிருக்கிறது. நவீன அறிவியலின்
வளர்ச்சியானது, பிற்போக்கான ஆத்திகத்தையும்
அதைவிடப் பிற்போக்கான போலி நாத்திகத்தையும்
வெட்டி வீழ்த்திக் கொண்டு வருகிறது.
**************************************************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக