புதன், 29 ஜூன், 2016

தமிழ் இனி முத்தமிழ் அல்ல!
அறிவியல் தமிழையும் சேர்த்து இனி நான்கு தமிழ்!
நான்காம் தமிழாக அறிவியல் தமிழ்!
இதை ஆதரிக்காதவன் போலித் தமிழனே!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
முத்தமிழ் என்றே தமிழ் அறியப் படுகிறது.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும்
இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கின.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புழுதி படிந்து
கிடந்த தமிழை, சமஸ்கிருதக் கலப்பால், தூய்மை
இழந்திருந்த தமிழை, மறைமலையடிகள்
தலைமையில் பல்வேறு தமிழறிஞர்கள் மீட்டனர்.

அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற
தமிழறிஞர்களைத் தலைவர்களாகக் கொண்டிருந்த
திராவிட இயக்கம் தமிழை பரந்துபட்ட மக்களிடம்
கொண்டு சேர்த்து தமிழுக்கு உயிர்ப்பு அளித்தது.

1950களின் தினசரி செய்தித்தாட்களைப் படித்துப்
பாருங்கள். அக்ராசனர் என்ற சொல் அதிகம்
இருக்கும். அக்ராசனர் என்றால் என்ன பொருள்?
இன்றுள்ளவர்களுக்குத் தெரியாது. தலைவர்
என்று பொருள்.

வேட்பாளர் என்ற சொல்லை அக்கால தினசரிகளில்
யாராவது காட்ட முடியுமா? முடியாது. அபேட்சகர்
என்ற சொல்தான் இருக்கும். இன்னார் அபேட்சை
மனு தாக்கல் செய்தார் என்றுதான் இருக்கும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்றைய இயற்றமிழ் (இயல் தமிழ்) பெருமளவு
தமிழால் ஆனது. அதேபோல் இன்றைய இசைத் 
தமிழும் நாடகத் தமிழும் சமஸ்கிருதத் தாக்கத்தில்
இருந்து பெருமளவு விடுபட்டவை.

சுருங்கக் கூறின், பத்தொன்பதாம் நூற்றாண்டுத்
தமிழின்  பிறமொழிக் கலப்பு களையப்பட்டு,
மேக மறைப்பில் இருந்து விடுபட்ட நிலவு போல
இருபதாம்த நூற்றாண்டுத்  தமிழ் ஒளி சிந்தியது.

என்றாலும், சமூகத்தின் பொருள் உற்பத்தியில்
தமிழுக்கு இடமில்லை. அங்கு ஆங்கிலமே
கோலோச்சுகிறது. உற்பத்தியில் இடம் பெறாத
எந்த மொழியும் அழிந்து படும். எனவே எப்பாடு
பட்டேனும் தமிழை, சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

அதற்கு, தமிழ் அறிவியல் மொழியாக மாற வேண்டும்.
பொருள் உற்பத்தியில் ஆங்கிலம் கோலோச்சுவதற்குக் 
காரணம் அது அறிவியல் மொழியாக இருப்பதே.

தமிழில் அறிவியல் இருக்க வேண்டும். அறிவியலைத்
தமிழில் சொல்ல வேண்டும். கோடிக் கணக்கான
அறிவியல் கட்டுரைகள் தமிழில் எழுதப் பட
வேண்டும். லட்சக் கணக்கான அறிவியல்
நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். மருத்துவம்,
பொறியியல் ஆகிய படிப்புகள் தமிழில் இருக்க
வேண்டும். அப்போதுதான் தமிழ் அறிவியல் மொழி
ஆகும். அறிவியல் மொழியாக ஆனால் மட்டுமே
பொருள் உற்பத்தியில் தமிழ் இடம் பெறும்.

எனவே முத்தமிழ் என்று மூன்று தமிழோடு நிறைவு
அடைந்து விட முடியாது. நான்கு  தமிழ் வேண்டும்.
நான்காவது தமிழாக அறிவியல் தமிழ் உருவாக
வேண்டும்.

இல்லையேல் தமிழ் உற்பத்தியில் இருந்து
முற்றாகத் துண்டிக்கப் பட்டு, வெறும் பண்பாட்டு
அடையாளமாக மட்டுமே மிஞ்சும்.

இன்று, இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் வெறும்
அடையாளமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.  
பொருள் உற்பத்தியில் சமஸ்கிருதம் இல்லை.
ஆனால் ஆங்கிலம் பொருள் உற்பத்தியில்
தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து நிற்கிறது.

எனவே, தமிழ் மீது பற்றும் ஆர்வமும் உடைய
எவராயினும், அவரின் முழுமுதல் கடமை என்பது
அறிவியல் தமிழை உருவாக்குவதே. நான்காம்
தமிழாக அறிவியல் தமிழ் என்பதே தமிழ்ப்
பற்றாளர்களின் இலக்காக இருக்க வேண்டும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்தக்
கருத்தை வலியுறுத்தி நிற்கிறது. நான்காம்
தமிழாக அறிவியல் தமிழை உருவாக்க
நியூட்டன் அறிவியல் மன்றம் உறுதி பூண்டுள்ளது.
அதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கி
வருகிறது.

இது ஊர் கூடித்  தேர் இழுக்க வேண்டிய விஷயம்.
நியூட்டன் அறிவியல் மன்றத்தால் மட்டுமே
செய்து முடித்து விடும் அளவுக்கு எளிதான
செயல் அல்ல.

என்றாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பார்த்தாலும் அறிவியல் தமிழை நான்காம்
தமிழாக்க ஆக்குவோம் என்ற குறிக்கோளைப் 
பற்றி நிற்பவர் எவரையும் காண இயலவில்லை.

கண்ணால் பார்ப்பது போதாது என்று ஆற்றல் மிக்க
தொலைநோக்கியைப் பயன்படுத்தி,
360 பாகைகளிலும் சுழன்று சுழன்று பார்த்தாலும்,
நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் என்ற
இலக்கு உடையோரைக் காண இயலவில்லை.

ஆங்காங்கே அறிவியலிலும் தமிழிலும் புலமை
உடைய தமிழார்வலர்கள் தம் சொந்த முயற்சியில்
மேற்கொள்ளும் அறிவியல் பணிகள் மட்டுமே
தமிழுக்கு ஆக்சிஜனாக உள்ளது. இல்லையேல்
பொருள் உற்பத்தியில் இருந்து விலகி நிற்கும்
தமிழ் தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும்
பறி கொடுத்து விட்டிருக்கும்.

என்றாலும் நான்காம் தமிழாக அறிவியல் தமிழை
உருவாக்கும் இந்தப் பாரிய முயற்சியில்
தமிழகத்து தமிழர்களின் ஆதரவைப் பெறுவது
என்பது குதிரைக் கொம்பே என்பதையும்
நியூட்டன் அறிவியல் மன்றம் நன்கறியும்.

அறிவியலிலும் தமிழிலும் புலமை மிக்க
தமிழார்வலர்களை எங்கிருந்தாலும் தேடிப்
பிடித்து அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று
நியூட்டன் அறிவியல் மன்றம் நான்காம் தமிழை
உருவாக்கும்.

நம்முடைய ஆதங்கம் இதுதான். செத்த பாம்பான
சமஸ்கிருதத்தை அடிக்க ஓடோடி வரும்
தமிழர்கள், நான்காம் தமிழின் உருவாக்கத்திற்கு 
ஏன் ஆதரவு தரக் கூடாது?

நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் உருவாக்கப்
பட வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்காதவன்
போலித் தமிழனே. அவன் உயிர் வாழத் 
தகுதியற்றவன்.
********************************************************************

   



    


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக