அத்தியாயம் 2
"பெப்ரவரியிலும் அக்டோபரிலும் "பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்"
Use this version to print | Send feedback
அக்டோபர் புரட்சியின் போக்கும், விளைவும் தொழிலாளர் விடுதலைக் குழுவில் (Emancipation of Labour Group) தொடங்கி, மென்ஷிவிக்குகளின் மத்தியில் முற்றான வெளிப்பாட்டைக் கண்ட, ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் மத்தியில் மிகப் பரந்த முறையில் நிலவியிருந்த மார்க்சிசம் பற்றிய பண்டிதத்தனமான கேலிக்கூத்திற்கு ஒரு கடுமையான அடியைக் கொடுத்தது. இந்தப் போலி மார்க்சிசத்தின் சாராம்சம்," கூடுதலான முறையில் தொழிற்துறையில் வளர்ச்சியுற்றுள்ள ஒரு நாடு குறைந்த வளர்ச்சியுடைய நாட்டிற்கு தனது சொந்த எதிர்கால அபிவிருத்திக்கான தோற்றத்தையே காட்டுகிறது" என்று மார்க்ஸ் நிபந்தனைக்குரியதும் மட்டுப்படுத்தப்பட்டும் கூறியிருந்த கருத்தாய்வு தவறான முறையில் முற்றமுழுதான நிலைக்கும் (மார்க்சின் சொந்தக் கருத்தை பயன்படுத்தினால்) வரலாற்றுக்கு மேலான விதி என்ற நிலைக்கும் உயர்த்தப்பட்டதுடன், பின்னர் இந்த விதியின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க கட்சியின் தந்திரோபாயத்தை நிறுவுவதற்கும் முயன்றது. இத்தகைய ஒரு கருத்தாக்கம், இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் "ஒரு முன்னோடியை" உருவாக்கும்வரை, அதிகாரத்தை கைப்பற்றுவதில் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ளக் கூடிய போராட்டத்தை பற்றி குறிப்பிடுவதை கூட இயல்பாகவே விலக்கி வைத்தது.
தன்னுடைய வருங்காலத்தின் சில தனித்தன்மைகளை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின் வரலாற்றில் ஒவ்வொரு பின்தங்கிய நாடும் காண்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை; ஆனால், இந்த வளர்ச்சி முற்றாக இவ்வாறுதான் மீண்டும் மீண்டும் நிகழும் என்ற பேச்சு தேவையற்றதாகும். மாறாக,முதலாளித்துவ பொருளாதாரம் ஓர் உலகந்தழுவிய தன்மையை கூடுதலாக அடையும்போது, பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சி வியத்தகு முறையில் கூடுதலான தனித்தன்மையானதாகும்; ஏனெனில் தங்களுடைய பிற்போக்குத்தனத்தின் கூறுபாடுகளை தவிர்க்கமுடியாமல், முதலாளித்துவ வளர்ச்சியின் சமீபத்திய வெற்றிகளுடன் அது இணைத்துக் கொள்ளும். ஜேர்மனியில் விவசாயிகளின் யுத்தம் என்ற நூலில் ஏங்கல்ஸ் எழுதினார்: "அனைத்து இடங்களிலும் ஒரேவிதமான வளர்ச்சியை ஒரே நேரத்தில் தோன்றவேண்டியது தேவையில்லாததாக தோன்றும், அந்தக் குறிப்பிட்ட புள்ளியில் [முதலாளித்துவத்தினர்] தன்னுடைய நெருங்கிய கூட்டாளி அதாவது, பாட்டாளி வர்க்கம் தன்னையும்விடக் கூடுதலாக வளர்ந்து விட்டது என்பதை கவனிக்கத் தொடங்குகிறது." [p.16]
வரலாற்று வளர்ச்சியின் போக்கு ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தை, மற்ற அனைத்து நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தினரைவிட, இந்தப் பார்வையை மிக முன்னதாகவும் முற்றிலுமாகவும் கொள்ளக் கட்டாயப்படுத்தியது. 1905ம் ஆண்டிற்கு முன்னரே கூட லெனின் ரஷ்ய புரட்சியின் வினோதமான தன்மையை, "பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற சூத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தினார். பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி காட்டியபடி,இந்த சூத்திரமே பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச சர்வாதிகாரம் விவசாயிகளினால் ஆதரவிற்குட்பட்ட பின்னர்தான் பொருளுடையதாயிற்று எனக் கூறவியலும். இந்தப் பிரச்சினை பற்றிய லெனினுடைய கருத்தாய்வு முற்றிலும் புரட்சிகரமானதும், பெரும் இயக்க சக்தியுடையதாக இருந்தாலும்கூட, முற்றிலும் சமரசத்திற்குட்படமுடியாத வகையில் மென்ஷிவிக்குகளின் வடிவமைப்பிற்கு எதிரிடையான வகையில் இருந்தது; அவர்களின் கருத்துப்படி ரஷ்யா வளர்ச்சியடைந்த தேசங்களின் வரலாற்றை திரும்பச்செய்வதை மட்டுமே பாவனை செய்யும், முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தில் இருக்கும், சமூக ஜனநாயகவாதிகள் எதிர்க்கட்சியில் இருப்பர். ஆயினும், எமது கட்சியை சேர்ந்த சில வட்டங்கள் லெனினிது சூத்திரத்தில் உள்ள பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரம் பற்றி வலியுறுத்தாமல் அதன் சோசலிச தன்மைக்கு எதிரான அதன் ஜனநாயக தன்மையைத்தான் வலியுறுத்தினர். மீண்டும் இதன் பொருள் ஒரு பின்தங்கிய நாடான ரஷ்யாவில் ஒரு ஜனநாயகப் புரட்சிதான் நினைத்துப் பார்க்க முடியும். சோசலிசப் புரட்சி மேலை நாடுகளில் தொடங்கும், நாம் சோசலிசப் பாதையில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றை பின்தொடர்ந்துதான் செல்ல முடியும். ஆனால் அப்பிரச்சினை பற்றிய அச்சூத்திரப்படுத்தல் தவிர்க்கமுடியாமல், மென்ஷிவிசத்திற்குள் வழுக்கிச்சென்றது, மற்றும் புரட்சியின் பணிகள் முன்கூறலுக்காக இல்லாது உறுதியான நடவடிக்கைக்காக 1917ல் நம்முன் வைக்கப்பட்டபொழுது இதுதான் முற்றிலுமாக வெளிப்பட்டிருந்தது.
புரட்சியின் உண்மையான நிலைமைகளில், ஜனநாயகத்திற்கு ஆதரவுகொடுப்பது என்ற நிலைப்பாட்டை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு தள்ளுதல் என்றால்,சோசலிசத்தை "சற்று முன்கூட்டியே வந்துள்ளது" என்ற கருத்தில் எதிர்ப்பது என்பது, அரசியலில் பாட்டாளி வர்க்கத்தில் இருந்து குட்டி முதலாளித்துவ நிலைப்பாட்டிற்கு செல்வது போலாகிவிடும். அதாவது தேசிய புரட்சியில் இடதுசாரி நிலைப்பாட்டை கொள்ளுவது என்ற பொருளாகிவிடும்.
அதை மட்டும் தனியே, ஆராய்ந்தால் பெப்ரவரி புரட்சி ஒரு முதலாளித்துவ புரட்சியாகும். ஆனால் இந்த முதலாளித்துவப் புரட்சி தாமதாக வந்து எந்தவிதமான உறுதிப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. முரண்பாடுகளினால் நைந்திருந்த நிலையில், இரட்டை அதிகார முறையில் வெளிப்பாட்டை அவை கொண்டிருந்தன என்ற நிலையில், அது ஒரு நேரடியான பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னோடியாக மாறவேண்டும் - பொதுவாக அதுதான் நடைபெறும், அல்லது ரஷ்யாவை ஒரு அரைக்காலனித்துவ முறையின் கீழ் வாழுதலுக்கு பின்தள்ளி ஏதோ ஒரு விதத்தில் முதலாளித்துவ ஒருசிலவர் ஆதிக்கக்குழுவின் ஆட்சியின் கீழ் தள்ள வேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இதன் விளைவாக பெப்ரவரி புரட்சியை அடுத்த காலம் இரண்டு பார்வைகளில் இருந்து ஆராயப்படலாம்; ஒன்று உறுதிப்படுத்தல், அபிவிருத்தியடைதல் அல்லது "ஜனநாயகப்" புரட்சியை முடிவிற்கு கொண்டுவருதல் அல்லது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தயார் செய்யும் காலம் என்று கொள்ளலாம். முதல் பார்வை மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்களால் (Social Revolutionaries) மட்டுமல்லாமல், எமது கட்சித் தலைமையின் ஒரு குறிப்பிட்ட பகுதியினராலும் கூட கீழ்க்கண்ட வேறுபாட்டுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது: பிந்தையவர்கள் ஜனநாயகப் புரட்சியை முடிந்த அளவிற்கு இடது புறம் தள்ளப்பார்த்தனர். ஆனால் இந்த வழிவகை அடிப்படையிலேயே அதேமாதிரியான ஒன்றுதான்; ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு "அழுத்தத்தைக் கொடுப்பது", அந்த "அழுத்தம்" முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் கட்டமைப்புக்களுக்கு உள்ளே தொடர்ந்து இருக்குமாறு கணக்கிடப்பட்டதாகும். அந்தக் கொள்கை தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருந்தால், புரட்சியின் வளர்ச்சி நம்முடைய கட்சிக்கும் மேலாகக் கடந்து சென்று இறுதியில் தொழிலாளர், விவசாய மக்கட்தொகுப்பின் எழுச்சி, கட்சித் தலைமை இல்லாமல் நடந்திருக்கும்; வேறுவிதமாகக் கூறினால் ஜூலை நாட்கள் மகத்தான முறையில் மீண்டும் நடந்ததேறியிருப்பதை பார்த்திருப்போம்; அதாவது இந்தமுறை ஒரு நிகழ்வு என்றில்லாமல் ஒரு பேரழிவு என்ற வகையில் நடந்திருக்கும்.
அத்தகைய பேரழிவின் உடனடியான விளைவு, எமது கட்சி அழிக்கப்பட்டிருக்கும் என்பது துல்லியமாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகும். இது நம்முடைய கருத்து வேறுபாடுகளின் தன்மை எவ்வளவு ஆழமானவை என்பதை அளக்கும் நுட்பமான அளவுகோலை நமக்கு வழங்குகிறது. மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்கள் புரட்சியின் முதல் கட்டத்தில் கொண்டிருந்த செல்வாக்கு ஒன்றும் தற்செயலானதல்ல. குட்டி முதலாளித்துவ மக்கள் அதிகமாக, அதிலும் முக்கியமாக விவசாயிகள் அதிகமாக மக்கட்தொகுப்பில் இருந்ததையும், புரட்சியே பக்குவமற்ற தன்மையை அடையாதிருந்ததையும் அது பிரதிபலித்தது. இந்தப் பக்குவமற்ற தன்மைதான், "போரில் இருந்து தோன்றிய மிக விதிவிலக்கான சூழ்நிலையின் மத்தியிலே, குட்டி முதலாளித்துவ புரட்சியாளர்களின் தலைமயின் அல்லது அல்லது அதனை ஒத்திருந்த தலைமையின் கைகளில் கொடுத்திருந்தது; அவர்கள் பூர்சுவாக்களின் வரலாற்று உரிமையான அதிகாரத்தை கைப்பற்றுதலை பாதுகாத்தனர். ரஷ்ய புரட்சி பெப்ரவரி முதல் அக்டோபர் 1917 வரை வேறு எந்த விதமான போக்கையும் கொண்டிருந்திருக்க முடியாது என்ற பொருளை இது தந்துவிடவில்லை. பிந்தைய போக்கு வர்க்கங்களுக்கு இடையே இருந்த உறவுமுறைகளில் இருந்து வந்தது என்று மட்டும் இல்லாமல், போர் ஏற்படுத்தியிருந்த தற்காலிக சூழ்நிலையில் இருந்தும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. போரினால், விவசாயிகள் ஒழுங்கமைக்கப்பட்டு பல மில்லியன் கணக்கில் இராணுவத்தில் இருந்ததுடன், ஆயுதமேந்திய வகையிலும் இருந்தனர். பாட்டாளி வர்க்கம் தன்னை தன்னுடைய சொந்த பதாகையின் கீழ் ஒழுங்கமைத்துக் கொள்ளுவதில் வெற்றியடைந்து கிராமப்புற மக்களின் தலைமையயும் எடுக்கும் முன்னரே, குட்டி முதலாளித்துவ புரட்சியாளர்கள் இயல்பான ஆதரவு ஒன்றை,போருக்கு எதிராக எழுச்சி செய்திருந்த விவசாயப் படையில் இருந்து பெற்றனர்.
மொத்தத்தில், அனைத்தும் நேரடியாக சார்ந்திருந்த, இத்தகைய பல மில்லியன் மக்கள் கொண்ட படையின் எளிதிற் கையாளமுடியாத எடையினால் குட்டி முதலாளித்துவ புரட்சியாளர்கள் தொழிலாளர்கள் சுமக்குமாறு அழுத்தத்தைக் கொண்டுவந்து அவர்களுடன் முதல் கட்டத்தில் அவற்றை எடுத்துச்சென்றனர். போருக்கு உடனடியான முந்தைய காலத்தில் நடந்த நிகழ்வுகளால், புரட்சி இதே வர்க்க அடிப்படைகள் கொண்டிருந்தபோதிலும், வேறுவிதமாகச் சென்றிருக்கக் கூடும் என்று விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. ஜூலை 1914ல் பெட்ரோகிராட் புரட்சிகர வேலைநிறுத்தங்களினால் உலுக்கப்பட்டிருந்தது. தெருக்களில் வெளிப்படையாக சண்டையிடக் கூடிய அளவிற்கு விவகாரங்கள் நடந்திருந்தன. இந்த இயக்கத்தின் முழுத் தலைமையும் தலைமறைவு அமைப்பின் கீழும் எமது கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையிடமும் இருந்தது. போல்ஷிவிசம் பொதுவாக தன்னுடைய செல்வாக்கை கலைப்புவாதத்திற்கு எதிரான பொதுவாக குட்டி முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிரான நேரடிப் போராட்டத்தில் பெருக்கிக் கொண்டது. இயக்கத்தின் கூடுதலான வளர்ச்சி என்பது போல்ஷிவிக் கட்சியின் வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் மேலாக பொருளை கொடுத்திருக்கும். வளர்ச்சிகள் சோவியத்துக்கள் அமைக்கும் கட்டத்தை அடைந்திருந்தால், 1914ம் ஆண்டு தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடைய சோவியத்துக்கள் ஆரம்பத்தில் இருந்தே போல்ஷிவிக் சோவியத்துக்களாக இருந்திருக்கும். கிராமங்கள் விழிப்புறுதல் என்பது போல்ஷிவிக்குகளின் தலைமையிலான நேரடி அல்லது மறைமுகமான நகர சோவியத்துக்களின் மூலம் நடந்திருக்கும். இதன் பொருள் கிராமங்களில் இருந்து சமூகப் புரட்சியாளர்கள் உடனடியாக மறைந்திருப்பர் என்பதல்ல. இல்லை. அநேகமாக விவசாயிகள் புரட்சியின் முதல் கட்டம் நரோத்னிக்குகள் (பாப்புலிஸ்ட்டுகளின் [Narodniks- populists]) பதாகையின்கீழ் நடந்திருக்கும். ஆனால், நாம் சுருக்கமாய் வரைந்து காட்டியவாறு காட்டியுள்ள வகையில் நிகழ்வுகள் வளர்ச்சியடைந்திருந்தால், நகரத்தில் இருக்கும் போல்ஷிவிக் சோவியத்துக்களுடன் உடன்பாட்டைக் காணவேண்டி நரோத்னிக்குகள் தங்களுடைய இடதுசாரித்தனத்தை முன்னுக்குக் காட்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பர் அத்தகைய நிலையில், எழுச்சியின் உடனடி விளைவு என்பது முதலில் இராணுவத்தின் உளப்பான்மை மற்றும் நடந்து கொள்ளும் முறை இவற்றை பொறுத்திருக்கும்; அதுவோ விவசாயிகள் உணர்வுடன் பிணைந்திருந்தது. இப்பொழுது, போரின் வெடிப்பு ஒரு புதிய மகத்தான தொடர்பை நிகழ்வுகளின் தொடரில் ஏற்படுத்தியிராவிட்டால், 1914-15 இயக்கம் வெற்றிக்கு இட்டுச்சென்றிருக்குமா என்பதை ஊகித்துணர்வது இயலாதது மட்டும் இல்லை, தேவைக்குமேல் மிதமிஞ்சியதாகும். ஆனால், ஜார் முடியாட்சி அகற்றப்பட்ட,ஜூலை 14 நிகழ்வுகளுடன் தொடங்கிய, வெற்றிகரமான புரட்சி தன்னுடைய போக்கின்பொழுது கண்டிருந்த நிகழ்வுகள், புரட்சிகர தொழிலார்களின் சோவியத்துக்கள் உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றியிருந்திருக்க முடியும் என்றும் பிந்தையவை இடது நரோத்னிக்குகளுடைய உதவியுடன் (ஆரம்பத்தில் இருந்தே!) விவசாயப் பிரிவினரை தன்னுடைய சுற்றுப்பாதைக்குள் ஈர்த்திருக்க முடியும் என்பதற்கு கணிசமான முறையில் சான்றுகள் உள்ளன.
புரட்சிகர இயக்கம் கட்டவிழ்ந்து வந்ததை போர் இடையூறு செய்தது. முதலில் அது இயக்கத்தை வலிமை குன்றச் செய்த வகையில் நடந்துகொண்டு, பின்னர் மகத்தான அளவிற்கு மிக விரைவாக அதை வளர்த்து விட்டது. போரானது பல மில்லியன் கணக்கானோர் இருந்த படையின் வழியாக, சமூக மற்றும் அமைப்பு ரீதியாக முற்றிலும் தனிச்சிறப்புவாய்ந்த தளத்தை, குட்டி முதலாளித்துவ கட்சிகளுக்கு கொடுத்தது. விவசாயிகளின் சிறப்பியல்பு, பெரும் எண்ணிக்கை இருந்தபோதிலும்கூட, ஒரு புரட்சிகர தீவிர உணர்வினால் உந்தப் பெற்றிருந்தும்கூட, ஒழுக்கமைக்கப்பட்ட தளத்தை அவர்களால் கட்டமைக்க முடியவில்லை. தயாராக இருந்த அமைப்பின் தோள்களின்மீது அமர்ந்துகொண்டு, அதாவது இராணுவத்தை கொண்டு குட்டி முதலாளித்துவ கட்சிகள், பாட்டாளி வர்க்கத்தை அச்சுறுத்தி, அதனை பாதுகாப்புவாதம் என்பதன் மூலம் குழப்பின. எனவேதான் லெனின் பழைய முழக்கமான "பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்" என்பதற்கு எதிராக கடும் சீற்றத்துடன் வெளிவந்தார்; இது புதிய சூழ்நிலையில் போல்ஷிவிக் கட்சியை பாதுகாப்புவாத முகாமில் இடது கன்னையாக மாற்றும் தன்மையை கொண்டிருந்தது. லெனினை பொறுத்த வரையில் முக்கியமான பணி, பாதுகாப்புவாத சகதி என்ற குட்டையில் இருந்து தொழிலாள வர்க்கத்தை அகற்றி, முன்னணிக்கு கொண்டுவருவதாகும். அந்த நிபந்தனையின் பேரில்தான், அந்த கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் அடுத்த கட்டத்தில் ஓர் அச்சாக விளங்கி கிராமப்புறத்தில் உழைக்கும் மக்கள் அதைச்சுற்றி தங்களை குழுக்களாக செயல்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவ்விதத்தில், ஜனநாயகப் புரட்சி அல்லது இன்னும் சொல்லப்போனால் பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற கருத்திற்கு எமது அணுகுமுறை எவ்வாறு இருந்திருக்க முடியும்? "எமது கட்சியின் வரலாற்றில் வருந்தத்தக்க பங்கினை பல தடைவையும் முன்பே கொண்டிருந்த பழைய போல்ஷிவிக்குகள், புதிய உயிர்த்த உண்மையின் குறிப்பான கூறுபாடுகளை நன்கு ஆராயாமல், ஞாபகத்தில் கொண்டிருக்கும் சூத்திரங்களை திருப்பித் திருப்பி பயனற்ற முறையில் பேசிவந்துள்ளனர்" என்று கடுமையான முறையில் லெனின் அவர்களை மறுத்துள்ளார். "முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி இன்னும் முழுமையடையவில்லை" என்று கூறிய தோழர் கமனேவின் பழைய போல்ஷிவிக் சூத்திரத்தில் இந்த உண்மை உள்ளடங்கியுள்ளதா?
"அப்படி இல்லை. அச்சூத்திரம் காலம் கடந்துவிட்டதொன்றாகும். அதானல் எவ்விதப் பயனும் கிடையாது. அது இறந்துவிட்டது. அதைப் புதுப்பிப்பதனால் எந்த உபயோகமும் கிடையாது." என லெனின் விடையிறுக்கிறார். [CW--Vol.24, "Letters on Tactics" (April 8-13, 1917),pp.44.50]. லெனின் இடையிடையே தொழிலாளர்களின்,படைவீரர்களின், விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துக்கள் பெப்ரவரி புரட்சியின் முதல் காலத்தில் ஓரளவு பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரத்தின் தன்மையை கொண்டிருந்தன என்று குறிப்பிட்டதுண்டு. இந்த சோவியத்துக்கள் பொதுவில் அதிகாரத்தை பொதிந்திருந்த அளவில் இது உண்மையாகும். ஆனால், மீண்டும் மீண்டும் லெனின் விளக்கியுள்ளதுபோல், பெப்ரவரி காலத்திய சோவியத்துக்கள் அரைகுறை அதிகாரத்தைத்தான் பெற்றிருந்தன. அவை பூர்சுவாக்களின் அதிகாரத்திற்கு ஆதரவு கொடுத்து பகுதி முறையிலான எதிர்ப்பு "அழுத்தத்தை" அதன் மீது கொடுத்து வந்தது. இந்த இடைப்பட்ட நிலைதான் அவர்களை ஜனநாயகக் கூட்டணியான தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் என்ற வடிவமைப்பை கடந்து செல்ல அனுமதிக்காமல் போயிற்று. அதனுடைய விதியின்படி, இந்தக் கூட்டணி சர்வாதிகாரத்தின் போக்கை காண முற்பட்டது; அதாவது அரசாங்கம் கட்டுப்படுத்தும் உறவுமுறைகளின் மீது நம்பிக்கை வைக்காமல், இராணுவத்தையும், நேரடி மேற்பார்வையையும்தான் நம்பியிருந்தது. ஆனால் அது ஒரு உண்மையான சர்வாதிகாரத்தின் தன்மையைவிட குறைவான தன்மையைத்தான் கொண்டிருந்தது. சமரசவாத சோவியத்துக்களின், விளக்கவியலாத உருவமற்ற,உறுதியற்ற தன்மை, இந்த ஜனநாயக அரைகுறை சக்தியை செலுத்திய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வீரர்களுடைய கூட்டணியில் இயைந்திருந்தது. சோவியத்துக்கள், ஒன்று முற்றிலும் மறைந்துவிட வேண்டும் அல்லது உண்மையான அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை இருந்தது. பல்வேறு கட்சிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு தொழிலாளர்களதும் விவசாயிகளினதும் ஜனநாயக கூட்டணி என்றவகையில் அவை அதிகாரத்தை எடுக்க முடியாது, ஆனால் தனி ஒரு கட்சியினால் வழிநடத்தப்படும் மற்றும் தங்களின் அரைப்பாட்டாளிகள் தொடங்கி பரந்த விவசாய மக்களை தனக்குப்பின் ஈர்க்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினால்தான் எடுக்க முடியும்; வேறு விதமாகக் கூறினால், ஒரு ஜனநாயக தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டணி என்பது உண்மையான அதிகாரத்தை கைப்பற்ற முடியாத, பக்குவமற்ற அமைப்பின் வடிவைத்தான் எடுக்கமுடியும்; அது ஒரு போக்காகத்தான் உருவாக்க முடியுமே அன்றி ஸ்தூலமான உண்மையாக உருவெடுக்க முடியாது. அதிகாரத்தை பெறுவதற்கான வேறு எந்தவித மேலதிக இயக்கமும் தவிர்க்கமுடியாமல் ஜனநாயக கூட்டை வெடிக்கச் செய்து, விவசாயிகளில் பெரும்பாலானோரை தொழிலாளர்களை பின்பற்றவேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்ள வைத்து, பாட்டாளி வர்க்கத்தை ஒரு வர்க்க சர்வாதிகாரத்தை சாதிக்கும் வாய்ப்பை அடையவைத்து அதன் மூலம், செயற்பட்டியலில், சமூக உறவுகளில் முழுமையான மற்றும் இரக்கமற்ற தீவிர ஜனநாயகத்தன்மையை கொண்டுவரும்; அதாவது முதலாளித்துவ சொத்துரிமைகளின் செயற்களத்தில் தொழிலாளர் அரசின் சுத்தமான சோசலிச தலையீட்டை வைக்கும். அத்தகைய சூழ்நிலையில் "ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற சூத்திரத்துடன் எவர் பிணைந்து நின்றாலும், விளைவில் அது அதிகாரத்தை கைவிடுவதுடன் புரட்சியை ஒரு முட்டுச்சந்துக்கு இட்டுச்செல்லும்.
ஒவ்வொருவரும் மையப்படுத்தப்பட்டிருந்த அடிப்படை சிக்கலுக்குரிய கேள்வி இதுதான்: நாம் அதிகாரத்திற்காக போராடவேண்டுமா, வேண்டாமா, நாம் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமா வேண்டாமா? நாம் வெறும் நிகழ்வு பற்றிய கருத்துவேறுபாட்டை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கவில்லை, மிகுந்த கொள்கை முக்கியத்துவம் நிறைந்த இரு போக்குகளை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒன்றே போதுமான நிரூபணம் ஆகும். முதலும் முக்கியமானதுமான போக்கு பாட்டாளி வர்க்கத்துடையது; அது உலக புரட்சிக்கான பாதையாகும். மற்றொன்று, "ஜனநாயக தன்மையுடையது"; அதாவது குட்டி முதலாளித்துவ முறை பற்றியது, இறுதிப் பகுப்பாய்வில் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைகளை முதலாளித்துவ சமுதாயத்தின் தேவைகளுக்கு, சீர்திருத்த வழிவகையில் தாழ்த்திக் கொள்ளுவது என்பதாகும். 1917ம் ஆண்டு முழுவதும் எழுந்த ஒவ்வொரு முக்கியமான பிரச்சினையிலும் இந்த இரண்டு போக்குகளும் விரோதப் பூசல்களை எழுப்பின. துல்லியமாக இது புரட்சிச் சகாப்தம்தான், அதாவது, ...கட்சியின் திரட்டப்பட்டிருந்த மூலதனம் நேரடிச்சுற்றுக்கு விடப்படுகிறது: அது தவிர்க்கமுடியாமல் செயலில் ஈடுபடுத்தி, அத்தகைய இயல்பின் வேறுபாடுகளை வெளிப்படுத்தும். இந்த இரண்டு போக்குகளும், குறைந்த அல்லது அதிக அளவில், அதிகமான அல்லது குறைந்த மாறுதல்களுடன், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புரட்சிக்காலத்தில் பலமுறையும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும். போல்ஷிவிசம் என்பதின்படி, இங்கு நாம் அதன் இன்றியமையாத கூறுபாடாகிய, ஆயுதமும் கையுமாய், அதிகாரத்தை கைப்பற்றக்கூடியதாக்கும் பாட்டாளி வர்க்க முன்னணிப்படையை பயிற்றுவித்தல், வலிமையுள்ளதாக்கல் மற்றும் ஒழுங்கமைத்தல் என்று நாம் புரிந்துகொள்ளக்கூடியதை வலியுறுத்துகிறோம்; சமூக ஜனநாயகம் என்பதில் நாம் முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்புக்குள்ளே சீர்திருத்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொள்தலாகும் மற்றும் அதன் சட்டரீதியான தன்மையை தழுவிக்கொள்வதாகும் ---அதாவது, பரந்த மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உண்மையான பயிற்சி முதலாளித்துவ அரசின் மீறப்படமுடியாத தன்மையுடன் பொருத்தி கொடுக்கப்படும்; அப்படியானால், உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயேகூட, வரலாற்று கடுஞ்சோதனையில் இருந்து முழுவளர்ச்சியுற்றதாய் வெளிப்படவில்லை என்பது முற்றிலும் தெளிவானது, சமூக ஜனநாயகவாத போக்குகளுக்கும் போல்ஷிவிசத்திற்கும் நடக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டம் தன்னுடைய மிகத் தெளிவான, பகிரங்கமான, மூடிமறைத்தல் இல்லாத வடிவத்தை, உடனடியான புரட்சிகர காலகட்டத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வெகுஅருகில் இருக்கும்பொழுது எடுக்கும்.
அதிகாரத்தை வெற்றி கொள்ளுதல் என்ற பிரச்சினை கட்சிக்கு முன்னால் ஏப்ரல் 4ம் தேதிக்கு பின்னர்தான், அதாவது லெனின் பெட்ரோகிராடிற்கு வந்த பின்னர்தான் எழுந்தது. ஆனால் அந்த கணத்திற்குப் பின்னரும்கூட, கட்சியின் அரசியல் நிலைப்பாடு எவரும் சவாலுக்கு அழைக்காத, ஒற்றுமையான, பிளவற்ற தன்மையை எந்தவகையினாலும் முயன்றுபெறவில்லை. 1917 ஏப்ரல் 28 மாநாட்டின் முடிவுகளுக்கு பின்னரும், புரட்சிகர போக்கிற்கு எதிர்ப்பு என்பது சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்படையாகவும் தயாரிப்புக்காலம் முழுவதும் பரவியிருந்தது.
பெப்ரவரிக்கும் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் பலப்படுத்தப்படுவதற்கும் இடையே இருந்த கருத்துவேறுபாடுகளின் போக்கைப் பற்றிய ஆய்வு மிக அசாதரணமான முறையில் கோட்பாட்டு முக்கியத்துவத்தை கொண்டிருந்ததோடு மட்டும் அல்லாமல், நடைமுறையிலும் பெரும் முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டு லெனின், 1903ம் ஆண்டின் கட்சியின் இரண்டாம் மாநாட்டின் கருத்து வேறுபாடுகளை பற்றிப் பேசுகையில் "எதிர்பார்க்கப்பட்டவைதான்" என்று குறிப்பிட்டார், அதாவது ஒரு முன்னெச்சரிக்கை என்று குறிப்பிட்டார். இந்த வேறுபாடுகளை அவற்றின் ஆதாரத்தில் தேடுவது அதாவது 1903 அல்லது அதற்கும் முந்தைய காலத்தில் "பொருளாதாரவாதம்" (Economism) எனப்பட்ட காலத்தில் இருந்து ஆராய்வது முக்கியமாகும். ஆனால் அத்தகைய ஆய்வு அதன் தர்க்கரீதியான முடிவுக்கு வந்தால்தான் பொருள்பட இருக்கும்; இந்த வேறுபாடுகள் தீர்க்கமான சோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டன என்றால், சொல்வதாயின், அது அக்டோபர் காலகட்டம் ஆகும்.
இந்த முன்னுரையின் வரம்பிற்குள் இப்போராட்டத்தின் அனைத்து கட்டங்களையும் மிக விரிவான முறையில் ஆராய முடியாது. ஆனால் எமது இலக்கியத்தில் நம் கட்சியின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் வருந்தத்தக்க இடைவெளியை ஓரளவேனும் இட்டு நிரப்புவது பற்றி பரிசீலிப்பது தவிர்க்க முடியாதது என்று கருதுகிறோம்.
ஏற்கனவே கூறியுள்ளபடி, வேறுபாடுகள் அதிகாரம் பற்றிய பிரச்சினையைச்சுற்றி மையம்கொண்டிருந்தன. பொதுவாகப் பேசுகையில், புரட்சிக் கட்சியின் தன்மை (மற்ற கட்சிகளை பற்றியும் கூட) பற்றி நிர்ணயிக்கும் உரைகல் இதுதான்.
அதிகாரப் பிரச்சினை மற்றும் போர் பற்றிய பிரச்சினை இவற்றிற்கிடையே உள்ள நெருங்கிய தொடர்பு இக்காலக்கட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளை நாம் காலவரிசைப்பட்டியின்படி, முக்கியமான நிகழ்வுகளை ஒட்டி, பரிசீலிக்குமாறு முன்மொழிகிறோம்: அவை,ஜாரிசம் அகற்றப்பட்ட காலத்திற்குப்பின், லெனின் வருவதற்கு முன் என்ற முதல்காலம்; லெனினுடைய கருத்தாய்வுகளை சுற்றி நிகழ்ந்த போராட்டம்; ஏப்ரல் மாநாடு; ஜூலை நாட்களுக்கு பின்னர் நடந்தவை; கோர்னிலாவ் காலகட்டம்; ஜனநாயக மாநாடும், பாராளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பும்; ஆயுதமேந்திய எழுச்சியும் அதிகாரத்தை கைப்பற்றுதலும் பற்றிய பிரச்சினை (செப்டம்பரில் இருந்து அக்டோபர் வரை); மற்றும் "ஒரேதன்மையுடைய" சோசலிச அரசாங்கம் ஆகியவையாகும¢.
இக்கருத்து வேறுபாடுகளை பற்றிய ஆய்வானது, கம்யூனிச அகிலத்தின் ஏனைய கட்சிகளுக்கு கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை எடுத்துக் கொள்ள உதவும் என்று நாம் நம்புகிறோம்.
| |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக