புதன், 6 மே, 2015

மோடி அரசின் தொழிலாளர் விரோத மசோதாவை 
ஒன்றுபட்டு முறியடிப்போம்!
------------------------------------------------------------------------------------
ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்க எத்தனை பேர் வேண்டும்?
ஏழு பேர் இருந்தால் போதும். ஆம். இதுதான் இந்தியத் 
தொழிற்சங்கச் சட்டம்.(INDIAN TRADE UNION ACT 1926).
இந்தச் சட்டம் நம் நாட்டில் 1926ஆம் ஆண்டு முதலே,
அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, நடைமுறைக்கு 
வந்து விட்டது.
**
ஐரோப்பா முழுவதும் தீயாய்ப் பரவிய மார்க்சிய சிந்தனை,
அமெரிக்காவில் சிக்காகோவில் நடைபெற்ற மேதினத்
தொழிலாளர் எழுச்சி, சோவியத் ரஷ்யாவில் புரட்சி 
நிகழ்ந்து பாட்டாளி வர்க்க அரசு அமைந்தது, இவை போன்ற 
காரணிகளால், உலக முதலாளித்துவம், தொழிற்சங்க 
உரிமைகளை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப் பட்டு இருந்தது.
எனவே, இந்தியாவிலும் தொழிற்சங்க உரிமைகள் வழங்கப் 
பட்டன.
**
இந்தச் சட்டத்தின் பிரகாரம், முதல் தொழிற்சங்கம் 
தமிழகத்தில்தான் ஆரம்பிக்கப் பட்டது. சென்னை பி அண்டு சி 
ஆலையில், ஏழு பேரைக் கொண்டு, MADRAS LABOUR UNION 
(MLU) என்ற சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. திரு.வி.க, சர்க்கரைச் 
செட்டியார் போன்றோர் இச்சங்கத்தை வளர்த்தனர்.
**
தொலைதொடர்புத் துறையிலும் BSNL நிறுவனத்திலும் உள்ள 
தொழிற்சங்கங்கள் பாரம்பரியம் மிக்க, போர்க்குணம் கொண்ட 
சங்கங்கள். NFTE, BSNLEU, FNTO, TEPU உள்ளிட்ட பல சங்கங்கள் 
BSNLஇல் செயல்படுகின்றன. இச்சங்கங்கள் யாவும் ஏழு 
தொழிலாளர்களைக் கொண்டுதான் ஆரம்பிக்கப் பட்டு 
பதிவு செய்யப் பட்டன. NFTE சங்கத்துக்கு லட்சக் கணக்கில் 
உறுப்பினர்கள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
**
ஏழு பேர் இருந்தால் சங்கம் ஆரம்பிக்கலாம் என்ற இந்தச் 
சட்டத்தை மோடி அரசு நீக்க முடிவு செய்துள்ளது. இதற்காகவும், 
போராடிப் பெற்ற இது போன்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் 
பறிக்கவும்  நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு
உள்ளது.     
1) இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் 1926 (Indian TU Act) 
2) தொழில் தகராறுச் சட்டம் 1947 (Industrial Disputes Act)
3) தொழில் துறை வேலை வாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் 
சட்டம் 1946 ( Industrial employment (standing order) Act  
ஆகிய மூன்று சட்டங்களையும் ஒன்றிணைத்து,  ஒரே சட்டம்
ஆக்கும் நோக்குடன் ஒரு மசோதா கொண்டு வரப் பட்டுள்ளது.
**
தொழிலுறவு கருதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு வரைவு 
மசோதா 2015 (Draft Labour Code on Industrial Relation Bill 2015) என்பதுதான் 
அந்த மசோதா. இது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வர, 
முன்பு 2002இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் 
முயற்சி செய்யப் பட்டது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் 
பலத்த எதிர்ப்பால், வாஜ்பாய் அதைக் கைவிட்டார். அன்று,
வாஜ்பாயின் முயற்சியை முறியடித்தவர் தோழர் ஜார்ஜ் 
பெர்னாண்டஸ்தான். அவருடைய சமதா கட்சி வாஜ்பாய் 
அரசில் பங்கேற்று இருந்தது.
**
இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு 
ஒரு நிலையான இடம் உண்டு.பின் நாட்களில், அவர்  
சந்தர்ப்பவாத சீரழிவு அரசியல் சேற்றில் மூழ்கிப் போனபோதும்,
அவரின் தொடக்க கால தொழிற்சங்கப் பங்களிப்பு இன்றும் 
நினைவு கூரத் தக்கது. போர்க்குணம் என்றால் என்ன என்று 
தொழிலாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்தவர்களில் 
அவரும் ஒருவர். அப்போதெல்லாம் அவர் சம்யுக்த சோஷலிஸ்ட் 
கட்சியில்தான் இருந்தார். உலகப் புகழ் பெற்ற, 1974 ரயில்வே 
வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தியவர்  அவர்.
அப்போது அவர் AIRF (All India Railwaymen Federation) சங்கத்தின் 
தலைவர்.
**
மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், தோழர் பெர்னாண்டஸ்
அமைச்சராக இருந்தபோது, சென்னையில் சர்வதேச டெலக்ஸ் 
சேவையைத் தொடக்கி வைத்தார். அப்போது போர்க்குணம் மிக்க
NFPTE சங்கத்தின் சார்பாக, அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்ட
போது, இக்கட்டுரை ஆசிரியரும் அந்தத் தொழிற்சங்கக் குழுவில் 
Asst Secretary (Technical) CTO branch,  T-3 UNION, NFPTE என்ற முறையில்)
இடம் பெற்று இருந்தார் என்பது வரலாறு.         
**
அன்று தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி செய்த 
வாஜ்பாய், தாம் நினைத்ததை எல்லாம் செயல்படுத்த முடியாமல் 
இருந்தார். ஆனால் இன்று மோடி முழுப் பெரும்பான்மையுடன் 
ஆட்சி நடத்துகிறார். எனவே நினைத்ததை முடிக்க அவர் 
முயல்வார். ஆனால் இந்தியப் பாட்டாளி வர்க்கம் தான் போராடிப் 
பெற்ற உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
மோடி அரசின் இந்த தொழிலாளர் விரோத மசோதாவை 
ஒன்றுபட்டு முறியடிப்போம், வாருங்கள் தொழிலாளர்களே.
***********************************************************************           
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக