ஞாயிறு, 17 மே, 2015

அறிவியல் முன்சென்று விட்டது!
ஆனால் தத்துவம் பின்தங்கி விட்டது!
-----------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் தாங்கள் வாழ்ந்த காலத்தின் அறிவியலை
முழுவதுமாகக் கற்று அறிந்து இருந்தனர். மார்க்ஸ் 1883இலும்
எங்கல்ஸ் 1895இலும் மறைந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு
முடியும்போது மார்க்ஸ் எங்கல்சின் காலமும் முடிகிறது.
**
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை, அறிவியல் உலகில்
நியூட்டனின் இயற்பியலே (Newtonian Physics) ஆட்சி செலுத்தியது.
மார்க்சும் எங்கல்சும் தம் சமகால அறிவியலை ஆழ்ந்து கற்றும்,
தாம் கற்ற அறிவியலின் மூலம், மார்க்சியப் பொருள்முதல்வாதத்தைச்
செழுமைப் படுத்தியும் வந்தனர். சுருங்கக் கூறின்,    
மார்க்சியத்தின் பொருள்முதல்வாதம், நியூட்டனின் இயற்பியலை
முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தது.
**
1900இல் ஜெர்மனியில் பெர்லின் நகரில், மாக்ஸ் பிளான்க்
தமது குவான்ட்டம் கொள்கையை முன்மொழிந்தார். தொடர்ந்து,
1905இல் சிறப்புச் சார்பியல் கோட்பாடு, 1913இல் நியல்ஸ் போர்
(Niels Bohr) முன்மொழிந்த அணுச்சித்திரம் (atom model),
1915இல் பொதுச் சார்பியல் கோட்பாடு, 1924இல் லூயி டி
பிராக்லி முன்மொழிந்த பருப்பொருளின் அலைப்பண்பு என்று
இவ்வாறாக இயற்பியலின் வளர்ச்சியானது நாளும் தொடர்ந்து
வருகிறது. தற்போது, ஹிக்ஸ் போசான் என்னும் துகள் குறித்த
ஆய்வுகள் உச்சத்தை எட்டி உள்ளன.
**
நியூட்டனின் இயற்பியல் என்பது அறிவியல் வளர்ச்சியில்
ஒரு கட்டம் (a stage). அதாவது அரிச்சுவடிக் கட்டம். இன்றைய
வளர்ச்சி அசுரத் தனமானது; பிரம்மாண்டமானது. இந்த 
வளர்ச்சியானது பல்வேறு அடிப்படை மாற்றங்களை 
(PARADIGM SHIFT) அறிவியலில் நிகழ்த்தி உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, உலகைப் பற்றிய நமது 
பார்வையை மாற்றி அமைத்துள்ளது.
**
நியூட்டன் காலத்தில் (1643-1727) ஒலியின் வேகம் 
(VELOCITY OF SOUND) என்ன என்று தெரியாது. நியூட்டன்தான் 
அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. கண்டுபிடித்தார். 
ஆனால்,அதில் ஒரு  சிறிய பிழை செய்தார். பிரெஞ்சு விஞ்ஞானி 
லாப்லேஸ் அப்பிழையைத் திருத்தினார். மேலும் நியூட்டன் 
காலத்தில் மின்சாரம் கிடையாது; கண்டுபிடிக்கப் படவில்லை.
**
சார்பியல் கொள்கை வந்ததுமே முப்பரிமாண  உலகம்
என்ற கருத்து தகர்ந்தது. உலகம் நான்கு பரிமாணங்களைக் 
கொண்டது என்றார் ஐன்ஸ்டின். நான்காவது பரிமாணமாக 
காலத்தைக் கூறினார். நான்கு பரிமாணங்களைக் கொண்ட 
உலகம் என்பது சராசரி மானுடச் சிந்தனையில் 
அடைபடவில்லை. இன்று "எம்" கோட்பாடு (M theory)
வந்துள்ளது. (இன்றைய நிலையில் இது ஒரு candidate theory 
ஆகும்). இக்கோட்பாடு நான்குக்கும் மேற்பட்ட பரிமாணங்
களை (பதினோரு பரிமாணங்கள்) கூறுகிறது.  
**   
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில், மார்க்சியத்தின் தத்துவமான 
பொருள்முதல்வாதம் அறிவியலை மிக நெருக்கமாகப் 
பின்தொடர்ந்தது. அறிவியல் எவ்வளவு தூரம் ஓடியதோ,
இயன்ற அளவுக்கு, அவ்வளவு தூரம் ஓடியது பொ.மு.வாதம்.
ஆனால், இந்த 115 ஆண்டுகளாக  (1900-2015),ஏறக்குறைய 
ஒன்றேகால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இந்த 
ஓட்டம் நின்று விட்டது என்பது கண்கூடு.அறிவியல் 
வெகுதூரம் முன் சென்று விட்டது; தத்துவம் வெகுவாகப் 
பின்தங்கி விட்டது.
**
எனவே, இந்த நூற்றாண்டு கால அறிவியல் வளர்ச்சியை 
உள்வாங்கிக் கொண்டு, செரித்துக் கொண்டு பொருள்முதல்
வாதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 
இல்லையேல், நவீன தத்துவம், எதிர்காலத்திற்கான 
தத்துவம் என்ற அந்தஸ்தை பொருள்முதல்வாதம் 
இழக்க நேரும். நவீன அறிவியலை உட்செலுத்திக் கொண்டு,
கருத்துமுதல்வாதத்தை பூர்ஷ்வா உலகம் புதுப்பித்து 
வருகிறது. பொருள்முதல்வாதத்தைக் களத்தில் சந்திக்க 
கருத்துமுதல்வாதம் அணியமாகிக் கொண்டு வருகிறது.
**
எனவே, நவீன அறிவியலின் வளர்ச்சிக்கு ஒத்திசைவாக 
பொருள்முதல்வாதத்தைப் புதுப்பிப்பது காலத்தின் கட்டாயம் 
ஆகும். மேலும் இது அக்கறை உள்ள பொருள்முதல்வாதிகளின் 
கடமையும் ஆகும். .................(தொடரும்).................
------------------------------------------------------------------------------------------------------
  
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக