தோழர் துணைத்தளபதி மார்க்கோஸ் அவர்களின் பதிவு:-
-----------------------------------------------------------------------------------
அதிகாரத்தின் இருப்பு அதன் செயல் வடிவில் மட்டுமே வெளிப்படும். இந்தத் தெருவில் நடக்காதே என்ற கட்டளையை ஒரு தலித் ஏற்றுக் கொண்டு அந்தத் தெருவில் நடக்காத செயலால் அங்கு அதிகாரம் செயல்பட்டது. அதிகாரத்தை ஏவுபவன் ஒருவன். அதற்க்கு ஆட்படுபவன் ஒருவன். செயல் வடிவில் அதிகாரம்.
அதிகாரம் என்பது ஒரு தனி மனிதரிடமோ அல்லது ஒரு சமூகத்திடமோ ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தும் சக்தி. மாற்றம் நேர் மறையானதாகவோ, எதிர்மறையானதாகவோ இருக்கலாம்.
அப்படியானால் அதிகாரம் எங்கும் நிறைந்துள்ளது. ஒவ்வொரு உறவிலும் அதிகாரம் உள்ளது. நாம் தொடர்ந்து அதிகாரத்தால் ஒடுக்கப் படுபவராகவோ அல்லது அதனைக் கொண்டு ஒடுக்குபவராகவோ இருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக ஒரு ஆண் தொழிலாளியைக் கருதுக. அவன் அவனுடைய முதலாளியின் அதிகாரத்தால் ஒடுக்கப்படுபவனாக இருக்கிறான். அவன் ஒரு தொழில் சங்கத்தில் சேர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறான். இப்போது அவன் ஒட்டு மொத்த தொழிலாளிகளின் சக்தியுடன் இணைந்ந்து முதலாளியை அவர்களின் அதிகாரத்திற்கு உட்படுத்துகிறான். அந்த தொழில் சங்கம் அதிகார வர்க்கமாக சோரம் போகும் போது அந்த தொழில் சங்கத்தின் அதிகாரத்துக்கு அவன் உட்படுகிறான். அவன் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருந்து பொறுப்பில்லாமல் குடித்து செலவளிக்கும் போது ஒரு தந்தைமை அதிகாரத்தை அவன் அவனது குடும்பத்தின் மீது நிறுவுகிறான்.
ஒரு மனிதன் ஒரு இடத்தில ஒடுக்குபவனாகவும், மற்றொரு இடத்தில ஒடுக்கப்படுபவனாகவும் இருக்கிறான்.
இந்த அதிகார செயல்பாடு சில இடங்களில் நேர்மறையாகவும், சில இடங்களில் எதிர்மறையாகவும் உள்ளது.
அதிகாரம் பல்வேறு தோற்றுவாய்களில் இருந்து வரும் வாய்ப்பு உள்ளதால், அதற்க்கான எதிர்ப்பும் பல்வேறு இடங்களில் இருந்து வரும். இது மார்க்சிய கருத்தாக்கத்திர்க்கு எதிரானது. மார்க்சியம் அதிகாரத்தின் முதன்மையான தோற்றுவாயாக மூலதனத்தைச் சொல்லும். மற்ற அனைத்தும் இரண்டாம் தரமானதாகும். மற்ற அதிகார தோற்றுவாய்களை நீங்கள் புறக்கணித்துவிட்டு மூலதனத்தை அதிகாரத்தின் முதன்மையான தோற்றுவாயாக கொண்டு ஒரு போராட்டத்தை கட்டியமைத்தால் அது தோற்றுப் போய் இறுதியில் மூலதனம் தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதைப் பார்ப்பீர்கள்.  ---(தொடர்ச்சி கீழே)
--------------------------------------------------------------------------------------------
இது மூலதனத்தின் அதிகாரச் சக்தியை மறுப்பதல்ல. ஒரு குறிப்பிட்ட உறவில் மூலதனம் அதிகாரமாகி ஒடுக்குமுறையை ஏவுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அங்கு அந்த உறவில் மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தேவையாய் உள்ளது. அதே சமயத்தில் சமூகத்தின் அனைத்து உறவுகளிலும் வெளிப்படும் அதிகாரதிற்க்கான தோற்றுவாய் மூலதனம் அல்ல என்பதும் புரிந்து கொள்ளத் தக்கதே.
இந்த அதிகாரத்தின் பன்முகத் தன்மையால் ஒரு ஒற்றை அணி எல்லாவற்றையும் சாதிக்கும் ஒரு புரட்சிகர அணியாக இருக்க முடியாது என்பதே இதன் முடிவு [ I shit on all the revolutionary vanguards of this planet. ― Subcomandante Marcos ].
இதை இன்னும் சற்று வளர்த்தால் அதிகாரம் செயல்படும் தனித் தனி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனித் தனி போராட்டங்கள் தேவைப் படுவதையும், அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அதிகார உறவுகளில் காணப்படும் ஒத்த தன்மைகளுக்கு எதிராக மட்டும் ஒன்றுபடுதலையும் வழி மொழியும். ஒரு வானவில் கூட்டணி
பார்ப்பனனை எதிர்த்த சூத்திரன் தலித்துக்காக குரல் கொடுக்கவில்லை.
சூத்திரனை எதிர்த்த தலித் அவனாலும் ஒடுக்கப்பட்ட புரத வண்ணார் போன்ற சாதிகளுக்கு குரல் கொடுக்கவில்லை.
இந்த மேற்கூறிய யாருமே பழங்குடி மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
இந்த பழங்குடி மக்கள் உள்பட மேற்க்கூறிய அனைத்து சாதிகளும் பெண்ணை ஒடுக்குவதில் இன்பம் கண்டன.
கருத்துக்கள் வாத பிரிதி வாதங்கள் வரவேற்க்கப் படுகின்றன. மேலே பதிவில் உள்ள கருத்துக்களை நான் பூகோவிடம் எடுத்துள்ளதால் எதிர் வாதங்கள் பூகோவின் துணையுடனே எதிர் கொள்ளப்படும்.
----------------------------------------------------------------------------------------------------