புதன், 20 மே, 2015

பானைக்குள் யானையை அடைக்க முயலும் 
மார்க்சியக் கழைக் கூத்தாடிகள்!
---------------------------------------------------------------------------
மார்க்சியம் என்பது ஒரு பெரிய யானை. அதைத் தாங்கள் 
கற்ற மேற்கோள்கள் என்னும் குறுகிய மண்பானைக்குள் 
அடைக்கப் பார்க்கிறார்கள் சில வித்தைகாட்டிகள்.
**
மார்க்சியத்தையே படித்திராத,  மார்க்சியவாதி அல்லாத,
வெறும் குட்டி முதலாளித்துவ சீர்திருத்தவாதியான 
பிடெல் காஸ்ட்ரோ, கியூபாவில் புரட்சி நடத்தி, அரசு 
அதிகாரத்தைக் கைப்பற்றினார். தம் 32ஆவது வயதில் 
1959 பிப்ரவரியில், கியூபாவின் பிரதமராகப் பதவி ஏற்றார்.
**
இது எப்படி நடந்தது? மார்க்சியமே படிக்காத ஒருவரால் 
எப்படி புரட்சி நடத்த முடிந்தது? புரட்சிக்குப் பின்னர் 
கியூபாவில் சோஷலிசத்தைக் கட்ட முடிந்தது?
**
மார்க்சியக் கழைக்கூத்தாடிகளால் இக்கேள்விகளுக்குப் 
பதில் சொல்ல முடியவில்லை; மூச்சடைத்துப் போய்
நிற்கிறார்கள். தங்களின் மேற்கோள் பானைக்குள் 
அடங்காத காஸ்ட்ரோவை விளக்க முடியாமல் 
திணறுகிறார்கள்.     
**
"எனது அரசு ஒரு சோஷலிச அரசு அல்ல. நான் ஒரு 
கம்யூனிஸ்ட் அல்ல"  என்று பிரகடனம் செய்தார் 
காஸ்ட்ரோ, 1959இல், பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்பு.
பின்னாளில், சே குவேரா அவருக்கு மார்க்சியத்தைக் 
கற்றுக் கொடுத்தார். மார்க்சியம் பயின்ற பிறகு,
"நாங்கள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்கள் மட்டுமல்ல,
தேசியவாதிகளும் தேசபக்தர்களும் ஆவோம்" என்றார் 
காஸ்ட்ரோ. ( We are not only Marxist Leninists but Nationalists
and Patriots--Fidel Castro)
**
கியூபாவின் தேசத் தந்தையாகப் போற்றப் படுபவர் 
ஜோஸ் மார்த்தி (Jose Marti) என்பவர். இவர் ஒரு 
மாபெரும் சீர்திருத்தவாதி. இவர்தான் பிடெல் 
காஸ்ட்ரோவுக்கு ஆதர்சமாக இருந்தவர். காரல் 
மார்க்ஸ் இரண்டாவது ஆதர்சம் காஸ்ட்ரோவுக்கு.
**
இந்தியச் சூழலில் காஸ்ட்ரோவைப் புரிந்து கொள்ள 
விரும்பினால், டாக்டர் ராம் மனோகர் லோகியாவைப் 
போன்றவர் என்று புரிந்து கொள்ளலாம்.
ஜோஸ் மார்த்தியை ஜெயப்பிரகாஷ் நாராயணன் 
போன்றவர் என்று புரிந்து கொள்ளலாம். (எச்சரிக்கை:
இது ஒப்பீடு அல்ல. ஒரு புரிதலை ஏற்படுத்த உதவும் 
முயற்சி)
**
மார்க்சியரே அல்லாத ஒருவராலும் புரட்சியை 
நடத்த முடியும் என்று நிரூபித்தவர் காஸ்ட்ரோ.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
புரட்சிக்கு ஆயிரம் இலக்கணங்கள் கூறப்பட்டாலும்,
சாராம்சத்தில், புரட்சி என்பது அரசு அதிகாரத்தைக் 
கைப்பற்றுவது. அவ்வளவே. அதற்கு மார்க்சிஸ்ட்டாக
இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
**
ஆனால், புரட்சியின் மூலம் பெற்ற அரசு அதிகாரத்தைக் 
கொண்டு, சுரண்டலை ஒழித்து சோஷலிசத்தைக் 
கட்டுவதற்கு மார்க்சியம் அவசியம்: மார்க்சிஸ்ட்டாக
இருக்க வேண்டியதும் அவசியம்.
**
இன்று உலகின் தலை சிறந்த கல்வி, கியூபாவின் 
மக்களுக்கு வழங்கப் படுகிறது. இது காஸ்ட்ரோவால் 
நிகழ்ந்தது. இன்று உலகமே கியூபாவை வியந்து 
நோக்குகிறது. இதுதான் சோஷலிசம்.
**
சதா சர்வ காலமும் மேற்கோள்களையே, அடைகாத்துக் 
கொண்டிருக்கும் கத்துக்குட்டிகள் கியூபப் புரட்சியில் 
இருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்.
-----------------------------------------------------------------------------------------------
தொடரும்; வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
**********************************************************************                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக