திங்கள், 25 மே, 2015

சிந்தனை என்று இதுவரை நாம் கருதி வந்ததும் 
உண்மையில் ஒரு பொருளே என்கிறது அறிவியல்!
பொருள் பற்றிய லெனினிய வரையறையின் 
பொருத்தப்பாடு!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் "பொருள்" (matter) என்றால் என்ன 
என்று எந்த ஒரு வரையறையும் தரவில்லை. 
ஏன் தரவில்லை என்றால்,தரவேண்டும் என்ற தேவை 
எதுவும் அவர்களுக்கு இருக்கவில்லை. மார்க்ஸ்-எங்கல்ஸ் 
காலத்தில் டால்டன் (1766-1844) என்ற ஆங்கில விஞ்ஞானி 
தம் அணுக்கொள்கையை  வெளிஇட்டு இருந்தார்.
இதை மார்க்சும் எங்கல்சும் அறிந்து இருந்தார்கள்.
அதே நேரத்தில், பொருள் என்பது நான்கு பூதங்களின் 
சேர்க்கை (four elements theory) என்ற அரிஸ்டாட்டிலின் 
கொள்கையும் அன்றைய சமூகத்தில் நிலவி வந்தது.

பொருள் என்றால் என்ன என்று வரையறுக்க முடியுமா 
என்று லெனின் காலத்தில் கருத்துமுதல்வாதிகளும் 
சில விஞ்ஞானிகளும் லெனினுக்கு சவால் விடுத்துக் 
கொண்டே இருந்தனர். லெனின் அவர்களின் சவாலை 
ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில், அவர்களின் நிர்ப்பந்தம் 
பொறுக்க முடியாத நிலையில், லெனின் பொருள் என்றால் 
என்ன என்று வரையறுத்தார்.

பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியே இருக்கும் 
ஒரு புறநிலை யதார்த்தம் என்பதுதான் லெனினின் 
வரையறை. இது அறிவியல்ரீதியான விளக்கம் அல்ல 
என்று லெனின் உணர்ந்தே இருந்தார். இது தத்துவ 
ரீதியிலான விளக்கம் (epistemological definition) என்ற 
தெளிவுடனே லெனின் இவ்வாறு வரையறுத்தார்.

திடம், திரவம், வாயு என்ற பொருளின் மூன்று நிலைகள் 
பற்றி அனைவரும் அறிவர். ஆனால், பொருளின் நிலைகள் 
(states of matter) இந்த மூன்று மட்டும் அல்ல. பிளாஸ்மா 
(charged ions) என்ற நான்காவது நிலையும் உண்டு. 
போஸ்-ஐன்ஸ்டின் பதிவு (Bose-Einstein condensate) என்கிற 
அதிகுளிர் நிலையும் உண்டு. (திட திரவ வாயு நிலைகளை 
நவீன அறிவியல் வெறும் PHASE TRANSTITION என்று 
மட்டுமே குறிப்பிடுகிறது)

சிந்தனை என்பதும் ஒரு பொருளே (CONSCIOUSNESS IS ALSO 
A STATE OF MATTER) என்கிறது நவீ ன அறிவியலின் ஒரு 
தியரி. ஏதோ போகிற போக்கில் சொல்லி விட்டுப் போய் 
விட்டார் ஒரு விஞ்ஞானி என்று இதைக் கருதி விடக் 
கூடாது. குலியோ டொனானி  (Giulio Tonani) என்னும் 
உளவியல்- நரம்பியல் மருத்துவரும், மாக்ஸ் டெக்மார்க் 
(Max Tegmark) என்னும் இயற்பியல் அறிஞரும், பல 
ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் தங்கள் முடிவுகளை 
அறிவித்தனர்.                

டெக்மார்க் கூறுகிறார்: சிந்தனை என்பது பொருளின் 
ஒரு நிலை. இந்நிலையின் பெயர்: "பெர்செப்ட்ரோனியம்"  
(perceptronium). இந்தப் பிரபஞ்சத்தை ஆளுகை செய்யும் 
இயற்பியல் விதிகளே பெர்செப்ட்ரோனியத்தையும் 
ஆளுகை செய்கின்றன.

சிந்தனை என்பதும் ஒரு பொருளே என்னும்போது 
கருத்துமுதல்வாதம் தற்கொலை செய்துகொண்டு 
செத்துப் போகிறது. அதே நேரத்தில் லெனினின் 
வரையறையின் பொருத்தப்பாடும் தகர்ந்து விடுகிறது.
எனினும் பெர்செப்ட்ரோனியம் ஒரு hypothesis என்ற 
அந்தஸ்தில் மட்டுமே தற்போது உள்ளது. மேலும் 
ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும்போது, இது 
ஏற்கத் தக்க கோட்பாடாக மாறலாம். அதுவரை 
பொறுத்து இருப்போம்.
குறிப்பு: மேல் விவரம் அறிய, பார்க்கவும்:
The Physics arXiv blog.  
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக