ஞாயிறு, 10 மே, 2015

மார்க்சியத்தை வெட்டிக் குறுக்கும் 
குறைப்புவாதிகளை முறியடிப்போம்!
----------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
---------------------------------------------------------------------
"மனிதகுலம் படைத்திருக்கும் அனைத்து அறிவுச் 
செல்வங்களையும் கற்று, தன் அறிவை வளமாக்கிக் 
கொள்ளும் போதுதான், ஒருவன் கம்யூனிஸ்ட் ஆக முடியும்".   
------------------மூல ஆசான் லெனின்---------------------------------
பிரசித்தி பெற்ற இந்த மேற்கோள், மார்க்சிய அறிமுகம் உடைய,
பலரும் அறிந்த ஒன்றே. பலராலும் அடிக்கடி மேற்கோள் 
காட்டப் படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
**
இவ்வாறு, மார்க்சிஸ்ட்க்கு இலக்கணம் வகுத்த லெனின், 
மார்க்சியம் என்பதற்கும் இலக்கணம் வகுத்தார். 
"மார்க்சியம் என்பதுஇதுநாள் வரை  மனித குலம் சேகரித்து 
வைத்திருக்கும் அறிவின் ஒட்டு மொத்தம் ஆகும்" 
என்கிறார் லெனின்.    
**
"கம்யூனிஸ்ட்கள் தனியொரு பொருளால் வார்க்கப் 
பட்டவர்கள்" என்பார் ஸ்டாலின். இந்த மேற்கோள்களை 
எல்லாம் எந்திரத்தனமாகப் புரிந்து கொள்ளாமல், அவற்றின் 
சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
**
அவ்வாறு புரிந்து கொள்ளும்போது, ஒருவர் இயல்பாகவே 
சில முடிவுகளை வந்தடையக் கூடும். அவற்றுள் ஒன்று:-
"மார்க்சியம் என்பது மூல ஆசான்களின் போதனைகளுக்குள் 
மட்டும் அடங்கிக் கிடப்பதல்ல".
**
மேற்கூறிய வாக்கியம் மார்க்சியத்தை சுருக்கிக் குறுக்கும் 
"குறைப்புவாதம்"(REDUCTIONISM) என்னும் கருத்தாக்கத்தை 
முறியடிக்கிறது. மார்க்சியம் மற்றும் மார்க்சியக் கல்வியின் அகல்விரிவானதும் ஆழமானதுமான (COMPREHENSIVE AND DEEP) 
தன்மையை உறுதி செய்கிறது.
**
மூல ஆசான்கள் மார்க்சும் எங்கல்சும் தங்களின் போதனை
ஆகிய மார்க்சியம் அனைத்தும் தழுவியதாக (UNIVERSAL)
இருக்க வேண்டும் என்று முழுதும் முயன்றார்கள். தாங்கள் 
வாழ்ந்த காலத்தின்  அனைத்துத் துறைகள் சார்ந்த அறிவின்  
சாரத்தைத் தங்களின் படைப்புகளில் செலுத்தினார்கள்.
**
மார்க்ஸ் 1883இலும், எங்கல்ஸ் 1895இலும் மறைந்தனர்.
மார்க்ஸ் காலத்தில் மின்சாரம் கிடையாது; கண்டுபிடிக்கப் 
படவில்லை. மூல ஆசான்களின் மறைவுக்குப் பின்னர்,
இன்று இந்த 2015இல், 120 ஆண்டுகள் கடந்து விட்டன.
இந்த 120 ஆண்டுகளில் அனைத்து அறிவுத் துறைகளும், 
(குறிப்பாக அறிவியல்) அசுரத் தனமாக வளர்ந்து விட்டன.
**
இந்த 120 ஆண்டுகளின் அறிவியல் வளர்ச்சியை, அதாவது,
சமகால அறிவியலை மார்க்சியம் பிரதிபலிக்க வேண்டும்.
மார்க்சியம் மூன்று உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டது.
1. தத்துவம், அதாவது, இயங்கியல் பொருள்முதல்வாதம்.
2. அரசியல் பொருளாதாரம் 3. விஞ்ஞான சோஷலிசம்.
இம்மூன்றிலும், தத்துவார்த்தப் பகுதியான பொருள்முதல் 
வாதமே தலையாயது. அதன் தத்துவ வெளிச்சத்தில்தான்,
பொருளாதாரமும் சோஷலிசம் உருவெடுக்கின்றன. 
**
ஆக, சமகால அறிவியல் vis-a-vis பொருள்முதல்வாதம்
என்பது இன்றைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
 எனவே அது குறித்துக் காண்போம்.
-------------------------------------------------------------------------------------------
தொடரும் 
---------------------------------------------------------------------------------------------
     
      
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக