சனி, 16 மே, 2015

மார்க்சின் எச்சரிக்கையை மீறி 
மார்க்சியத்தை வழிபடும் பாராயணவாதிகள்!
---------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------
மற்றத் தத்துவங்களுக்கும் மார்க்சியத்துக்கும் ஒரு மாபெரும் 
வேறுபாடு உண்டு. இது மிகவும் அடிப்படையான வேறுபாடு.
மற்றத் தத்துவங்கள் படித்து மகிழ்வதற்கும் விவாதித்து 
இன்புறுவதற்கு மட்டுமே ஆனவை.ஆனால், மார்க்சியம் 
செயல்பாட்டுக்கு உரிய ஒரு தத்துவம். அதாவது, நடைமுறையை 
உயிராகக் கொண்ட தத்துவம். எனவேதான், மார்க்சியம் 
"நடைமுறைக்கான தத்துவம்"(PHILOSOPHY OF PRAXIS) என்று 
கருதப் படுகிறது.
**
2) ஏன் மார்க்சியம் மட்டுமே நடைமுறையை (PRACTICE)
வலியுறுத்துகிறது? ஏனெனில், மார்க்சியம் மட்டுமே 
உலகை மாற்றி அமைக்க வேண்டும் என்று பிரகடனம் செய்கிறது.
மற்றத் தத்துவங்கள் உலகை வியாக்கியானம் செய்வதோடு 
நின்று விடுகின்றன. அதாவது, உலகம் இப்படி இப்படி 
இருந்தது, இப்படி இப்படி இருக்கிறது என்று விளக்கம் 
அளிப்பதோடு சரி. உலகத்தை மாற்றி அமைக்க வேண்டும் 
என்று அத்தத்துவங்கள் கூறுவதே இல்லை.
**
3) எனவே மார்க்சியச் செயல்பாடு பின்வருமாறு அமைகிறது.
அ) மார்க்சியத்தைப் படித்தல் 
ஆ) மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளுதல் 
இ) மார்க்சியத்தைப் பிரயோகித்தல் (PRACTISING)
ஈ) அனுபவங்களைத் தொகுத்தல், படிப்பினை பெறுதல்.
**
4) எனவே, மார்க்சியத்தைப் பொறுத்த மட்டில், தத்துவம், 
நடைமுறை என்கிற இரண்டும் (BOTH THEORY AND PRACTISE)
சமமான அளவு முக்கியத்துவம் உடையதாகும். 
கோட்பாட்டுப் புலமை நூறு சதம், ஆனால் நடைமுறை பூஜ்யம் 
என்றால், அப்படிப்பட்ட நபர் அல்லது அமைப்பால் எந்தப் 
பயனும் கிடையாது. அதேபோல், கோட்பாட்டு அறிவு பூஜ்யம் 
என்ற நிலையில், நடைமுறையில் இறங்கும் நபர் அல்லது 
கட்சியாலும் எந்தப் பயனும் கிடையாது.  
**     
5) இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 
தற்போது தொண்ணூறு ஆண்டுகள் ஆகின்றன.என்றாலும்,
சாதியப் பிரச்சினைக்கு  இன்னமும் தீர்வு காணப் படவில்லை.
தீர்வு காண்பதை விட்டுத் தள்ளுங்கள்; சாதியின் தோற்றம்,
இயக்கம், வளர்ச்சி. பல்வேறு சமூக அமைப்புகளையும் தாண்டி 
இன்றளவும் நீடித்து நிற்பதற்கான காரணம் ஆகிய இவை 
யாவும் குறித்த, சரியான புரிதல்கூட இந்திய மார்க்சியர்களிடம் 
இல்லை.  சாதி ஒழிப்புக்கான ஒரு மார்க்சிய வேலைத்திட்டத்தை 
உருவாக்கக் கூட இயலவில்லை.
**
6) இதற்குக் காரணம் என்ன? 
அ) மார்க்சியத்தை எந்திரத் தனமாகப் புரிந்து கொண்டதுதான்.
ஆ) மார்க்சியம் சர்வரோக நிவாரணி என்று கருதியதுதான்.
இ)மார்க்சைக் கடவுளாகவும், மார்க்சிய நூல்களை குரான்,
பைபிள் போலக் கருதியதுதான்.
ஈ) இந்திய சமூகத்தின் தனித் தன்மையைக் கருத்தில் 
கொள்ளாமல், மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் 
குடை பிடித்துக் கொண்டும், "சீனத்தின் தலைவர் நமது 
தலைவர், சீனத்தின் பாதை நமது பாதை" என்று குருட்டுத் 
தனமாக உளறிக் கொண்டும் இருந்ததால்தான்.
உ) எங்கள் போதனைகள் வறட்டுச் சூத்திரம் அல்ல; அது
நீங்கள் செயல்படுவதற்கு ஒரு வழிகாட்டி மட்டுமே என்ற 
மூல ஆசான்களின் எச்சரிக்கையை மீறி, மார்க்சியத்தை 
ஒரு பைனாமியல் தேற்றம் (BINOMIAL THEOREM) போலக் 
கருதிச் செயல்பட்டதும்தான்.
இன்னும் இப்படி நிறையச் சொல்ல முடியும்  அடித்தளம் 
மேல்கட்டுமானம் போன்ற மார்க்சிய வரையறைகளின் 
பொருத்தப்பாடு, யுனிவர்சல் தன்மை ஆகிய குறித்து 
எழுதி இருந்தோம். அதற்கான எதிர்வினைகள் வந்துள்ளன.
அவற்றுக்கான மறுப்பு அடுத்த கட்டுரையில்....
இக்கட்டுரை ஒரு முன்னுரை மட்டுமே........ (தொடரும்)...
---------------------------------------------------------------------------------------------     
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக