திங்கள், 12 அக்டோபர், 2015

தமுஎகசவுக்கு விருது வழங்க அருகதை இல்லை!
நாட்டில் நிலவும் சகிப்பின்மையைக் கண்டித்து
மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எழுத்தாளர்கள்
சாகித்ய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தபோது 
கல்லுளி மங்கனாய் இருந்த தமுஎகச!
----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------------
அவர்கள் வரிசையாகக் கொல்லப் பட்டார்கள்.
நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாலே, கல்புர்கி.
இவர்கள் எழுத்தாளர்கள். முதல் இருவரும்
நாத்திகர்கள். கல்புர்கி நாத்திகர் அல்லர்;
அவர் இந்து மத சீர்திருத்தவாதி.

இவர்களின் கொலைகள் நாட்டில் நிலவிய
சகிப்பின்மையை (intolerance) வெளிப்படுத்தின. இதைக்
கண்டித்தும், குற்றவாளிகளைப் பிடிக்காமல்
மெத்தனமாய் இருந்த மோடி அரசைக் கண்டித்தும்
நாடு முழுவதும் சாகித்ய அகாதமி விருதுகளைப்
பெற்ற எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளைத்
திருப்பிக் கொடுத்து மோடி அரசின் முகத்தில்
கரி பூசினர்.

இந்நிகழ்வு சர்வதேச அளவில் கவனிப்பைப் பெற்றது.
மோடி அரசு கடும் நெருக்கடியைச் சந்தித்தது. ஒவ்வொரு
நாளும் ஏதோ ஒரு எழுத்தாளர் விருதைத் திருப்பிக்
கொடுத்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் "விருது
துறப்பு" தொடர்ந்து மக்களின் நினைவில் பசுமையாக
இருந்து வந்தது. இவை அனைத்தும் கடந்த ஆண்டு
செப்டம்பர்-அக்டொபரில் நடந்தது என்பதை நாம்
அறிவோம்.

என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள, இடதுசாரிகள் என்று
அறியப்படும் தமுஎகச அமைப்பைச் சார்ந்த ஒரு
எழுத்தாளர் கூட விருதைத் துறக்கவில்லை.
அவர்கள் விருதைத் துறக்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்பும் கோரிக்கையும் மக்களிடம் இருந்து
மிக வலிமையாக வந்த பொழுதும்,  தமுஎகசவின்
எழுத்தாளர்கள் சுடுகாட்டு அமைதி காத்தனர்.

தமுஎகசவினரின் இந்தக் கல்லுளிமங்கத்தனம்
கண்டு நாடே காரித்துப்பியது. ரோம் நகரம் பற்றி
எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்
போல, நாடே கொந்தளித்துக் கிடந்த போது,
சமூகப்  பிரக்ஞை அறவே இன்றி,  ஜடமாய்
சவமாய்க் கிடந்த இந்த தமுஎகசவினர், இப்போது
விருது கொடுக்கிறார்களாம். எவர் ஒருவருக்கும்
விருது கொடுக்க, இவர்களுக்கு என்ன அருகதை
இருக்கிறது?

அற்பம் அற்பத்தோடு சேரும்!
-------------------------------------------------------
அண்மையில் எஸ்.வி.ராஜதுரைக்கு விருது வழங்கியது
தமுஎகச. எஸ்.வி.ஆர் தன்  வீட்டில் மோட்டு வளையை
வெறித்துப் பார்த்துக் கொண்டு சிவனே என்று கிடந்தார்.
"சர்வதேச வலைப்பின்னலைக் கொண்ட ஏகாதிபத்திய
என்.ஜி.ஓ அமைப்புகளிடம் தொடர்புள்ளவராயிர்றே,
இவரைக் காக்காய் பிடித்து வைக்கலாமே" என்ற
புரட்சிகர நோக்கில் தமுஎகச தலைமைப் பீடத்தை
அலங்கரிக்கும் சான்றோர்கள் முடிவு எடுத்து விருதை
அறிவித்தனர்.

எஸ்.வி.ஆர் என்ன செய்திருக்க வேண்டும்?  நியாய
உணர்வு அனுவளவேனும் அவரிடம் இருந்தால், அவர்
இந்த விருதை ஏற்க மறுத்து இருக்க வேண்டும். ஒட்டு
மொத்த இந்தியாவிலும் உள்ள எழுத்தாளர்கள்,
தங்களின் விருதுத்  துறப்பு மூலம் மோடி அரசுக்கு
நெருக்கடியைக் கொடுத்தபோது, அந்த மைய
நீரோட்டத்தில் இணையாமல் செத்த சவமாய்க்
கிடந்த தமுஎகசவின் விருதை ஏற்க மாட்டேன் என்று
அறிவித்து இருக்க வேண்டும். அப்படிச் செய்து
இருந்தால், இன்று மொத்தத் தமிழ்நாடும்
எஸ்.வி.ஆரைக் கொண்டாடும். ஆனால் எஸ்.வி.ஆரிடம்
இருந்து அதையெல்லாம் எதிர்பார்க்க இயலுமா?
முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். அதாவது
அற்பம் அற்பத்தோடு சேரும்.

கிழவி முதலிரவை நினைத்துப் பார்த்த கதை!
-------------------------------------------------------------------------------------
விருது கொடுத்ததோடு நிற்காமல், எஸ்.வி.ஆர் ஒரு
மார்க்சிய அறிஞர் என்றும் அவரின் மார்பில்
சந்தனத்தைப் பூசினர் தமுஎகசவினர். தான் மார்க்சிய 
அமைப்பில்  இருந்தது எஸ்.வி.ஆருக்கு மங்கலாக
மசமசவென்று தெரிந்தது. தொண்டு கிழவி தன்
முதலிரவை நினைத்துப் பார்த்த கதையாக, எஸ்.வி.ஆர்
தான் மக்கள் யுத்தக் குழுவில் இருந்ததை
நினைத்துப் பார்த்தார்.

தனக்கு PM தகுதி (Party Member) தருவதற்கு ம.யு. தலைமை
மறுத்து விட்டதை, எஸ்.வி.ஆர் நினைவு கூர்ந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகபட்ச அந்தஸ்தே PM தான்.
போல்ஷ்விக் கட்சியில் லெனினுக்கே PM தகுதிதான்.
      
இங்கு வாசகர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகிலேயே உயர்ந்த பதவி எது என்ற கேள்விக்கு,
"கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பதவிதான்"
என்றார் லெனின். கம்யூனிஸ்டுகள் தனியொரு
பொருளால் உருவாக்கப் பட்டவர்கள் (Communists are of
a special mould) என்றார் ஸ்டாலின்.

மிகக் குறுகிய காலம்தான் எஸ்.வி.ஆர், ம.யு.வில்
இருந்தார். 1980இல் தோழர் பாலன் கொல்லப் பட்ட
பிறகு, எஸ்.வி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
கட்சி அவரின் குட்டி முதலாளித்துவத்
திருவிளையாடல்களை அனுமதிக்கவில்லை.
(அவற்றை இங்கு விவரிக்க விரும்பவில்லை)

எஸ்.வி.ஆர் மட்டுமல்ல, அ மார்க்ஸ், ரவிக்குமார்
ஆகியோருக்கும், அவர்கள் அமைப்பில் இருந்தபோது,
PM தகுதி வழங்கப் படவில்லை. (இது குறித்தும்
விவரிக்க விரும்பவில்லை)

குட்டி முதலாளித்துவம் எப்போதும் புகழை விரும்பும்.
தான் புகழப்பட வேண்டும் என்ற ஒற்றை
விசையுடனே அது எப்போதும் செயலாற்றும். 
ஆனால் தோழர் பாலன் போன்றவர்கள்
அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் தன் சுயம்
உள்ளிட்ட அனைத்தையும் புரட்சியின் நலனுக்குக்
கீழ்ப்படுத்தினர். 

ராமச்சந்திர மேனன்-மோகன்தாஸ்-தேவாரம் என்ற
முக்கூட்டு பாசிச அடக்குமுறைகள் நிலவிய காலம்
அப்போதைய காலம். ஒவ்வொரு தோழரிடம்
இருந்தும் கட்சி உச்சபட்ச உழைப்பையும்
அர்ப்பணிப்பையும் கோரிய காலம் அது. கட்சியின்
எதிர்பார்ப்பை, மக்களுக்கான தேவையை
நிறைவேற்ற இயலாமலும், தியாகங்களுக்குத்
தயார் இல்லாமலும் இருந்த எஸ்.வி.ஆர் கட்சியை
விட்டு வெளியேறினார்.

எஸ்.வி.ஆரின் நீண்ட பயணத்தில் கட்சி வாழ்க்கை
என்பது கொஞ்ச நேரமே வந்து போன ஒரு நிகழ்வுதான்.
கட்சி அவரை வெளியேற்றவில்லை. அவராகத்தான்
போனார். அவர் வெளியேறியதற்கு கட்சி காரணம் அல்ல.
அது முழுக்க முழுக்க அவரின் அகநிலை விருப்பம்
சார்ந்தது. அவரின் பங்களிப்பை விட அதிகமாகவே
கட்சி அவருக்கு அங்கீகாரம் அளித்து இருந்தது.
இதுதான் உண்மை.

Once upon a time, Long long ago, எஸ்.வி.ஆரும் ஒரு புரட்சிகரக்
கட்சியில்  இருந்தார் என்பதை அவரே மறந்து போய்
விட்ட நிலையில், அவரது நனவிலி மனதிற்குள்
புகுந்து அகழ்வாராய்ச்சி செய்து, அவரின் கட்சி
வாழ்க்கையை வலிந்து நினைவு படுத்தி, அவருக்கு
மார்க்சிய அறிஞர் என்று சந்தனமும் ஜவ்வாதும்
பூசி, தமுஎகசவினர் செய்த கூத்து எப்படி இருக்கிறது
பாருங்கள்!

"ஆடகப்பொன் செந்திருவைப் போல்அணங்கைச்
சிங்காரித்து என்ன பயன்
அந்தகனே நாயகன் ஆனால்"?  

எதிர்ப்புரட்சியாளர் எஸ்.வி.ஆர் ஜிந்தாபாத்!
தமுஎகச ஜிந்தாபாத்!!
*************************************************************************
  


     
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக