வெள்ளி, 20 மே, 2016

தேர்தல் முடிவுக்குப் .பின்
உயிரோடு இருக்கப் போகும்  கட்சிகளும்
சாகப் போகும் கட்சிகளும்!
----------------------------------------------------------------------------------
 திமுக அதிமுக ஆகிய கட்சிகள்
பெருவாழ்வு வாழும் கட்சிகள். அவற்றின்
களஞ்சியங்கள் நிரம்பி வழிகின்றன. அவர்களின்
பிரகாரங்களில் மக்கள் வெள்ளம். இந்தத் தேர்தலில்
மக்கள் அவற்றின் வாழ்வுக்கு வளம் சேர்த்துள்ளனர்.
திமுக அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும்
அவற்றை அண்டிப்பிழைக்கும் காங்கிரஸ் முதலிய
கட்சிகளும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்
கொண்டன.

எனவே வாழ்வாதாரத்தை இழந்த, ஒப்பாரிச் சத்தம்
தொடர்ந்து கேட்கிற மக்கள் நலக் கூட்டணியையும்
பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளைப்
பரிசீலிப்போம்.

1) முதலில் நாம் தமிழர் கட்சி. முதன் முதலாக
இந்தத் தேர்தலில்தான் போட்டி இடுகிறது. இக்கட்சி
அரசியலில் எல்.கே.ஜி. எனவே இக்கட்சி எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாதது இயல்பே. இக்கட்சிக்கு
வயது வந்த பிறகு இதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்.

2) பாமக: கட்சி ரீதியாக அதிமுக, திமுக, காங்கிரஸ்
ஆகிய கட்சிகளுக்கு அடுத்து ஐந்து சதம் வாக்கு
வங்கியுடன் நான்காவது இடத்தில் உள்ள கட்சி.
தனித்துப் போட்டியிட்டு இதைப் பெற்றுள்ளது.
சாதிய ரீதியான அடையாள அரசியல் கட்சி.
தேர்தல் தோல்வி இக்கட்சியைப் பாதிக்காது.
இது தொடர்ந்து வாழும்.

3) பாஜக: இது சித்தாந்தத்தின் அடிப்படையில்
இயங்கும் கட்சி. தொடர்ந்து டெப்பாசிட் இழந்தாலும்
இக்கட்சி தொடர்ந்து இயங்கும். தனித்து நின்று
இத்தேர்தலைச் சந்தித்து உள்ளது. தற்போதைய
சூழலில் இக்கட்சிக்கு மரணம் இல்லை. தொடர்ந்து வாழும்.

4) தமாகா(மூப்பனார்): கட்சி இப்போதுதான்
பிறந்துள்ளது. உடனடி மரணம் இல்லை. வாழ்வும் இல்லை.
மரணம் நெருங்குமேயானால் மீண்டும் காங்கிரசுடன்
2019 தேர்தலின் போது சேர்ந்து விடும். இதன் மூலம்
மரணத்தில் இருந்து தப்பிப் பிழைத்து விடும்.

5) விடுதலைச் சிறுத்தைகள்: அடையாள அரசியல் கட்சி.
பாமக போன்ற கட்சிகளின் இருப்பு இக்கட்சியின்
இருப்புக்கான நியாயத்தை வழங்குகிறது. எனவே
தொடர்ந்து இக்கட்சி இயங்கும். வாழ்வு இல்லாவிடினும்
சாவு இல்லை.

6) போலிக்கம்யூனிஸ்ட்  கட்சிகள்: CPI, CPM போலிக்
கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து இயங்கும்.
சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சிகள்
இவை. எனவே செங்கொடியும் அரிவாள் சுத்தியல்
சின்னமும் இருக்கும் வரை இக்கட்சிகள் தொடர்ந்து
0.5 வாக்கு சதத்துடன் குற்றுயிரும் குலையுயிருமாகத்
தொடர்ந்து வாழும். மரணம் இல்லை.

7) மதிமுக: நோட்டாவை விடக் குறைவாக, 0.7 சதம்
பெற்று இறுதி மூச்சை விட்டுக் கொண்டு
கொண்டிருக்கும் கட்சி மதிமுக. 2021 தேர்தலில்
இக்கட்சி உயிரோடு இருக்காது. நீத்தார் நினைவில்
இக்கட்சி இடம் பெறுகிறது.

8) இறுதியாக தேமுதிக: இத்தேர்தலில் இக்கட்சி சரிவில்
இறங்கி விட்டது. கிங்கா  கிங் மேக்கரா என்றெல்லாம்
தலைக்கனத்தை வெளிப்படுத்தி வெறும் 2.3 சதம்
வாக்கு வங்கியை மட்டுமே பெற்றுள்ளது. விஜயகாந்த்
பிரேமலதா சுத்தீஷ் ஆகிய மூவரைத் தவிர அடுத்த
தலைவர் இக்கட்சிக்கு இல்லை. குடும்பக்கட்சியான
இது இம்மூவருக்குள் நெத்திலிக் கருவாடாகச்
சுருங்கி விட்டது.

பாஜகவைத் தவிர வேறு எக்கட்சியும் இனி இதனுடன்
கூட்டு வைக்க முயலாது. கூட்டணி பேரத்தில்
இக்கட்சி இனி பெரிதும் பலவீனப்பட்டு விடும்.
எந்தவித எதிர்காலமும் இக்கட்சிக்கு இல்லை.
கூடிய விரைவில் மரணம் நிச்சயம்.

9) சுருங்கக் கூறின், இத்தேர்தல் முடிவின் பின்,
மதிமுக மரணத்தை நோக்கி வேகமாகச் செல்கிறது,
தேமுதிக மெதுவாகச் செல்கிறது. 2021இல்
இவ்விரு கட்சிகளும் நீத்தார் நினைவுப் பட்டியலில்
இடம் பெற்று விடும்.
****************************************************************************
.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக