வெள்ளி, 13 மே, 2016

மார்க்சியம் என்பது மனிதகுல அறிவின்
ஒட்டுமொத்தம்! மார்க்சியமற்ற அறிவு
புல்லறிவே!
-----------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------
அறியாமையே எல்லாத் தீமைகளுக்கும் தாய்
(Ignorance is the source of all evils) என்றார் சாக்ரட்டீஸ்.
எனவே தான் வாழும் சமூகத்தை அறியாமை
அகன்ற, ஒரு அறிவுநிறை சமூகமாக மாற்றி
அமைப்பது மானுடத்தின் தலையாய கடமை
ஆகிறது.

காலந்தோறும் கணக்கற்ற தத்துவங்கள்
தோன்றினாலும், அவ்வாறு தோன்றிய யாவிலும்
மார்க்சியமே அறிவார்ந்த ஒரே தத்துவமாக
மிளிர்கிறது.

மார்க்சியம் என்றால் என்ன என்ற ஒரு கேள்விக்குப்
பதிலளித்த லெனின் "மார்க்சியம்  என்பது மனிதகுல
அறிவின் ஒட்டுமொத்தம்"என்றார் லெனின்.
(Marxism is the treasure house of knowledge). மனித குலம்
இதுநாள் வரை சேகரித்து வைத்திருக்கும் அறிவுச்
செல்வங்கள் யாவற்றையும் கற்றுத் தம் அறிவை
வளப்படுத்திக் கொள்வதன் மூலமே ஒருவன்
சிறந்த கம்யூனிஸ்ட்டாக முடியும் என்று லெனின்
கருதினார்.

அறிவைப் பெறுவதன் நோக்கம் என்ன? சமூகத்தை
மாற்றியமைக்க விரும்பும் எவராயினும் அவருக்கு
அதற்குரிய அறிவு தேவை. எனவே அறிவைப் பெறுவதன்
தலையாய நோக்கம் சமூக மாற்றத்துக்குப்
பங்களிப்பதே என்று மார்க்சியம் கருதுகிறது.

சமூக மாற்றத்துக்குப் பயன்படாத எந்த ஒரு அறிவையும்
மார்க்சியம் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.

அறிவு பற்றிய முதலாளித்துவத்தின் பார்வை
சமூக மாற்றத்திற்கு எதிரானது. வெறும் கல்வி
சார்ந்த அறிவை (academic brilliance) மட்டுமே அறிவு
என்று முதலாளித்துவம் கணிக்கிறது. குறிக்கோள்
அற்ற அறிவை முதலாளித்துவம் பேணி வளர்க்கிறது.

கல்வி சார்ந்த அறிவை மார்க்சியமும் அங்கீகரிக்கிறது.
ஆனால் அது மட்டுமே அறிவு அல்ல என்று மார்க்சியம்
கருதுகிறது. அது அறிவின் ஒரு பகுதியே (a part and not a whole)
என்கிறது மார்க்சியம்.

ஆயின் முழுமையான அறிவு என்பது என்ன? மனித
குலத்தை சகல அடிமைத் தனங்களில் இருந்தும்
விடுதலை செய்வதும், சமூக மாற்றத்திற்குப்
பங்களிப்பதுமான புரட்சிகரச் செயல்பாடுகளில்
இருந்து பெறுவது அறிவு.

சமூக மாற்றமோ விடுதலையோ தற்செயலாய்
நிகழ்வதில்லை. அபினி மயக்கத்தில் ஆழ்ந்து
கிடந்த சீனச் சமூகத்தை மாவோ விடுதலை
செய்தார். சர்வாதிகார நுகத்தடியில் கழுத்து
முறிந்து கிடந்த கியூபாவை விடுதலை செய்தார்
காஸ்ட்ரோ. ஜார் மன்னனின் கொடுங்கோன்மையில்
மூச்சுத் திணறிய ரஷ்ய மக்களை விடுதலை
செய்தார் லெனின். இந்த விடுதலைக்கான
தத்துவங்களை வழங்கினர் மூல ஆசான்கள்
மார்க்சும் எங்கல்சும்.

கல்லூரி பல்கலைகளில் படித்துப் பட்டம்
பெறுகையில் கல்வி சார்ந்த அறிவைப் பெறுகிறோம்.
அதுபோல, சமூக மாற்றத்துக்கான புரட்சியில்
பங்கு பெறும்போது, சமூக மாற்றம் குறித்த அறிவைப்
பெறுகிறோம்.

அறிவுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும்; ஒரு
பயன் இருக்க வேண்டும். இதையே வள்ளுவரும்
கூறுகிறார்:
அறிவினால் ஆவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.

மார்க்சிய அறிவு செயல்பாட்டுக்கான அறிவு;
செயலுக்கான வழிகாட்டும் அறிவு. புரட்சிகரச்
செயல்பாடுகளின் அடிநாதமாக, ஆதார சுருதியாக
விளங்குவது மார்க்சிய அறிவு.

மார்க்சியமற்ற அறிவு அனைத்தும் புல்லறிவே.
மார்க்சியத்தை உள்ளடக்காத  எந்த அறிவும்
அறிவல்ல. மார்க்சிய அறிவைப் பெறாத எவரும்
அறிவாளிகள் அல்லர். அவர்கள்  தங்களை
அறிவாளிகளாகக் கருதுவதை ஏற்க இயலாது.

ஏனெனில் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய,
லெனின் கருத்துப்படி, மார்க்சியம் என்பது
மனிதகுல அறிவின் ஒட்டுமொத்தம். ஆக,
மார்க்சிய அறிவைப் பெறாதோர் ஒட்டுமொத்த
அறிவை, முழுமையான அறிவைப் பெறாதோரே.

அறிவு, நுண்ணறிவு பற்றிய முதலாளித்துவத்தின்
பார்வையும் மார்க்சியத்தின் பார்வையும்
முற்றிலும் வேறுபட்டவை. அறிவுக்கும்
தத்துவத்துக்கும் என்ன தொடர்பு? எந்த ஒரு
தத்துவத்தையும் சாராமல் சுயமாக  இருப்பதல்லவா
அறிவு என்கிறது முதலாளித்துவம்.

முதலாளித்துவத்தின் பார்வை மூளியான பார்வை.
எனவே அடித்துக் கூறுகிறோம்:
"மார்க்சியத்தை உள்ளடக்காத அறிவு அறிவே அல்ல".

ஆயின், மார்க்சிய அறிவை அளப்பது எப்படி?
அதற்கான அளவுகோல்கள் மார்க்சியத்தில் உண்டா?
இது குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
******************************************************************  

  

    

    

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக