பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.
பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.
இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.
முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.
இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.
மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.
முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.
சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.
மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.
1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.
1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.
இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.
சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.
இதில் பலியானவர்கள்
1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,
2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,
4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்,
5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ.,
6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள்,
7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்),
8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள்,
9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள்,
10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம்,
11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்),
12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில்,
13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை,
14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர்,
15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை),
16. தனு (விடுதலைப் புலி),
17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை)
இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?
மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
– எஸ்.புஷ்பவனம்
LikeShow more reactions
Comment
Comments
Ilango Pichandy
Write a comment...