வெள்ளி, 26 மே, 2017

குவான்டம் புலக் கொள்கையால்
பொருள்முதல்வாதம் ஆட்டம் காண்கிறதா?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) இந்தப் பிரபஞ்சம் பின்வரும் 3 விஷயங்களால் ஆனது.

2) அ)  பருப்பொருள் (MATTER) =4.9%
ஆ) கரும்பொருள் (DARK MATTER)= 26.8%
இ) கரும்  ஆற்றல் (DARK ENENRGY)= 68.3%
ஆக மொத்தம்= 100%

3) பருப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரிந்தது.
அணுக்களால் ஆனது என்று அறிந்து வைத்துள்ள
பருப்பொருள் அது.

4) கரும்பொருள் கண்ணால் பார்க்க இயலாதது. இது
எதனால் ஆனது என்பது தெரியாது.

5) அதே போல கரும் ஆற்றல் என்பது எதனால் ஆனது
என்பதும் நமக்குத் தெரியாது.

6)  மின்காந்த விசை  என்பதை ஃபோட்டான்கள் மூலம்
அறிந்து கொள்கிறோம். அதே போல கரும் ஆற்றல்
என்பதை எந்தத் துகளால் அறிந்து கொள்ள இயலும்
என்பது நமக்குத் தெரியாது.

7) கண்ணால் பார்க்க இயலாவிட்டாலும், கரும்பொருள்
மற்றும் கரும் ஆற்றலின் இருப்பு உணரப் பட்டுள்ளது.

8) சுருங்கக் கூறின், அறியப்பட்ட பிரபஞ்சம் என்பது
5% மட்டுமே. அறியப்படாத பிரபஞ்சம் 95% உள்ளது.

9) குவான்டம் புலக் கொள்கை அணுக்களோ துகள்களோ
அடிப்படையானவை அல்ல என்று கூறுகிறது.
மாறாக, புலங்களே இந்தப்  பிரபஞ்சத்தின் கட்டுமானப்
பொருட்கள் என்று கூறுகிறது.

10) புலங்களில் ஏற்படும் DISTURBANCES or EXCITATIONSதான்
துகள்கள் ஆகும் என்கிறது குவான்டம் புலக் கொள்கை.

11) இதுதான் பிரபஞ்சம் பற்றிய சுருக்கமான சித்திரம்.

12) எனவே பிரபஞ்சம் அணுக்களால்  அல்லது
துகள்களால் ஆனது என்று கூற முடியாது  என்பதை
வாசகர்களால் புரிந்து கொள்ள இயலும்.

13) இப்போது அடுத்த கேள்வி எழுகிறது. இதனால்,
இந்தப் புதிய கண்டுபிடிப்புகளால், இந்தப் புதிய
கொள்கைகளால் பொருள்முதல்வாதம் ஆட்டம்
காண்கிறதா என்பது இயல்பாக எழும் கேள்வி.

14) இதற்கு என்ன பதில்?
பொருள்முதல்வாதத்தின் உயிரும் சாரமும்
பொருள் ஆகும். பொருள், கருத்து ஆகிய இரண்டு
மாபெரும் பிரிவுகளில்  பொருள்முதல்வாதமானது
பொருளை .அடிப்படையாகக் கொள்கிறது.

15) இதன் பொருள் என்ன? பொருள்முதல்வாதம்
என்பது கருத்துக்கு எதிரானது என்பதுதான்.

16) நவீன இயற்பியல் கொள்கைகள் எதுவும்
பிரபஞ்சத்தின் அடிப்படையாக  "கருத்து" என்பதைச்
.சொல்லவில்லை.

17) பிரபஞ்சம் கருத்துக்களால் ஆக்கப் பட்டது
என்றோ, பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருட்கள்
(building blocks)  கருத்துக்கள் என்றோ  நவீன இயற்பியல்
சொல்லவில்லை. அப்படிச் சொல்லவும் இயலாது.

18) அணுக்கள், துகள்கள்  என்பவற்றுக்குப் பதில்
புலங்கள் என்று சொல்கிறது நவீன இயற்பியல்.

19) எனவே பொருளோ, துகளோ, புலமாக மாறி
இருக்கிறதே தவிர,  கருத்து என்பதாக ஆகவில்லை.

20) எனவே பொருள்முதல்வாதத்தின் அடிப்படை
(கருத்து அல்ல என்பதுதான் அடிப்படை) மாறவில்லை.
எனவே பொருள்முதல்வாதம் ஆட்டம் காணவில்லை.

21) அதே நேரத்தில், நவீன இயற்பியலின் வளர்ச்சிக்கு
ஏற்றவாறு பொருள்முதல்வாதம் தன்னைப்
புதுப்பித்துக் கொள்ளாமல் இருக்குமானால்
அது சாரம் இழக்கும். இதுதான் உண்மை.
*************************************************************        
 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக