ஞாயிறு, 14 மே, 2017

காலங்கடந்து நடைபெறும்
போக்குவரத்து வேலைநிறுத்தம்!
உண்மை நிலை விளக்கம்!
-----------------------------------------------------------
1) வேலைநிறுத்தம் என்பது தனியொருவர்
மேற்கொள்ளக் கூடியது அல்ல. அது ஒரு
கூட்டு நடவடிக்கை (concerted action).

2) தொழிலாளி வர்க்கத்தின் சக்தி என்பது
உண்மையில் அதன் கூட்டு பேர சக்தியே
(collective bargaining capacity).

3) இந்த கூட்டு பேர சக்தியை பேச்சுவார்த்தை
மூலமாகவும். வேலைநிறுத்தம் மூலமாகவும்
தொழிலாளி வர்க்கம் வெளிப்படுத்தும்.

4) பொதுவாக, வேலைநிறுத்தம் என்பது
தொழிலாளி வர்க்கம் விரும்பி ஏற்கும்
ஆயுதம் அல்ல. இறுதிக்கும்  இறுதியான
பரிசீலனையில்தான் வேலைநிறுத்தம்
முடிவு செய்யப் படுகிறது.

5) இருதரப்புப் பேச்சுவார்த்தையிலோ அல்லது
முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலோ, தனது
கூட்டுபேர சக்தியை வெளிப்படுத்துவதன்
மூலம் தீர்வு காணவே எப்போதும் தொழிலாளி
வர்க்கம் விரும்புகிறது. அது முடியாமல்
போகும்போது மட்டுமே, வேறு வழியின்றி,
தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தத்தை
நாடுகிறது.

6) வேலைநிறுத்தத்தைப் பொறுத்து, உலகம்
முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம்
மேற்கொள்ளும் நடைமுறை (modus operandi)
இதுதான்.

7) தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின்
மே 15, 2017 காலவரம்பற்ற வேலைநிறுத்தம்
உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னரே
நடந்திருக்க வேண்டும்.

8) ஆனால் அதிமுகவுடன் கூட்டணி என்ற கனவில்
இருந்த மார்க்சிஸ்ட் கட்சி தன் தொழிற்சங்கமான
CITU சங்கத்திற்கு வேலைநிறுத்தம் செய்யுமாறு
அறிவுறுத்தவில்லை. CITU அமைதி காத்த நிலையில்
திமுக சங்கமான LPF சங்கமும் அமைதி காத்தது.

9) போக்குவரத்தில் வேலைநிறுத்தம் என்றால்,
LPF, CITU ஆகிய இரு சங்கங்களும் பங்கேற்காமல்
யாரும் வேலைநிறுத்தத்தை நடத்த முடியாது.

10) போக்குவரத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில்
முதல் மூன்று இடத்தில் இருப்பவை இந்த மூன்று
சங்கங்களே. அ) LPF ஆ) ATP இ) CITU.

11) ஊழியர்களிடம் கடும் அதிருப்தியும்
கொந்தளிப்பும் நிலவியபோதும், LPF, CITU
சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கான சூழலை
உருவாக்கவோ, அதற்கான ஆயத்தங்களைச்
செய்யவோ முன்வரவில்லை.

12) தற்போது ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்டுள்ள
சாதகமான சூழலும், தொழிலாளர்களின்
நிர்ப்பந்தமும் சேர்ந்து வேலைநிறுத்தம் என்ற
ஆயுதத்தைக் கையில் எடுக்குமாறு சங்கங்களின்  
தலைமையை கட்டாயப் படுத்தியுள்ளன. எனவே
வேலைநிறுத்தம் நடக்கிறது.

13) இந்த வேலைநிறுத்தம் வெற்றி அடைந்தால்தான்,
பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் வீட்டில்
அடுப்பு எரியும். எனவே இதை ஆதரிப்பது அனைத்து
ஜனநாயக சக்திகளின் கடமை ஆகும்.   

14) பொதுமக்களுக்கு நேரும் இடையூறுகளுக்கு
எங்களின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்
கொள்கிறோம். இதற்குக் காரணம்
தொழிலாளர்கள் அல்ல என்ற உண்மையை
மக்கள் உணர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். 

தோழமையுடன்,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் மற்றும்
முன்னாள் மாவட்டச் செயலாளர்,
முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகி,
முன்னாள் பேச்சு வார்த்தை மாநில
கவுன்சில் உறுப்பினர்
NFTE, BSNL மற்றும்
National Federation of Telecom Employees
சென்னை, தமிழ்நாடு. 
நாள்: 14.02.2017, சென்னை.
*************************************************************        
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக