புதன், 3 மே, 2017

வாஸ்து சாஸ்திரத்தை ஐஐடி கரக்பூரில்
ஒரு பாடமாக வைப்பதை எதிர்க்கிறோம்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட
ஐஐடி கோரக்பூர் ஐஐடி ஆகும். மேற்குவங்க
மாநிலத்தில், கொல்கொத்தாவில் இருந்து 110 கிமீ
தூரத்தில் உள்ள கரக்பூரில் 1951இல் இந்தியாவின்
முதல் ஐஐடி தொடங்கப் பட்டது.

அண்மையில் கொல்கொத்தாவில் நடைபெற்ற
வாஸ்து பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறையில் (workshop),
ஐஐடி கரக்பூரில்,கட்டிடக்கலை பற்றிய இளநிலை
மற்றும் முதுநிலை படிப்புகளில் வாஸ்து சாஸ்திரம்
ஒரு பாடமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

புனிதச் சித்திரங்கள் (sacred diagrams), நவகிரஹ
மண்டலங்கள் (nine circuit placements), புனித பலிபீடங்கள்
(sacred altars) ஆகியவை பற்றி மாணவர்களுக்கு
கற்றுத்தரப்படும் என்றும் மாணவர்கள் இம்மூன்று
தலைப்புகளிலும் திட்டப்பணிகள் மற்றும்
வீட்டுப்பாடங்கள் (projects and assignments) மேற்கொள்ளலாம்
என்றும் கூறப்பட்டுள்ளது.

இது முற்றிலும் அறிவியலுக்கு முரணானது. வாஸ்து
சாஸ்திரம் என்பது அறிவியல் வழியில் சரியானதுதானா
என்று தேசிய அளவில் ஆய்வுக்கு விடப்பட்டு,
சாதகமான முடிவுகள் கிடைத்த பிறகே,
அதைப் பாடத்திட்டத்தில் இணைக்க முடியும்.

தனிப்பட்ட சிலரின் மத நம்பிக்கைகள் ஐஐடி
போன்ற உயர் தொழில்நுட்பப் பல்கலைகளின் 
பாடத்திட்டத்தில் வைக்கப் படக்கூடாது.

மத்திய அரசின் இந்த முயற்சி அறிவியலுக்கு
எதிரானது. நிரூபிக்கப் படாத வெற்று  மூட
நம்பிக்கைகளை உயர் அறிவியல் படிப்பில்
திணிப்பது என்பது அறிவியலின் வளர்ச்சிக்குப்
பெரும் முட்டுக் கட்டையாக அமையும்.

எனவே இந்த முயற்சி உடனடியாகத் தடுத்து
நிறுத்தப்பட வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கருதுகிறது. நாடெங்கும் உள்ள
அறிவியல்  ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள்
ஆகிய  அனைவரும் ஒன்றிணைந்து, அருவருக்கத்தக்க
இந்த முயற்சியை முறியடிக்க முன்வர வேண்டும்
என்றும் நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக்
கொள்கிறது.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர்
நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை
ilangophysics@gmail.com
சென்னை-600 094; நாள்: 02.05.2017.
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக