செவ்வாய், 7 ஜூன், 2016

அற்புதம் அம்மாளுக்கு அன்பான வேண்டுகோள்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய அம்மா,
கடந்த 25 ஆண்டுகளாக இந்திய ஏகாதிபத்தியத்தையும்
பார்ப்பனீயத்தையும் எதிர்த்து தங்கள் மகனின்
விடுதலைக்காகப் போராடி வரும் தங்களை
வணங்கி மகிழ்கிறோம்.

5 ஆண்டுகளுக்கு முன்பு, 2011இல் தங்கள் மகன்
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையைக்
கோரி நடைபெற்ற வாகனப் பேரணியில் நாங்கள்
பங்கேற்றோம். தமிழ்ப்பெண் செங்கொடி தன்னுடைய
இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தில்
நெஞ்சம் பரிதவித்தோம்.

இன்று இந்த 2016இல், 5 ஆண்டுகள் கழிந்து விட்டன.
ஆயினும் தங்கள் மகனின் விடுதலையில்
அணுவளவு முன்னேற்றம் கூட நிகழவில்லை.
இதற்குக் காரணம் சூழ்ச்சி மிக்க பார்ப்பனீய
ஏகாதிபத்தின் நரித்தந்திரங்களை முறியடிக்க
நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே.

சிறையில் இருக்கும் ஏழு பேரில், நளினியும்
பேரறிவாளனும் மட்டுமே இந்தியர்கள். மீதி
ஐந்து பெரும் வெளிநாட்டவர்கள்; இலங்கைக்
குடிமக்கள். அந்த 5 பேரையும் விடுதலை
செய்யக்கோரி, அவர்கள் நாட்டு அரசிடம் இருந்து
இந்தியாவுக்கு எந்தக் கோரிக்கையும் இதுவரை
வரவில்லை.

கோரிக்கையே வராதபோது அவர்களின் விடுதலை
பரிசீலிக்கப்பட வாய்ப்பே இல்லை. மொத்தமாக
ஏழு பேரின் விடுதலையைக் கோரும்போது,
யாருக்கும் விடுதலை கிடைக்க வாய்ப்பே இல்லை.

எனவே முதல் கட்டமாக, நம் நாட்டவரான நளினி,
பேரறிவாளன் ஆகிய இருவரின் விடுதலையைக்
கோருவது நம் முயற்சிகளை வெற்றிக்கு இட்டுச்
செல்லும்.

வெளிநாட்டவருக்கும் நம்  நாட்டவருக்கும் சேர்த்து
ஒரே மூச்சில் விடுதலை கோருவது நளினி
பேரறிவாளன் ஆகிய இருவரின் விடுதலையை
பலவீனப் படுத்தும்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, பார்ப்பனீயத்தை
முறியடித்து பேரறிவாளன்-நளினியின் விடுதலையைப்
பெற இது ஒன்றே வழியாகும்.

திறந்த மனதுடன் இந்தக்கருத்தைச் சிந்தித்து,
அதன்படி செயலாற்றுமாறு தங்களுக்கு அன்பான
வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
*****************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக