செவ்வாய், 7 ஜூன், 2016

ஏழு பேர் விடுதலையில்
உண்மையான முட்டுக்கட்டை எது?
அதை அகற்றாமல் விடுதலை பெற முடியாது!
கட்டக் கொள்கை (Theory of stages) அவசியமே!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
ராஜீவ் படுகொலைக் குற்றவாளிகள் ஏழு பேர்
கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து
வருகின்றனர். தண்டனைக் காலம்
முடியும் முன்னரே இவர்களை விடுதலை
செய்வது என்பது இன்னும் கானல்நீராகவே உள்ளது.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள்
ஏழு பேரில் நளினி, பேரறிவாளன் ஆகிய இருவர்
மட்டுமே இந்தியர்கள். மற்றவர்கள் வெளிநாட்டினர்.
அதாவது இலங்கையின் குடிமக்கள்.

நம் நாட்டவர், வெளிநாட்டவர் ஆகிய அனைவரையும்
ஒரே மூச்சில் விடுதலை செய்வதில் மத்திய மாநில
அரசுகளுக்குச் சிக்கல் உள்ளது. இவ்வாறு விடுதலை
செய்வது இது போன்று வெளிநாட்டினர் பங்குபெற்ற
குற்ற வழக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும்
என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே விடுதலை
செய்ய மறுக்கிறது.

இந்தச் சூழலுக்கு ஏற்றவாறு, நமது போர்த்தந்திரத்தை
மாற்றிக் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக
இந்தியர்களான நளினி, பேரறிவாளன் ஆகிய
இருவரின் விடுதலையைக் கோர வேண்டும்.
அவ்வாறு கோரும்போது, அதில் வெற்றி பெற முடியும்.
அதற்கான வாய்ப்புகள் ஒளி நிறைந்தவை.

அடுத்த கட்டமாக, மீதியுள்ள வெளிநாட்டவரான
ஐந்து குற்றவாளிகளின் விடுதலையைக் கோர
வேண்டும். இவ்வாறு கட்டம் கட்டமாக இக்கோரிக்கை
முன்வைக்கப் படும்போது அதில் வெற்றி பெறுவது
ஒப்பீட்டளவில் சுலபமானது. இங்கு கட்டக்கொள்கை
(THEORY OF STAGES) தவிர்க்க இயலாதது.

இதை நாம் விரும்புகிறோமோ இல்லையோ,
இதுதான் விடுதலைக்கான பாதை. தமிழ்
மக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள் நளினியும்
பேரறிவாளனும் மட்டுமே. மீதி ஐந்து இலங்கைக்
குற்றவாளிகளின் பெயர் கூட தமிழ் மக்களுக்குத்
தெரியாது. இதுதானே உண்மை.

தங்கள் நாட்டவரான இந்த ஐந்து பேருக்கும்
கருணை காட்ட வேண்டும் என்று இலங்கை
அரசோ, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
அவர்களோ. இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்
தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களோ தங்கள்
நாட்டின் அரசு வாயிலாக இதுவரை எந்தக்
கோரிக்கையையும் வைத்ததில்லை.

கோரிக்கையே வராதபோது, அவர்களின் விடுதலை
எப்படிப் பரிசீலிக்கப் படும்?

சுருங்கக் கூறின், ஏழு பேருக்கும் விடுதலை கோரினால்
யாருக்கும் விடுதலை இல்லை என்பதே உண்மையாகும்.
மாறாக, தமிழர்கள் நளினிக்கும் பேரறிவாளனுக்கும்
விடுதலை கோரினால், அது சாத்தியமாகும்.
***********************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக