வெள்ளி, 22 ஜூன், 2018

(1) மூத்த மார்க்சிய அறிஞர் ஞானி அவர்களின்
கருத்துக்கு மறுப்பு! (தமிழ் இந்து நேர்காணல்)
பகுதி-1: கட்டுரையின் முன்னுரை
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே.
......தொண்டரடிப் பொடியாழ்வார் (திருமாலை).......

தமிழ் இந்து ஏட்டில் (19.06,2018) மூத்த மார்க்சிய
அறிஞர் கோவை ஞானி அவர்களின் நேர்காணல்
வெளியாகி உள்ளது. சமஸ் என்னும் குட்டி முதலாளித்துவ
அரைகுறையாளர் இந்த நேர்காணலைச் செய்துள்ளார்.

கருத்து வளமும்  கருத்தியல் அனுபவச் செறிவும்
மிகுந்த ஞானி அவர்களிடம் இருந்து நேர்காணல்
என்ற பெயரில் சமஸ் அவர்களால் இவ்வளவு
குறைவாகத்தான் வாசகர்களுக்குத் தர
முடிந்திருக்கிறது என்பது சமசின் சிந்தனைக்
குள்ளத்தனத்தை வெளிப்படுத்தி விடுகிறது.
ஞானியைப் போன்றவர்களை ஒரு மார்க்சியர்
மட்டுமே நேர்காணல் செய்ய இயலும்.

ஆனால் இந்தக் கட்டுரையானது சமஸின்
நேர்காணலுக்கு அப்பாலும் தேவையான அளவு
சென்று ஞானி அவர்களின்  கருத்துக்களைத்
திறனாய்வு செய்கிறது.

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை
தொடக்கத்தில் ஏற்றுக் கொண்டு செயல்பட்ட
எஸ் வி ராஜதுரை, அ மார்க்ஸ், ரவிக்குமார்
ஆகியோர் சிறிது காலத்திற்குப் பின், மார்க்சிய
எதிரிகளாகவே மாறினர். இதில் அ மார்க்சும்
ரவிக்குமாரும் apostates of Marxismஆக அறிவித்துக்
கொண்டு, மார்க்சியக் கொள்கைகளுக்குப்
பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தினர். கொள்ளைக்
கூட்ட கிரிமினல்களின் அமைப்பு முறை
போன்றதே மார்க்சிய லெனினியக் கட்சியின்
அமைப்பு முறை என்று எழுதினார் அ மார்க்ஸ்.

மார்க்சியத்தின் இடத்தில் பின்நவீனத்துவத்தையும்
கட்சி அமைப்புகளின் இடத்தில் NGO
நிறுவனங்களையும் திட்டமிட்டுக்  கொண்டு
வந்து, ஒட்டு மொத்த மார்க்சிய இயக்கத்தை,
கட்சிகளை, தத்துவத்தை சீரழித்தவர்கள்
அ மார்க்சும் ரவிக்குமாரும்.

எஸ் வி ராஜதுரையும் வ கீதாவும் நுட்பமாகச்
செய்ததை அ மார்க்சும் ரவிக்குமாரும்
வெளிச்சத்தில் நாணமின்றிச் செய்தனர்.

இறுதியில் அ மார்க்ஸ் சிறுபான்மை மதவாதத்திலும்,
ரவிக்குமார் தலித்தியத்திலும் எஸ்வியார்
பெரியாரியத்திலும் செட்டிலாகி விட்டனர்.

அ மார்க்ஸ், ரவிக்குமார், எஸ்வியார் ஆகிய மூவரும்
விளைவித்த சேதாரங்களால், பொதுவாக
மார்க்சியமும் குறிப்பாக மார்க்சிய லெனினிய
அமைப்புகளும் பாரதூரமான பாதிப்ப்புக்கு உள்ளாயின.

ஆனால்  பேராசிரியர் எஸ் என் நாகராஜன், ஞானி
ஆகிய இருவரும் முன்னர்க் கூறிய மூவரைப் போன்று,
வெறியோடு மார்க்சியத்தை எதிர்த்து, மார்க்சிய
அமைப்புகளை உடைத்து நொறுக்க வேண்டும்
என்று சங்கல்பம் செய்து கொண்டு செயல்பட்டவர்கள்
அல்லர். அவர்கள் மார்க்சியத்தை விட்டு வெளியேறி
மார்க்சியத்துக்கே எதிராகத் திரும்பிய apostates அல்லர்.

இயன்றவரை மார்க்சியத்துக்குள் நின்று கொண்டு,
மார்க்சியத்தின் சில பல கோட்பாடுகளைக் கேள்விக்கு
உள்ளாக்கிய இவர்கள், தங்களின் சார்பில்
மார்க்சியம் சார்ந்து சில புதிய  முன்மொழிவுகளையும்
அறிமுகம் செய்தனர்.

சான்றாக, 1848ல் மார்க்சும் எங்கல்சும் எழுதிய
கம்யூனிஸ்ட் அறிக்கையைத் திருத்தி எழுதி
காலத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று
முன்மொழிந்தவர் ஞானி. இது விவாதத்துக்கு
உரியது. எனினும் மார்க்சிய அமைப்புகளால்
இதற்கு இன்றுவரை உரிய பதில்
அளிக்கப் படவில்லை.

தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டை மார்க்சியர்கள்
புறந்தள்ளியதாகக் குறை கூறும் ஞானி, அவ்வாறு
மார்க்சியர்கள் புறந்தள்ளிய பல்வேறு பண்பாட்டுக்
கூறுகளைப் பட்டியலிட்டார். இது விவாதத்துக்கு
உரியது. ஆயினும் ஞானி முன்வைத்த கருத்துக்கள்
மீது எவ்வித விவாதத்தையும் மார்க்சிய அமைப்புகள்
கட்டமைக்கவில்லை.

இதனால் தைரியம் பெற்ற ஞானி சோதிடம் என்பது
பழந் தமிழரின் மரபு; பண்பாடு என்றும் சோதிடத்தை
மார்க்சியர்கள் கைவிட்டது தவறு என்றும் கூறும்
அளவுக்குச் சென்றார். ஞானியின் அதீதமான
இந்தக் கருத்து விவாதத்துக்கு உரியது அல்ல.
ஏனெனில்  சோதிடம் என்பது முழுப்பொய் என்று
அறிவியல் நிரூபித்து உள்ளது. இது settled position ஆகும்.

பேராசிரியர் எஸ் என் நாகராஜனும் ஞானியும்
மார்க்சியத்தை விட்டு வெளியேறவோ
வெளியேறியதாகவோ அறிவிக்கவோ இல்லை.
இன்னும் மார்க்சியம் என்னும் பெருவெளிக்குள்தான்
அவர்கள் நின்றுகொண்டு இருக்கின்றனர்.

அதிகபட்சம் அவர்களை முன்னாள் மார்க்சிஸ்டுகள்
என்றோ மார்க்சாலஜிஸ்டுகள் (Marxologists) என்றோ
கூற இயலுமே தவிர மார்க்சியத்தின் எதிரிகளாக
வரையறுக்க இயலாது. மார்க்சியத்தைக்
கைகழுவியவர்களாகவும் (apostates) கருத இயலாது.
இதனால் யாப்புறுத்தப் படுவது என்னவெனில்,
ஞானி முன்மொழிந்த கருத்துக்கள்
polemical debateக்கு அருகதை உடையவை என்பதே.

எனவே ஞானியின் கருத்துக்களை ஆராய்ந்து
அவை மார்க்சியத்தில் இருந்து விலகியுள்ள
பட்சத்தில் எவ்வளவு தூரம் விலகியவை என்றும்
மார்க்சியமற்றவை (unmarxist)என்றும்
நிரூபிப்பதே மார்க்சியர்களின் கடமை.

ஞானியை விடுங்கள். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்
தா பாண்டியன் கடந்த ஆண்டு ஒரு புத்தகம்
எழுதினார்.இந்தியாவில் மார்க்சியப் பிரயோகம்
குறித்து மிக அடிப்படையான கேள்விகளை
அப்புத்தகத்தில் எழுப்பி இருந்தார்.இதுவரை எந்த
அமைப்பாவது தா பாண்டியனுக்கு மறுப்பு
கொடுத்துள்ளதா? இல்லை.

மூல ஆசான்கள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்
ஆகியோரின் படைப்புகளில் கணிசமான பகுதி
POLEMICAL DEBATES எனப்படும் மாற்றுக் கருத்து
உடையோரின் கருத்துக்களை எதிர்த்து எழுதிய
பதிலாகவே இருக்கும்.

பேராசிரியர் ஹெர் டூரிங்கின் கருத்துக்களை
மறுத்து எங்கல்ஸ் எழுதிய  மறுப்பு, புருதோனை
எதிர்த்து மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை,
மாகியவாதிகளை எதிர்த்து, எர்னஸ்ட் மாஹ் போன்ற
விஞ்ஞானிகளின் கருத்துக்களை எதிர்த்து லெனின்
எழுதிய அனுபவவாத விமர்சனம் ஆகிய நூல்கள்
மேற்கூறிய POLEMICAL WRITINGSக்கு சிறந்த
உதாரணம் ஆகும். சீனக்  கம்யூனிஸ்ட் கட்சியும்
 கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்திய விவாதங்கள்
மாபெரும் விவாதம் என்ற பெயரில் ஆவணமாக
உள்ளனவே.

ஆனால் 1990 முதல், அதாவது இந்தியாவில் LPG
கொள்கைகள் அறிமுகமான பின்னால், மார்க்சியம்
சித்தாந்த ரீதியாக பெரும் தாக்குதலுக்கு
உள்ளானது. இத்தாக்குதலை முறியடித்து
மார்க்சியத்தின் சரித்தன்மையை நிறுவும் நூல்கள்
ஆயிரக் கணக்கில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
இங்கு ஆயிரம் என்பது மிகக் குறைந்த பட்சமான
எண்ணிக்கை. ஆனால் இது நிகழ்ந்ததா? இல்லை.

டூரிங்குக்கு மறுப்பு என்ற எங்கல்சின் நூலைப்
படிப்பதன் பயன் என்ன? ஞானிக்கு மறுப்பு
என்று ஒருநூல் எழுதியிருக்க  வேண்டும் அல்லவா?
தா பாண்டியனுக்கு மறுப்பு என்று ஒரு நூல் எழுதி
இருக்க வேண்டும் அல்லவா?

மிகுந்த பெருமிதத்தோடு சிலர் அல்லது சில
அமைப்புகள் மூலதன வகுப்புகளை எடுத்து
வருகின்றனர். பல கட்சிகளும் பொருள்முதல்வாத
வகுப்புகள் என்ற பெயரில், கல்யாண சுந்தரம்,
பி ராமமூர்த்தி, வி பி சிந்தன் காலத்திய அணில்
ஆணி இலை ஈக்கள் என்று அரிச்சுவடிப் பாடங்களை
நடத்தி வருகிறார்கள். இவையெல்லாம் மிகவும்
பலவீனமான, மெலிந்த, தத்துவார்த்தக் கல்வியில்
அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதைப் பற்றிய
சிந்தனையே இல்லாத செக்குமாட்டுத் தன்மை
வாய்ந்த  செயல்பாடுகள்.

இதன் விளைவாக மார்க்சியர்கள் என்று உரிமை
கூறுவோரில் மிகப்பலர், அவர்களின் அமைப்பு
எதுவாயினும், பின்வரும் மூன்று வகையினங்களில்
அடங்கி விடுகின்றனர். (வகையினம் = category.
philosophical category அல்ல).

1) மார்க்சிய மதவாதிகள்:  இஸ்லாம், கிறிஸ்துவம்
போன்று மார்க்சியத்தையும் ஒரு மதமாகக்
கருதுவோர்.

2) மார்க்சியப் பாராயணவாதிகள்: ஆறாம் வகுப்பு
மாணவன் மனப்பாடப் பகுதிச் செய்யுளை
பாராயணம் செய்வது போல, சில மார்க்சிய
மேற்கோள்களை மனப்பாடம் செய்து
ஒப்பிப்பவர்கள்.

3) மார்க்சியச் சொற்காமுகர்கள்: குட்டி முதலாளித்துவ
நுனிப்புல்லர்கள்; அசட்டுத் தனமான பரவச
உணர்வுக்கு ஆட்பட்டு, சில மார்க்சியச் சொற்கள்
தொடர்களை (Marxist jargon) பேச்சிலும் எழுத்திலும்
பயன்படுத்தித் தங்களை மார்க்சியவாதிகளாகக்
காண்பிப்பவர்கள்.

இம்மூன்று பிரிவினரும் மொத்த மார்க்சியர்களின்
எண்ணிக்கையில் ஒரு கணிசமான பகுதியினர்
என்பது கசப்பான உண்மை. எனினும் இவர்களுக்கு
அப்பால் மெய்யான மார்க்சியமும் மார்க்சியர்களும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டு
இருக்கின்றனர். அதனால்தான் மார்க்சியம் இன்னும்
உயிர் வாழ்கிறது.

என்னதான் இருந்தாலும், நாகராஜனும் ஞானியும்
மார்க்சியத்தைக் கற்றவர்கள். சுயசிந்தனை
உடையவர்கள். சுயசிந்தனை உடையவர்களாக
அவர்கள் இருப்பதே, தமிழ் மார்க்சியச் சூழலில்
அவர்களுக்கு மிகப்பெரிய  எதிர்ப்பைச் சம்பாதித்துக்
.கொடுக்கும், டெம்ப்ளேட் சிந்தனை (template thinking)
உள்ளவர்களால் சுயசிந்தனையைச் சகித்துக்
கொள்ள முடியாது

நாகராஜன், ஞானி ஆகிய இருவரின்
இதுவரையிலான ஒட்டுமொத்தக்  கருத்துக்களும்
கணக்கில் கொள்ளப்பட்டு அவை
polemical debatesன் வரையறைக்குள் கொண்டு
வரப்பட்டு, உரிய விவாதத்திற்குப் பின்னர்
கணக்குத் தீர்க்கப் பட வேண்டும். தமிழ் இந்து
நேர்காணலில் வந்த செய்திகளை மட்டும் இங்கு
குறிப்பிடவில்லை  கடந்த பல பத்தாண்டுகளாக
இவ்விரு மூத்த அறிஞர்களும் மார்க்சியத்தை
நோக்கி முன்வைத்துள்ள விமர்சனங்கள்
அனைத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.

.அதற்கு மாறாக, வசைகளை அவதூறுகளை
வீசுவதும், கூட்டமாகப் பலர் சேர்ந்து இருக்கிற
காரணத்தால்  தைரியம் பெற்று, ஞானிக்கும்
நாகராஜனுக்கும்  தர்ம அடி போடுவதும் மார்க்சியச்
செயல்பாடு ஆகாது.

அலசி ஆராய்ந்து பார்க்கையில், ஞானி நாகராஜன்
இருவரும் முன்வைத்த கருத்துக்கள் எந்த அளவுக்கு
மார்க்சியர்களால் மறுக்கப் பட்டுள்ளன என்ற
கேள்விக்கு விடையாக தர்ம அடிகளே காணக்
கிடைக்கின்றன.

பின்குறிப்பு:
------------------------
1) இதுவரை நீங்கள் படித்தது இந்தக் கட்டுரையின்
முன்னுரையைத்தான். கட்டுரையின் சாரமான
"ஞானிக்கு மறுப்பு" என்பது அடுத்த பகுதியாக
வெளிவரும்.

2) தலைப்பில் உள்ள பாடல் சமஸின் நேர்காணலில்
குறிப்பிடப்பட்டது. பாடலின் முதல் வரியை மட்டும்
குறிப்பிட்ட சமஸ் முழுப்பாடலையும் தரவில்லை.
வாசகர்களின் வசதிக்காக முழுப்பாடலும் இங்கு
தரப்பட்டு உள்ளது.

3) Apostate =  தம்முடைய மதத்தையோ  கட்சியையோ
விட்டு விலகியவர்.
polemical debate = ஒரு குறிப்பிட்ட கருத்தை அல்லது
கொள்கையை தீவிரமாக ஆதரித்தோ அல்லது
எதிர்த்தோ இரு  தரப்பினர் நடத்தும் விவாதம்.

Template = ஒரு குறிப்பிட்ட மாடலைப் பின்பற்றி
அடுத்தடுத்து உருவாக்க வசதியான ஒரு
பிரேம் (frame)
--------------------------------------------------------------------------------------
தொடரும், அடுத்து:கட்டுரையின் 2ஆம் பகுதி.
*********************************************************


  


 
 




   

  



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக