சனி, 23 ஜூன், 2018

ஞானியின் கருத்தும் எமது மறுப்பும்!
கட்டுரைத் தொடரின் மூன்றாம் கட்டுரை!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) பொருள்முதல்வாதம்  கருத்துமுதல்வாதம்
மதம் கடவுள் ஆகியன பற்றிய ஞானியின்
கருத்துக்கள் முந்தைய கட்டுரையில் கொடுக்கப்
பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப்
பரிசீலிக்கலாம்.

2)  ஞானியின் கருத்து:
---------------------------------------
அ) கருத்துமுதல்வாதத்தையும்
பொருள்முதல்வாதத்தையும் வட துருவம்
தென் துருவம் போல எதிரெதிராக நிறுத்த
வேண்டியதில்லை. இவ்விரண்டில் ஒன்றை அழித்து
இன்னொன்றை நிலைநாட்ட வேண்டியதில்லை.
இரண்டும் ஒரு சமூகத்தில் சகவாழ்வு வாழ்ந்து
கொண்டுதான் இருக்கும்.

ஆ) கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்
பிரபஞ்சம் பற்றிய பார்வைகள். அது ஒரு பார்வை;
இது ஒரு பார்வை. அவ்வளவுதான். பிரபஞ்சம் குறித்த
பார்வை ஒற்றைப்பார்வையாக மட்டுமே இருக்க
முடியும் என்பதும் இருக்க வேண்டும் என்பதும்
சரியல்ல. எனவே இரண்டு பார்வைகளும்
இருக்கத்தான் செய்யும். அதில் தவறில்லை.  

3) ஞானிக்கு எமது மறுப்பு!
---------------------------------------------
அ) இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? எதன்
விதிகளால் (rules) பிரபஞ்சம் இயங்குகிறது?
இந்தக் கேள்விக்கு பொருளின் விதிகளால்தான்
பிரபஞ்சம் இயங்குகிறது என்பது ஒரு பதில்.
இதுதான் பொருள்முதல்வாதம்.

ஆ) இல்லை, இல்லை, கருத்தின் விதிகளால்தான்
பிரபஞ்சம் இயங்குகிறது என்பது இன்னொரு
பதில். இதுதான் கருத்துமுதல்வாதம்.

இ) இவ்விரண்டும் இயல்பிலேயே ஒன்றுக்கொன்று
எதிராக இருக்கின்றன. எனவே செயற்கையாக
அவற்றை யாரும் எதிரிகளாகக் கட்டமைக்க
வேண்டியதில்லை. இயல்பிலேயே இவை இரண்டும்
முரண்பாடு உடையவையாக இருக்கின்றன.

ஈ)  இதன் பொருள் இவ்விரண்டில் ஒன்று மட்டுமே
சரியாக இருக்க முடியும் என்பதுதான்.
பொருள்முதல்வாதமே சரியானது என்கிறது
மார்க்சியம். மார்க்சியம் கூறுவது சரியே
என்று அறிவியல் கோடிக்கணக்கான
பரிசோதனைகள் மூலமாக நிரூபித்து உள்ளது.

உ) உலகில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் பல்வேறு
அறிவியல் பரிசோதனைகள் பொருள்முதல்வாதமே
சரியானது என்ற முடிவையே உணர்த்துகின்றன.
எந்த ஒரு பரிசோதனையாவது கருத்துமுதவாதம்
சரியானது என்று எப்போதாவது உணர்த்தியது
உண்டா? இல்லை.

ஊ) எனவே சரி தவறு என்னும் இரண்டில்,
ஒன்றுக்கொன்று தீவிரமாக முரண்பட்ட
இரண்டில், இரண்டையும் எப்படி ஒருசேர
வைத்துக் கொள்ள முடியும்? இரண்டின்
விதிகளாலும் உலகம் எப்படி இயங்கும்?

எ)  உணவு நஞ்சு என்னும் முரண்பட்ட இரண்டில்
இரண்டையும் ஒருவன் உண்ண வேண்டுமா?
அப்படி அறிவுரை கூறுவது முட்டாள்தனம்
அல்லவா?

ஏ) இயல்பிலேயே ஒன்றுக்கொன்று வடதுருவம்
தென்துருவம் போன்று எதிர் எதிரான இரண்டு
விஷயங்கள் எவ்வாறு சமாதான சகவாழ்வு
வாழ முடியும்? ஒன்று அழிந்து இன்னொன்று
வாழ்வது என்பதுதானே நியாயம்? அல்லது
அப்படி நடப்பதுதானே சாத்தியமானது!

ஐ) கணித மொழியில் கூறுவதானால்,
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்
mutually exclusive நிகழ்ச்சிகள். அதாவது பரஸ்பரம்
ஒன்றையொன்று விலக்கும் நிகழ்வுகள்.ஒன்று
நிகழ்ந்தால் இன்னொன்று நிகழ முடியாது
என்று பொருள்.

ஒ) mutually exclusive அல்லது பரஸ்பரம் விலக்கிக்
கொள்ளுதல் என்றால் என்ன?
பூவா தலையா போட்டுப் பார்க்க ஒரு நாணயத்தைச்
சுண்டுகிறோம். தலை விழுந்தால் பூ விழாது.
பூ விழுந்தால் தலை விழாது; விழ முடியாது.

ஓ) இவ்விரு நிகழ்வுகளும் (பூ விழுதல் அல்லது
தலை விழுதல்) mutually exclusive எனப்படும். அதாவது
ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழ முடியாது
என்ற நிலையில் உள்ள நிகழ்வுகள் mutually exclusive
என்று அழைக்கப்படும். அதாவது பரஸ்பரம்
விலக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் ஆகும். ஒன்று
மற்றொன்றை விலக்கி விடும் என்று புரிந்து
கொள்ள வேண்டும்.

ஒள) இதன் பொருள் என்ன? பொருள்முதல்வாதத்தை
ஏற்றுக் கொண்டால், கருத்துமுதல்வாதத்தைக்
கைவிட வேண்டும். அதுபோல கருத்துமுதல்வாதத்தை
ஏற்றுக் கொண்டால் பொருள்முதல்வாதத்தைக்
கைகழுவ வேண்டும் என்பதுதான். ஞானி கூறுவது
போல, இரண்டையும் வைத்துக் கொண்டு
மனித குலம் வாழ முடியாது. இது இரண்டு
பொண்டாட்டியோடு வாழ்வது போன்ற விஷயமல்ல.

4) பிரபஞ்சம் பற்றிய பார்வை! ஞானிக்கு எமது மறுப்பு!
--------------------------------------------------------------------------------------------
அ) பிரபஞ்சம் பரந்து விரிந்தது; ஆழ அகலமானது.
எனவே பிரபஞ்சம் பற்றிய உலகப்பார்வை
(world outlook) பன்மைத்துவத்துக்கு இடமளிப்பதாக
இருக்க வேண்டும் என்கிறார் ஞானி.

ஆ) பிரபஞ்சம் பிரம்மாண்டமானதுதான். இதில்
மறுபேச்சுக்கே இடமில்லை. ஆனால் எதனுடைய
விதிகளுக்குக் கட்டுப்பட்டு பிரபஞ்சம் இயங்குகிறது
என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு ஆயிரம்
பதில்கள் இருக்க முடியாது. ஒரே ஒரு பதில்தான்
இருக்க முடியும்.

இ) பொருளின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான்
பிரபஞ்சம், மனித சமூகம் அனைத்தும்
இயங்குகின்றன என்பதுதான் சரியான
ஒரே விடை. இது அறிவியலால் நிரூபிக்கப்
பட்டுள்ளது. இதுதான் மார்க்சியத்தின் 
உலகப் பார்வை (world outlook).
(மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்ற
எனது நூலில் பொருளின் விதிகளால் மட்டுமே
பிரபஞ்சம் இயங்குகிறது என்ற உண்மை
அறிவியல் வழியில் நிரூபிக்கப் பட்டிருக்கும்).

ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள், ஒன்றுக்கொன்று
முரண்பட்ட பார்வைகள்  இவற்றால் என்ன பயன்
விளையும்?

உ) நமது சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள்
உள்ளன. இவை சூரியனைச் சுற்றி வருவது
குறித்த விதிகளை ஜெர்மன் விஞ்ஞானி
ஜோஹன்னஸ் கெப்ளர் வகுத்தளித்தார்.  
(Kepler's laws of planetary motion). இது பள்ளிப்
பாடங்களில் சொல்லித் தரப் படுகிறது.
எட்டு வெவ்வேறான கோள்களாக இருந்தாலும்
அவை சூரியனைச் சுற்றி வருவது கெப்ளர்
வகுத்தளித்த விதிகளின்படிதான். எட்டுக்
கோள்களும் ஆளுக்கு ஒரு விதிப்படி சூரியனைச்
சுற்றி வருவதில்லை. எனவே ஞானி கூறுவது போல,
பிரபஞ்சப் பார்வை என்பது கணக்கற்ற
பார்வைகளைக் கொண்டிருக்க வேண்டும்
என்பது ஏற்புடையது அல்ல.

ஊ)  கருத்துமுதல்வாதம் பற்றிய ஞானியின்
கருத்துக்கள் தவறானவை என்று அறிவியல்
நிரூபித்துள்ளது என்பதை இதுவரை பார்த்தோம்.
அடுத்த கட்டுரையில் மதம் கடவுள் பற்றிய
ஞானியின் கருத்துக்களைப் பரிசீலிப்போம்.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இது ஞானிக்கு நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பதில். இந்த பதில் புரியவில்லை
என்றாலோ அல்லது திருப்தி அளிக்கவில்லை
என்றாலோ, இதைவிடச் சிறந்த பதிலை
குட்டி முதலாளித்துவம் ஞானிக்கு அளிக்கட்டும்.
அவ்வாறு செய்யாமல் வாயில் கொழுக்கட்டை
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
******************************************************** 

        

  
    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக