வெள்ளி, 22 ஜூன், 2018

ஞானிக்கு மறுப்பு கட்டுரையின் 2ஆம் பகுதி!
வாசகர் கருத்துக்களின் மீதான விளக்கம்!
ஞானி யார்? ஞானி பற்றிய மதிப்பீடு!
லுத்விக் பயர்பாக்கும் எங்கல்சும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
ஞானி மார்க்சிய அறிஞரா?
-------------------------------------------------
ஞானி மார்க்சிய அறிஞரா என்ற கேள்விக்கு
முதலில் பதில் சொல்லி விடலாம். ஆம், ஞானி
மார்க்சிய அறிஞர்தான். அதிலென்ன ஐயம்?

கம்யூனிஸ்டுகளை புரட்சி செய்யுமாறுதான்
மார்க்சிய மூல ஆசான்கள் கட்டளை இட்டார்களே
தவிர, பல்கலைக் கழகங்களை நடத்தச்
சொல்லவில்லை. எனவே உலகெங்கிலும் உள்ள
கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்கும் கட்சி
அணிகளுக்கும் மார்க்சியக் கல்வி போதித்தனவே
அன்றி, அவரவரின் மார்க்சிய அறிவு சார்ந்து
பிஹெச்டி பட்டமோ அறிஞர் பட்டமோ வழங்கவில்லை.

கணிதத்தில் பிஹெச்டி (PhD) பட்டம் பெற்ற ஒருவரை
கணித அறிஞர் என ஏற்பதில் யாருக்கும் எந்தத்
தயக்கமும் இல்லை. ஆனால் ஒருவரை மார்க்சிய
அறிஞர் என ஏற்பதில் சிலருக்கு  ஒவ்வாமை
ஏற்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம்
முதலாளித்துவச் சமூகம் நிறுவியுள்ள வரையறுப்புச்
சட்டகத்தை விட்டு வெளியேற மறுப்பதே.

விசாலமாகவும் ஆழமாகவும் மார்க்சியத்தைக்
கற்றுப் புரிந்து கொண்டவர்கள், தங்களின்
அறிவுத்துறைப்  பங்களிப்பின் வாயிலாக
சமூகத்தால் மார்க்சிய அறிஞர்கள் என்று ஏற்கப்
படுகிறார்கள். ஞானியும் எஸ் என் நாகராஜனும்
ஐயத்துக்கு இடமின்றி மார்க்சிய அறிஞர்களே.

கோட்பாட்டாளர்களும் உரையாசிரியர்களும்!
------------------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் கட்சிகளில் கோட்பாட்டாளர்கள்
(Theoreticians) என்று ஒரு வகையினம் உண்டு.
உதாரணமாக பினராயி விஜயன் ஒரு
கோட்பாட்டாளர் அல்ல. ஆனால் ஈ எம் எஸ்
அவர்கள் ஒரு கோட்பாட்டாளர். ஜோதிபாசு
ஒரு கோட்பாட்டாளர் அல்ல; ஆனால் சுந்தரையா
ஒரு கோட்பாட்டாளர். இவை புரிந்து கொள்ளச்
சொல்லப்பட்ட உதாரணங்களே.

ஞானியும் எஸ் என் நாகராஜனும் மார்க்சியக்
கோட்பாட்டாளர்கள் (Marxist Theoreticians) ஆவர்.
அவர்கள் சுயசிந்தனை உடையவர்கள். தாங்கள்
மார்க்சியம் என்று கருதியதை கோட்பாடாக
வடித்தெடுத்து சமூகத்துக்குச் சொன்னவர்கள்
அவர்கள்.  இவ்விருவரில் ஞானியை விட,
நாகராஜனே தீவிரமான கோட்பாட்டாளர்
(strong theoretician)

மார்க்சியத்தின் பல்வேறு துறைகள் சார்ந்து
நாகராஜன் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி
உள்ளார். மார்க்சியப் பொருளியல், அரசியல்,
கலை, அறிவியல், பண்பாடு, ஆயுதப் போராட்டம்.
தேசிய இனப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு
பொருட்களில் தமது கோட்பாடுகளை நாகராஜன்
தீவிரமாக முன்வைத்துள்ளார். சுருங்கக் கூறின்,
அடித்தளம் மேல்கட்டுமானம் என்ற இரண்டில்
இரண்டையும் பற்றித் தேவையான அளவு
எழுதியவர் நாகராஜன்.

மார்க்சியத்தை மேலை மார்க்சியம், கீழை
மார்க்சியம் என்று இரு பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கும் நாகராஜன், மேலை மார்க்சியம்
மனித நேயமற்றது, அறமற்றது என்று கடுமையாகச்
சாடுகிறார். மார்க்சை விட மாவோவே கீழை
நாடுகளுக்கு ஏற்ற மார்க்சியவாதி என்கிறார்
நாகராஜன்.

ஞானியைப் பொறுத்த மட்டில், நாகராஜனின்
பல்வேறு கோட்பாடுகளுடன் ஞானிக்கு
உடன்பாடு உண்டு. முரண்பாடும் உண்டு.
பிரதானமாக, மேல்கட்டுமானம் குறித்தே
ஞானி தமது கோட்பாடுகளை முன்வைத்துள்ளார்.
அடித்தளம் குறித்து ஞானி அக்கறையற்றவர்
என்று இதன் மூலம் புரிந்து கொள்ளக் கூடாது.
ஞானியின் பேச்சு, எழுத்து, உரையாடல், நூல்கள்
ஆகியவற்றில், அவர் அதிகமாக கவனம் குவித்தது
மேற்கட்டுமானம் குறித்தே. (His focus is on the superstructure).
குறிப்பாக பண்பாட்டுத் துறை சார்ந்து
செயல்பட்டவராகவே ஞானி அறியப் படுகிறார்.

நாகராஜனும் ஞானியும் கோட்பாட்டாளர்கள்.
அதாவது மூல நூல் ஆசிரியர்கள்.
இதற்கு மாறாக, எஸ் வி ராஜதுரை, அ மார்க்ஸ்,
ரவிக்குமார் போன்றோர் உரையாசிரியர்கள்.

சிலப்பதிகாரம் என்பது மூல நூல். இதை
எழுதிய இளங்கோ அடிகள் மூல நூலாசிரியர்.
அடியார்க்கு நல்லார் என்பவர் உரையாசிரியர்.
இவர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர்.

எஸ்வியார், அ மார்க்ஸ், ரவிக்குமார் போன்றோர்
உரையாசிரியர்கள் போன்று செயல்பட்டவர்கள்.
மார்க்சியத்துக்கு அழிவு நோக்கில் உரை
எழுதியவர்கள். பின்நவீனத்துவம் உள்ளிட்ட
மார்க்சிய எதிர்ப்புக் கோட்பாடுகளைப் பெரும்
வீச்சில்  பரப்பிய பிரச்சாரகர்கள். மார்க்சிய
எதிர்ப்பில் பெரும் செயல்பாடுகளை
முன்னெடுத்தவர்கள். கோட்பாட்டுப் பணிகளை
விட, மார்க்சிய எதிர்ப்பு அரசியலுக்குப் பெரும்
முக்கியத்துவம் கொடுத்தவர்கள்.

நாகராஜன், ஞானி போன்றோர் அ மார்க்ஸ்
வகையறா போல தீவிர அரசியல் செயல்பாடுகள்,
மார்க்சிய எதிர்ப்புச் செயல்பாடுகள் ஆகியவற்றைக்
கொண்டிருக்கவில்லை. ஒரு கோட்பாட்டாளராக
நின்று கொண்டு இருவரும் தங்களின் கோட்பாட்டுப்
பணிகளைத் தளர்வின்றி மேற்கொண்டனர்.

ஆக, மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில்தான்,
நாகராஜன், ஞானி இருவரை ஒரு பிரிவாகவும்
அ மார்க்ஸ் வகையறாவை வேறு பிரிவாகவும்
பகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

பொருள்முதல்வாதம், மதம், கடவுள் பற்றி ஞானி!
--------------------------------------------------------------------------------------
1) 100 சதம் தூய்மையான பொருள்முதல்வாதமோ
100 சதம் தூய்மையான கருத்துமுதல்வாதமோ
கிடையாது என்கிறார் ஞானி. எந்த ஒன்றிலும்
பிறிதின் கலப்பு உண்டு என்கிறார் அவர். சீனத்தில்
உள்ள யிங் யாங் கோட்பாடும் இதையே சொல்கிறது.

2) கருத்துமுதல்வாதத்தை அகற்றி விட்டு
அதனிடத்தில் பொருள்முதல்வாதத்தை
வைக்க வேண்டிய தேவையில்லை என்கிறார் ஞானி.
இரண்டுமே மனிதனுக்குத் தேவை என்கிறார் அவர்.

3) கடவுள் என்பது கற்பனையே என்றாலும் அந்தக்
கற்பனை மனிதனுக்குத் தேவையே என்கிறார் ஞானி.

4)மதமும் மனித குலத்துக்குத் தேவையே என்று கூறும்
ஞானி மதம் இரண்டு பகுதிகளாக உள்ளது என்கிறார்.
வெளிப்பகுதியில் மதகுருக்கள், சடங்குகள் போன்ற
ஆதிக்கப் பகுதியும், உட்பகுதியில் கடவுள் தரும்
ஆறுதல், நம்பிக்கை ஆகியவை உள்ளன என்றும்
கூறுகிறார். இதன் பொருள் வெளிப்பகுதியை
எதிர்க்கலாம்; ஆனால்  மதத்தின் உட்பகுதியை
எதிர்க்கத் தேவையில்லை என்கிறார்.

5) தமிழ்ச் சமூகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு,
விழுமியங்கள் உள்ளிட்ட ஆயிரம் பொக்கிஷங்கள்
மதம் சார்ந்து உருவானவை. அவற்றை நிராகரிக்க
இயலாது என்கிறார் ஞானி.

6) மேற்கூறிய ஐந்து அம்சங்களிலும் நாகராஜன்
ஞானி இருவருக்கும் கருத்தொற்றுமை உண்டு.

விவாதத்தைத் தொடங்கலாம்!
-----------------------------------------------------
மேற்கூறிய ஐந்து அம்சங்களும்  விவாதத்துக்கு
ஏற்றவை. விவாதிக்கப் படுவதற்கான அருகதை
உள்ளவை. எனவே polemical debates தொடங்கலாம்.

மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்
என்று தொடங்கும்  பிரசித்தி பெற்ற மார்க்சின்
கூற்றைத் தமக்குச் சாதகமாக முன்வைக்கிறார் ஞானி.

 எங்கல்ஸ் இளம் வயதில் ஒரு சுவிசேஷ ஆராதனை
செய்யும் குழந்தையாகவே (Engels was an evangelical child)
இருந்தார் என்பதும் பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை
அவர் பைபிள் வாசகம் ஒப்பிக்கும் போட்டியில்
பங்கேற்று முதலிடம் பெற்றவர் என்பதும் ஞானிக்குத்
தெரியும். எங்கல்சைப் படித்தவர்களுக்கும் தெரியும்.

மார்க்ஸ் எங்கல்ஸ்  இருவரும் தங்கள் ஆசான்
பேராசிரியர் லுத்விக் பாயர்பாக் எழுதிய
கிறிஸ்துவத்தின் சாரம் (The essence of christianity) என்ற
நூலால் பெரிதும் கவரப்பட்டனர். இந்த நூல் தரும்
விடுதலை உணர்வை அனுபவித்தால் மட்டுமே
அறிய முடியும் என்கிறார் எங்கல்ஸ். மதம்
குறித்த மார்க்ஸ் எங்கல்சின் பார்வைக்கும்
லெனின் ஸ்டாலின் பார்வைக்கும்  வேறுபாடு
உண்டு என்கிறார் ஞானி. உண்டுதான்.
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) இது மார்க்சியத் தத்துவார்த்த விவாதம். சட்டமன்ற
திமுக அண்ணா திமுக விவாதம் அல்ல. எனவே
காத்திரமான கருத்துக்களுடன் விவாதிப்பது
மட்டுமே மார்க்சியம் ஆகும். பிற ஆகுல நீர.

2) ஞானி எழுதிய மார்க்சியம் அழிவதில்லை
என்ற நூலையும், நாகராஜன் எழுதிய Eastern Marxism
என்ற நூலையும்  படித்திருக்கும் வாசகர்கள்
அவற்றின் கருத்துக்களையும் இங்கு மறுத்து
உரைக்கலாம்.

3) முன்னுரையின் தொடர்ச்சி இத்துடன் முடிகிறது.
*************************************************************** 






  
    


          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக